ராங்கால்! மலையைக் காணோம்! அமைச்சரின் சீரியஸ் காமெடி! விஜய்யை அடுத்து தனுஷ்! பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்..?
"ஹ லோ தலைவரே, சட்டமன்றத்தில் அவைக் குறிப்பிலிருந்து நீக்கும் வார்த்தைகள் அதிகரித்தபடியே செல்வதால் சபாநாயகர் வருத்தமடைந்திருக்கிறார்.''” "அதுதான் நேரலையிலே தமிழக மக்கள்தான் நேரடியாவே பார்க்கிறாங்களே. அவர் வருத்தமடையாம இருந்தாத்தான் ஆச்சர்யம்.''” "பொதுவாக, அவைக்கு உகந்ததாக இல்லாத வார்த்தைகளை எதிர்க்கட்சிகள்தான் உச்சரிக்கும். அதனை சபாநாயகர் நீக்குவார். ஆனால், த.வெ.க. அரசில் சபாநாயகர் நீக்கும் வார்த்தைகளை அதிகம் உச்சரிப்பது அமைச்சர்களாக இருக்கிறார்கள். அதேபோல, அமைச்சர்களை சபாநாயகர் கடினமாக கண்டிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. எதிர்க்கட்சிகளை சமாளிப்பதைவிட ஆளும்கட்சியினரை சமாளிப்பதுதான் சபாநாயகருக்கு சவாலாக இருக்கிறது. அந்தவகையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் மீது வருத்தமடைந்துள்ளார். அண்மையில் சபை முடிந்ததும், முதல்வர் விஜய்யை சந்தித்த சபாநாயகர், அவரிடம் மனம்விட்டு பேசியுள்ளார். அப்போது, "பேரவையின் மாண்பை கட்டிக்காப்பதில் ஆளும் கட்சிக்குத்தான் மிகுந்த பொறுப்புடைமை இருக்கிறது. அமைச்சர்கள் பல முறை எல்லைமீறிச் செல்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்தி வையுங்கள். சப்ஜெக்ட் மீது பேசும்போது அந்த சப்ஜெக்டுக்கு தொடர்புடைய முந்தைய ஆட்சியில் நடந்த தவறுகளை அழுத்தமாகச் சுட்டிக் காட்டலாம். அதற்கு மாறாக, தொடர்பில்லாமல் தேவையற்ற வார்த்தைகளை அமைச்சர்கள் வீசுவது, அதுவும் நீங்கள் பேரவையில் இருக்கும்போதே அவர்கள் அப்படிப் பேசுவது ஆரோக்கியமாக இருக்காது' என்று சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். இதனை முதல்வர் கேட்டுகொண்டு சமாதானப்படுத்தியிருக்கிறார். அமைச்சர்களை விஜய் கட்டுப்படுத்து வாரா? இல்லையா? என்பது வரும் கூட்டங்களில்தான் தெரியும்.''” தனுஷ் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்..? "தனுஷ் ரசிகர் மன்றங்களை இணைத்து புதிய கட்சி, கொடி அறிமுகம்னு வேகம் காட்டுவதற்குப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருக்குன்னு பேச்சு அடிபடுதே?''” "மாவட்டம்தோறும் தனது பெயரிலான நற்பணி மன்றத்தைக் கட்டமைத்து வருகின்றது நடிகர் தனுஷ் தலைமையிலான டீம். இந்த நிலையில் பொதுமேடை ஒன்றில் "ஓம் நமசிவாய, எண்ணம் போல் வாழ்க்கை' என தனுஷ் பேசியது ஆர்.எஸ். எஸ்.ஸுக்கு பிடித்துப்போக ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலுள்ள பிரசோபகுமார் என்பவர் போயஸ்கார்டன் சென்று தனுஷை சந்தித்திருக் கிறார். நடிகர் ஒருவரைத் தேடி ஆர்.எஸ்.எஸ். சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய அலை களை உருவாக்கியுள்ளது. சந்திப்பில், "வருகின்ற உள்ளாட்சித் தேர்தலின்பொழுது பா.ஜ.க.