கங்கனா க்ரித்தி சனோன் சண்டையில் உள்ளே நுழைந்த ராகுல் காந்தி!
ரக்ஷா பந்தன்(ஆக.28) தினத்தை ஒட்டி பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் ஒரு நகைக்கட விளம்பரத்தில் நடித்திருந்தார். அதில் அவர் பிகினி உடை அணிந்திருந்தார். அந்த உடையுடன் தனது சகோதரர்(விளம்பரத்தில் மட்டும்) மற்றும் செல்லப்பிராணி நாய்க்கு அவர் ராக்கி கட்டும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது சர்ச்சையைக் கிளப்பியது. அதாவது க்ரித்தி சனோனின் உடை அநாகரிகமாகவும் ஆபாசமாகவும் இருப்பதாகச் சிலர் விமர்சித்தனர். அதே வேளையில் அது க்ரித்தி சனோனின் விருப்பம் எனவும் சிலர் கருத்து கூறி வந்தனர். இந்த விவகாரத்தில் நடிகையும் பாஜக எம்.பி-யுமான கங்கனா ரனாவத் க்ரித்தி சனோனின் பெயரைக் குறிப்பிடாமல் அவரது உடையை விமர்சித்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “பெண்களுக்கு தற்போது இருப்பது அற்புதமான காலம், நம் அலமாரிகள் விதவிதமான ஆடைகளால் நிரம்பியுள்ளன. இன்றைய பெண் ஒரு உலகளாவிய அந்தஸ்தாக இருக்கிறாள். காக்டெய்ல் உடைகள் முதல் லெஹங்கா சோலி வரை, ஜீன்ஸ் முதல் புடவை வரை, பிகினி முதல் சல்வார் கமீஸ் வரை எனப் பல தேர்வுகள் நமக்கு இருக்கிறது. அப்படியிருக்க, பிகினி அல்லது உள்ளாடைகளை மட்டும் அணிந்துகொண்டு ஏன் உங்கள் சகோதரனுக்கு ராக்கி கட்ட வேண்டும்? உங்கள் மற்ற ஸ்டைலான ஆடைத் தேர்வுகள் எல்லாம் எங்கே போயின? ஹா ஹா, அந்த விளம்பரம் வேண்டுமென்றே ஒருவிதமான சங்கடமான அல்லது விசித்திரமான உணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார். இது பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்த இதற்கு க்ரித்தி சனோன் கங்கனா ரனாவத் பெயரைக் குறிப்பிடாமல் பதிலளித்தார். அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “கொண்டாட்டத்தின் சாராம்சம் நாம் அணியும் ஆடைகளில் இல்லை, மாறாக, அந்த மரபுகளின் மீது நாம் கொண்டிருக்கும் உணர்வுகளிலும் அர்த்தத்திலும்தான் இருக்கிறது. ரக்ஷா பந்தன் என்பது பாதுகாப்பின் ஒரு பிணைப்பு. நானும் என் சகோதரியும் ஒருவருக்கொருவர் 'ராக்கி' கட்டிக்கொள்கிறோம். ஒரு சகோதரன் செய்யும் அதே பாதுகாப்பை நாங்களும் ஒருவருக்கொருவர் வழங்க முடியும் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் ஒருவருக்கொருவர் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுடன் இருக்கப் பிரார்த்திக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை, இந்தப் பிரார்த்தனையும் உறுதியும் எங்கள் செல்ல நாய் குட்டிகளுக்கும் பொருந்தும். ஏனென்றால், அவையும் எங்கள் குடும்பத்தில் ஒரு பகுதிதானே. மேலும், பெண்கள் என்ன உடை உடுத்த வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்துவதை நாம் எப்போது நிறுத்தப்போகிறோம்? பாரம்பரிய உடைகள் காலப்போக்கில் வளர்ந்து வந்திருக்கிறது. ஆனாலும், ஒரு பெண்ணின் கலாச்சாரத்தின் மீதான மரியாதை இன்றும் அவளது ஆடைகளை வைத்தே அளவிடப்படுகிறது. கலாச்சாரமும் மரபுகளும் ஒரு பெண்ணின் இதயத்தில்தான் உள்ளதே தவிர, அவளது ஆடையின் வடிவமைப்பிலோ அல்லது தோற்றத்திலோ இல்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். BJP Post இது இப்படி இருக்க கங்கனா ரனாவத் பிஜேபி பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவை தனது ஸ்டோரியில் பகிர்ந்தார். அதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை கேள்வி கேட்கும் வகையில் கருத்துகள் அடங்கியிருந்தது. அதாவது ‘ஆணாதிக்கத்தைத் தகர்ப்போம்’ என ராகுல் காந்தி சொல்ல அதற்கு ‘ப்ரோ வெயிட்... பாரத் மாதா கி ஜே, ஆரம்பிக்கலாம்’ என ஒரு பென் பதிலளிக்கிறார். இது போன்று பெண்கள் தொடர்பான விவகாரங்களில் காங்கிரஸின் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில், தொடர்ச்சியான சித்திரங்கள் மற்றும் உரையாடல்கள் அந்த பதிவில் இடம் பெற்றிருந்தது. இதனிடையே ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் க்ரித்தி சனோனின் பதிவைப் பகிர்ந்து, “ஒரு பெண் என்ன அணிகிறார், என்ன செய்கிறார், எங்கு செல்கிறார் என்பது அவருடைய விருப்பம். சுதந்திரத்தை வெளிப்படுத்துவதற்காகப் பெண்களை ட்ரோல் செய்வதை நிறுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு நடிகை க்ரித்தி சனோன் நடித்த நகைக்கடை விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த விளம்பரத்தில் அவர் பிகினி உடையில் தனது சகோதரருக்கு ராக்கி கட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது, இது ஆபாசமாக இருப்பதாகச் சிலர் விமர்சித்தனர்.
இந்த உடை தேர்வுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியின் பெயர் பேசப்படும் சூழல் உருவாகியுள்ளது. நடிகை கங்கனா ரனாவத் மற்றும் க்ரித்தி சனோன் இடையிலான மோதலில் ராகுல் காந்தியின் தலையீடு குறித்த விவாதம் எழுந்துள்ளது.