வுக்கு நேரடியாக ஆதரவு அளிக்கவேண்டும்'’எனக் கேட்டிருக்கிறார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.'' கெட் அவுட் "விஜய்யோட ஆஸ்தான ஜோதிடரான ராதன் பண்டிட் தலைமைச் செயலகம் பக்கம் வரவே தடைன்னு பேச்சு அடிபடுதே''” "பல முக்கிய அரசியல் தலைவர்களுக்கு ஜோதிட ஆலோசனைகளை வழங்கிய அரசியல் வட்டாரத்தில் அறிமுகமான ரிக்கி ராதன்பண்டிட், பின்பு விஜய்யிடம் நெருக்கமானார். விஜய் முதல்வ ரானதும், முதலமைச்சர் விஜய்யின் தனி ஆலோ சகராகவும் நியமிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களையடுத்து நேரடிப் பொறுப்பிலிருந்து ராதன் பண்டிட் விடுவிக்கப்பட்டார். ஆனால் முழுமையாக வெளி யேற்றப்படாமல், இந்து சமய அறநிலையத்துறை யின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். நியமனத்துக்குப் பின் முக்கிய கோவில் விவகாரங் களில் அவர் தேவையின்றி தலையிடத் தொடங் கினாராம். நிர்வாக நடைமுறையில் விஜய்யின் பெயரை அடிக்கடி பயன்படுத்தி அதிகாரத்தைச் செலுத்த முயன்றாராம். இதனால் துறையின் மூத்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து, முறையான புகார்களைத் தலைமைச் செயலகத்தின் உயர்மட்டத்திற்கு அனுப்பினர். இதனால் இந்து சமய அறநிலையத்துறையில் அவர் வகித்துவந்த ‘சிறப்பு அதிகாரி பதவி ரத்து செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல், தலைமைச் செயலக வளாகம் மற்றும் முக்கிய அரசுத்துறை அலுவலகங்களுக்குள் அவர் இனி நுழையவே கூடாது எனப் பாதுகாப்புப் பிரிவினருக்கு திட்டவட்டமாக உத்தரவிடப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.''” டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் "பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் வருகின்ற ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபடவுள்ளதா தகவல் அடிபடுதே?''” "நிஜம்தான் தலை வரே, இதனால் இந்தத் துறை அமைச்சரான விக்னேஷ், டாஸ்மாக் தொழிற்சங்கப் பிரதிநிதி களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். ஆகஸ்ட் 31-ஆம் தேதி சட்டப்பேரவையில் துறை சார்ந்த மானியக் கோரிக்கை எடுத்துக்கொள் ளப்பட உள்ளதால், அதுவரை போராட்டத்தைத் தள்ளிவைக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு தொழிற்சங்கங் கள் மறுப்புத் தெரிவித்துள்ளன. 23 ஆண்டுகளாக நிலுவையிலுள்ள கோரிக்கைகளுக்குப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே உடனடியாகத் தீர்வு காணவேண்டும் எனக் கூறின. 23,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்கும் இப் போராட்டத்தில் 33 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன 11-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், ஆகஸ்ட் 28 முதல் மாநிலம் முழுவதுமுள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு மதுபான விற்பனை முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.''” மலையைக் காணோம்! "தமிழக சட்ட மன்றத்துல இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளத் துறை அமைச்சர் பிரபுவோட உரை பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கே?''” "ஆமாம் தலைவரே, சட்ட மன்றத்துல பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய இயற்கை வளங்கள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் பிரபு, பல்வேறு மாவட்டங்களில் காணாமல் போன மலைகள் குறித்து புகைப்பட ஆதாரங்களுடன் பேசி பலரை யும் ஆச்சரியப்படுத்தினார். வடிவேலு ஒரு படத் தில் கிணறு காணாமல்போனதாகச் சொல்வது போல், எம்.சாண்டுக்காக சிறு மலைகள், குன்றுகள் என சுரண்டப்பட்டு காணாமல்போன மலைகளைக் குறித்துப் பேசி அமைச்சர் கவனம் ஈர்த்தார். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள எலும்பலூர் கிரா மத்திலுள்ள 75 மீ. பிரம்பரசி மலை, செங்குணம் கிராமத்தில் 25 மீ. உயரமுள்ள செங்குணம் மலை, மதுரை மாவட்டம் கீழவளவு கிராமத்தில் 50 மீ. உயரமான சக்கரைப் பிரமலை, 35 மீ. உயரமுள்ள குண்டம்பட்டி கிராம குன்று, தென்காசி மாவட்டம் அரியநாயகி கிராமத்தில் 50 மீ. உயரமுள்ள கோணமலை என இந்த மலைகளின் முந்தைய புகைப்படம், எம்.சாண்டுக் காக வெட்டியெடுக்கப்பட்ட பின்பான தற்போதைய புகைப்படத்தையும் காட்டிப் பேசியதுடன், அதனால் இனி அளவோடு ஆற்றுமணலை வெட்டியெடுத்து விநியோகம் செய்ய அரசு திட்டமிட்டு வருவதாகப் பேசினார். ஆனால் இதே ஆற்று மணல் அளவின்றி சுரண்டப்பட்ட தால்தான் எம்.சாண்ட் பக்கம் கவ னம் திரும்பியது. திரும்பவும் ஆற்று மணல் பக்கம் போனால், மணல் மாஃபியா பிரச்சனை திரும்பவராதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.''” கட்டுப்படுத்தப்படுமா சாதி சங்கங்கள்? "பசும்பொன்னில் நடந்த சாதி சங்க மாநாட்டில், சாதி தாண்டி காதலிக்கும் பிள்ளைகளை வெட்டும் பெற்றோருக்கு சங்கம் பாதுகாப்பாக வரும்னு பேசப் பட்டது சர்ச்சையாயிருக்கே?''” "ஆமாம் தலைவரே, குறிப்பிட்ட சமூகத் தினைச் சேர்ந்த தூரி முனியசாமி என்பவர், ‘"அவ ரவர் பிள்ளைக்கு தாய், தகப்பன்தான் மாப்பிள்ளை பார்க்கணும். அதற்கு மிஞ்சிப் போனால் வெட்டி எறி. அதனால எது வந்தாலும் சந்திப்போம்' என பசும்பொன்னில் நடந்த டி.என்.டி. மாநாட்டில் பேசினார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாக, ‘"நாம் பார்க்கிற மாப்பிள்ளையைத் திருமணம் செய்யாத பெண் பிள்ளைகளை பெற்றோர்களே கொலைசெய்யுங்கள். நாங்க இருக்கிறோம்! சாதிச் சங்கம் இருக்கும்’என்றிருக்கிறார். ஒட்டுமொத்த பெண் இனத்திற்கு தன் இணையை தேர்ந் தெடுக்கும் உரிமை இல்லை என்றும் கொலை செய்வோம் என்றும் மிரட்டும் இவரை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாமல் போவது ஆபத்தானது. சட்டப்படி இப்படிப் பேசியவர் மீதும் அவர் சார்ந்த சாதி சங்கம் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என போர்க்கொடி தூக்கி கோவை எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துள்ளன வெகுஜன அமைப்புகள்.'' திரிசங்கு தினகரன்? "சசிகலா பக்கமும் எடப்பாடி பார்வையைத் திருப்பு வதால், என்ன செய்வதென தினகரன் அசந்து போயிருக்கா ராமே?''” "உங்க கவனத்துக்கு வந்துடுச்சா? சமீபத்தில் அ.ம.மு.க. எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க புகாரளித்திருந்த நிலையில் அது தொடர்பாகவும், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பாகவும் புகார் கொடுக்க தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்தார் அ.ம.மு.க. பொதுச்செய லாளரான டி.டி.வி. தினகரன். தான் பேசும் ஒவ்வொரு இடங்களிலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இணக்கம் காட்டுகிறார். பழனிச்சாமி என்றாலே ஆகாதென்றிருந்த தினகரன், இப்போது தன் ரூட்டை மாற்றிவருகிறார். சில தினங்களுக்கு முன்பு சட்டசபையில் நடை பெற்ற மானிய கோரிக் கையின்போது பேசிய எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் "அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி!' என புன்னகையுடன் திடீர் பாசம் காட்டியதை ஆமோதிக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமியும் சிரித்த முகத்துடனே சட்டசபையில் இருந்தார். உடைந்த அ.தி.மு.க. மீண்டும் இணைவதற்கான சமிக்ஞை என்ற நிலையில், மறுபக்கம் "நீங்கள் அ.தி.மு.க.வுக்கு வந்தால் பலம் அதிகமாகும்' என தனது மகன் மிதுன் மூலம் சசிகலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்கிறார் பழனிச்சாமி. இது தெரிந்த டி.டி.வி. தினகரன், சசிகலா வந்தால் தம்முடைய இமேஜ் டேமேஜாகும் எனக் கருதி எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிப்பது போல் கருத்தினை பகிர்ந்திருக்கின்றார். ஆனாலும் பதிலில்லை அ.தி.மு.க. தரப்பிலிருந்து. இதனால் திரிசங்கு நிலையில் தினகரன் தவித்துவருகிறார்.''” நிர்மல்குமாருக்கு ஸ்கெட்ச்...? "மதுரை சுற்றுவட்டாரத்தில் நிர்மல்குமாரின் கெடுபிடியைத் தாங்க முடியாத எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு எதிரா பிளான் ஒண்ணைப் போட்டுக் கிட்டிருக்கிறதா செய்தி அடிபடுதே?''” "ஆமாம் தலைவரே, எம்.எல்.ஏ.க்களான எஸ்.ஆர்.தங்கப்பாண்டி, கல்லாணை ஆகியோர் "கடந்த 30 வருஷமா இயக்கத்திலிருந்து வேலையை செய்துக்கிட்டிருக்கோம். மதுரையில் இருக்கிற 10 தொகுதிகளில் 5 தொகுதியில் எம்.எல்.ஏ.க்களை வெற்றிபெற வச்சிருக்கோம். நிர்மல்குமார், கட்சி ஆரம்பிச்சு ஆறு மாதத்திற்கு பின்னாடி இணைஞ்சு திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு ஜெயிச்சு அமைச்சராயிருக்காரு. திருப்பரங்குன்றம் தொகுதியைத் தவிர மற்ற எந்த தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் பண்ணினார்? கட்சித் தலைமை கேட்டுக்கொண்டதால நமக்கு கிடைக்கவேண்டிய அமைச்சர் பதவியை லவட்டிக்கிட்டார். ரசிகர் மன்றத்துக்காகவும், கட்சிக்காகவும் எதுவும் செய்யாமல் பல கட்சியிலிருந்து வந்து அமைச்சராகிட்டு நம்மள எப்படி கண்ட்ரோல் பண்ண நினைக்கலாம்? தொடர்ந்து நிர்மல்குமார் அமைச்சர்ங்கிற தோர ணையில் நடந்துக்கிட்டா மதுரை மாநகருக்குள் நடக்கும் எந்த நிகழ்ச்சியிலும் அவரை முன்னிலைப் படுத்தக்கூடாது, அதேபோல அரசு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணிச்சுடுவோம். இல்லைனா அரசு விழாவில் கலந்துகிட்டு எல்லா மேடையிலும் யாரையோ பேசுவதுபோல் அமைச்சர் நிர்மல் குமாரை அவமதிக்கும் வகையில் பேசிட்டு வந்தாதான் சரியா இருக்கும். மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளராக நம்ம சொல்ற ஆளுதான் வரணும், வேற யாரையும் வரவிடக்கூடாது' எனத் தங்களுக்குள் பேசி முடிவுசெய்துள்ளதோடு, பிற த.வெ.க. எம்.எல்.ஏ.க்களையும் தங்கள் பக்கம் இழுக்கிறார்களாம். இந்த ஸ்கெட்சுக்கு பதிலடியா நிர்மல்குமார் என்ன பண்ணப்போறார்ங்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.''” பிரதமர் கனவில் த.வெ.க.! "மலையாள நடிகரான தேவன், கேரளத்தில் த.வெ.க.வைத் தொடங்க ஆர்வம் காட்டியிருக் காராமே?''” "விஜய் தமிழகத்தில் பெற்ற வெற்றியைப் பார்த்த அவர், சமீபத்தில் பா.ஜ.க.விலிருந்து வெளியேறியிருக்கிறார். சூட்டோடு சூடாக த.வெ.க.விடம் பேசியிருக்கிறார். "கடந்த ஆக.,16-ல், விஜய் அலுவலகத்திலிருந்து அழைப்புவந்தது. த.வெ.க. பிரதிநிதிகள் என்னுடன் பேசினர். கேரள த.வெ.க. தலைவர் பதவியை ஏற்குமாறு கேட்டுக் கொண்டனர். விஜய்க்கும் எனக்கும் எண்ணங்கள், மக்கள் மீதான அர்ப்பணிப்பு ஒன்றாக இருக்கிறது. விஜய்யுடன் ஆறு படங்களில் நடித்துள்ளேன். அவருடன், தனிப்பட்ட முறையில் நல்ல நட்பு உள்ளது. கேரளாவில் காங்., கம்யூனிஸ்டுகள், பா.ஜ., கட்சிகள் மீதான அதிருப்தியால், புதிய மாற்றமாக த.வெ.க.வை இளைஞர்கள் பார்க்கின்றனர். கேரளாவில் த.வெ.க.வுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது'’ என்றிருக்கிறார் கேரள நடிகரான தேவன். இன் னொரு பக்கம், ‘த.வெ.க. வுடன் கூட்டணி அமை யுங்கள். நீங்கள்தான் ஆட்சி யமைப்பீர்கள்’ என டி. ஆர்.எஸ். கட்சித் தலை வர் கே.கவிதாவிடம் பேசியிருக்கிறார் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ராத்தன் பண்டிட். மூகாம் பிகை கோவிலுக்கு விஜய் வருகையின்போது திரண்ட கூட்டத்தைக் காட்டி கர்நாடகாவிலும், ஆந்திரா விலும் ஜோதிடர் ராத்தன் பண்டிட் துணையுடன் பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது "த.வெ.க. ஆட்சியமைக்க மொத்தம் 274 சீட்கள் வேண்டும். தென்மாநிலங்களில் 70 எம்.பி. சீட்களை கைப்பற்றினாலே நாம் அடுத்த பிரதமர்' என விஜய்யிடம் நம்பிக்கையை விதைத்து வருகிறார்களாம். ஆனா ஜோசப் விஜய் கையில எம்.பி. ஒருத்தரும் இல்லை.''” அமல்ராஜ் மீது ஆத்திரம்! "பல போலீஸ் அதிகாரிகள் சிட்டி கமிஷனர் அமல்ராஜ் மீது ஆத்திரத்தில் இருக்கிறார் களாமே?''” "ஒரு போலீஸ் அதிகாரிக்கு ஒரு டிரைவர்தான். மூன்று டிரைவர்கள் வைத்துக் கொள்ளக் கூடாது. அதுபோல் ரிட்டையர்டு அதிகாரிகளிடமுள்ள டிரைவர்களையும் திரும்ப ஆயுதப்படைக்கு ஒப்படைக்கவேண்டும் என ஸ்ட்ரிக்டாக உத்தரவு போட்டார் சென்னை சிட்டி கமிஷனரான அமல்ராஜ். உத்தரவு மட்டுமில்லாமல் நுண்ணறிவுப் போலீஸ் துணைகொண்டு யார் யாரிடம் அதிகப்படியான டிரைவர்கள் இருக்கிறார்கள் என கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். இதில் அதிகப்படியான டிரைவர்களின் எண்ணிக்கை மட்டும் 200-க்கும் அதிகமாக உள்ளது எனத் தெரியவர, ‘உங்களுக்கு ஒரு டிரைவர் தான். மீதமுள்ள டிரைவர் களை ஆயுதப்படையிடம் ஒப்படையுங்கள்’ என ஓலை அனுப்பப்பட்டுள்ளதால் சிட்டி கமிஷனர் அமல்ராஜ் மீது கடுங்கோபத்தில் இருக்கின்றனர் அதிகாரிகளும், ரிட்டையர்டு அதி காரிகளும்.''” ஆட்கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ்.? "ஆட்கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சம்பந்தப்பட்டிருக்கிறதா பேச்சு அடிபடுதே என்ன விவகாரம்?''” "தமிழக அரசின் முக்கியத் துறையின் செயலாளராகப் பணியாற்றிவருகிறார் வீரமான ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர். முந்தைய காலங்களில் மதுரை மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றியவர். தனது துறையின் கீழுள்ள ஒரு டீலை வெகுசுலபமாக முடித்த வகையில் ரூ.10 கோடி கிடைத்திருக்கிறது அவருக்கு. ரொக்கப் பணமாக கிடைத்த அந்த பணத்தை தன்னிடம் பணியாற்றிய உறவுக்கார நபரிடம் கொடுத்து ஆந்திராவிற்கு ரயிலேற்றி வைத்திருக்கிறார் அவர். அந்த உறவுக்காரர் பணத்துடன் அப்படியே எஸ்கேப்பாக அவரைத் தேடியலைந்திருக்கிறார். போலீஸிடம் உதவி கேட்க, முறைப்படி புகார் கொடுங்க என்றிருக்கிறது. புகார் கொடுத்தால் நம்முடைய வண்டவாளங்கள் வெளியில் வந்துவிடும் என்பதால் சென்னை துறைமுக ரவுடியை அணுகியிருக்கிறார் ஐ.ஏ.எஸ். டீல் பேசி உறவுக்காரரை தூக்கியிருக்கிறது அந்த ரவுடி டீம். பணம் மீட்கப்படவில்லை. இந்த நிலையில் தன்னுடைய கணவரை ஆட்களை வைத்துக் கடத்தியுள்ளார் அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி என உறவுக்காரரின் மனைவி ஆந்திரப் போலீஸை நாட, ஆட்கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ்.ஸை சேர்த்துள்ளது அங்குள்ள போலீஸ்.''” தொடரும் போராட்டம்! "கடந்த ஆட்சியில் தொடங்கிய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம், இந்த ஆட்சியிலும் தொடருதே?''” "நிஜம்தான் தலைவரே, பணி நிரந்தரம், சம்பள உயர்வு, பணிக்கான உபகரணங்கள், வார விடுமுறை, மகப்பேறு விடுமுறை, தூய்மைப் பணியாளர் சங்கத்திற்கு ரிப்பன் மாளிகையில் இடம் என்று பல கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர்ந்து போராடிவருகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் ஆதரவுகொடுத்த முதல்வர் விஜய், தற்போது த.வெ.க. ஆட்சி அமைந்தபிறகும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி 7-வது நாளாக போராடிவரும் இவர்களைக் குறித்து, சட்டமன்றத்தில் கேள்வியெழுப்பட்ட நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகஸ்ட் 25-ஆம் தேதி பேச்சு வார்த்தை நடத்தினார். அவர்களிடம் பேசிய விவ ரங்களை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சேர்த்து தீர்வு காணப்படுமென தெரிவித்துள்ளார். தூய்மைப் பணியாளர்கள் டீமோ, "முதல்வர் எங்களைச் சந்திக்கவேண்டுமெனத்தானே கேட்கிறோம். அவர் எங்களுக்கான முதல்வர்தானே, ஏன் எங்களை சந்திக்கமாட்டாரா?' என கேள்வியெழுப்புவதுடன், முதல்வர் சந்திக்கும்வரை போராட்டம் தொடரும் என்கிறார்கள்.''” டெண்டர் மோசடி! "நீர்வளத்துறையில் சிண்டிகேட் அமைத்து டெண்டர் எடுக்கத் திட்டமிட்ட விவகாரம் முதல்வர் காதுக்குப் போயிருக்காமே?''” "தமிழக அரசின் நீர்வளத்துறையின்கீழ் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங் களில் பருவகால முன்னெச்சரிக்கைப் பணிகளுக்காக 42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆன்லைன் டெண்டரும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 28-ஆம் தேதி டெண்டர் திறக்கப்படுகிறது. ஆனால், இதில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்காமல், துறையின் முதன்மை மற்றும் தலைமைப் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், திருவள்ளூர் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், சென்னை செயற்பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து காண்ட்ராக்டர் வெங்கடேஷ் பாபு தலைமையில், சிண்டிகேட் அமைக்கச் சொல்லியிருக்கிறார்கள். அதன்படி அதிகாரிகளும் வெங்கடேஷ்பாபு தலைமையில் சில கான்ட்ராக்டர் களும் கூட்டணியமைத்து இந்த 42 கோடியை தங்களின் பினாமி நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர். இப்படி மேற்கண்ட அதிகாரிகளும், காண்ட்ராக்டர்களும் டெண்டரில் கூட்டணி அமைப்பது பற்றி துறையின் அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் நேர்மையான காண்ட்ராக்டர்கள் புலம்ப இதனை, முதல்வர் விஜய்யின் கவனத் துக்கு கொண்டுசென்றுள்ள புஸ்ஸி ஆனந்த், டெண்டரை ரத்து செய்யவேண் டும் என வலியுறுத்தியுள்ளாராம்.” "சரி நானும் ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்க. ஆகஸ்ட் 25-ஆம் தேதி பீகாரில், அம்மாநில தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் நடந்த முறைகேடுகள், ஆசிரியர் நியமனத் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகளைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதில் ஆறு வயது மாணவ னான ஆதித்யா கலந்துகொண்டு பிரபலமாகி யிருக்கிறான். பாட்னா குடிசைப் பகுதியைச் சேர்ந்த, கூலிவேலை பார்க்கும் தாயின் மகன்தான் ஆதித்யா. ஒன்றாம் வகுப்பு படிக்கும் அவன் கையில் தேசியக் கொடியுடன், போராட்டக்காரர்களிடையே நின்று அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது. தண்ணீர் பீரங்கி, தடியடி போன்றவற்றைப் போராட்டக்காரர்கள் மீது பயன்படுத்தியது போலீஸ். இந்நிலையில் அதற்குமுன்பாக, ஆதித்யாவையும் அவனது தாயையும் கைதுசெய்து அங்கிருந்து அகற்றினர். இந்நிலையில் சிறிது நேரத்துக்குப் பின் விடுவிக்கப்பட்ட ஆதித்யாவை செய்தியாளர்கள் சந்தித்தபோது, "மாணவர்களுக்கு ஏன் வேலை கிடைக்கவில்லை? வேலை தருவதாக அளித்த வாக்குறுதிகள் எங்கே போயின?'’என்று பீகார் முதல்வர் சாம்ராட் சௌத்ரியை நோக்கிக் கேள்வியெழுப்பினான். "முதல்வர் பதவி விலகவேண்டும்; மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்?'’என்றும் செய்தியாளர்களிடம் பேச, தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கிறான். இன்னும் சில செய்தியாளர்களோ, "ஆறுவயது சிறுவன் செய்தியாளர்களை தைரியமாகச் சந்திக்கிறான். தேசப் பிரதமர் பத்திரிகை யாளர்களை கண்டு விலகியோடுகிறார்' என சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரதமரையும் விமர்சிக் கிறார்கள்.''

சட்டமன்றத்தில் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சபாநாயகரை வருத்தமடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் வார்த்தைகளை சபாநாயகர் நீக்குவது வழக்கம் என்றாலும், தற்போது அமைச்சர்களே சர்ச்சைக்குரிய வார்த்தைகளை அதிகமாகப் பேசுவது விவாதமாகியுள்ளது.
சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் மக்கள் நேரடியாகக் கவனித்து வரும் சூழலில், அமைச்சர்களின் இத்தகைய செயல்பாடுகளை சபாநாயகர் கண்டித்து வருவது குறிப்பிடத்தக்கது. தவெக அரசின் அமைச்சர்களின் நடவடிக்கைகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பின்னணி குறித்த அரசியல் விவாதங்கள் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளன.