PulseNews
சினிமா

இந்தியாவின் அடுத்த பிரதமர் ரேஸ், வேகமாக முன்னேறி வரும் விஜய்: பிரபல நிறுவனம் கருத்துக்கணிப்பில் முக்கிய தகவல்

பல ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் இந்தியாவின் பிரதமராக உருவாக வேண்டும் என்ற எண்ணம், தமிழகத்தில் பெரிய அரசியல் எதிர்பார்ப்பாக இருந்து வரும் நிலையில், கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் தமிழகத்தில் முதல்வர் அரியணையில் ஏறி 3 மாதங்களை நிறைவு செய்துள்ள விஜய், பல தசாப்தங்களாக இந்திய அரசியலில் பயணித்து வரும் தலைவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறார். கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்த விஜய், இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கேள்வியின் அடிப்படையில், சமீபத்திய இந்தியா டுடே (India Today-CVoter Mood of the Nation (MOTN) கருத்துக்கணிப்பில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த கருத்துக்கணிப்பின் முடிவு விஜயின் நிலைப்பாட்டால் மட்டுமல்லாமல், தேசிய அரசியல் கற்பனையில் அவர் இவ்வளவு வேகமாக இடம் பிடித்திருப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) நிறுவனர் விஜய், அடுத்த பிரதமராக வேண்டும் என்ற விருப்பத்தில் 9.2 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி 48.7 சதவீத ஆதரவுடன் முதலிடத்திலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 27.1 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டில் உள்ள த.வெ.க அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து வரும் நிலையில், பிரதமர் பதவிக்கான தேர்வில் விஜய் முன்னேறியிருப்பது ராகுல் காந்தியின் ஆதரவு வாக்குகளில் ஒரு பகுதியை பாதித்திருக்கும் என்பது தான். விஜய், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி (2%), சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் (1.7%), காக்ரோச் ஜனதா கட்சியின் (சி.ஜே.பி) நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அபிஜித் திப்கே (1.3%) மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் (1.2%) ஆகியோரை விட முன்னிலையில் உள்ளார். சி.வோட்டர் நிறுவனம் நடத்திய 2026 ஆகஸ்ட் மாதத்திற்கான கருத்துக்கணிப்பில், ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 25 வரை நேரடியாக 25,184 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதில் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வியுடன் விஜயின் முன்னேற்றம் நின்றுவிடவில்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டணியை வழிநடத்த தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர்களில் யார் மிகவும் பொருத்தமானவர் என்று கேட்கப்பட்டபோதும் விஜய் முன்னணியில் இடம்பிடித்துள்ளார். அவருக்கு 12.2 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. இதில் 29 சதவீத ஆதரவுடன் ராகுல் காந்தி முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து விஜய், மம்தா பானர்ஜி (8.5%), அரவிந்த் கெஜ்ரிவால் (7.5%) மற்றும் அகிலேஷ் யாதவ் (6.9%) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முதல் முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ள ஒரு அரசியல்வாதி, தனது முதல் ஆட்சிக்காலத்தின் ஆரம்ப சில மாதங்களிலேயே தமிழ்நாட்டைத் தாண்டி தனது அரசியல் அடையாளத்தை பெற்றுள்ளார். விஜயின் அரசியல் பயணம், இந்திய அரசியலில் அரிதாகக் காணப்படும் வேகத்தில் நகர்ந்து வருகிறது. 2024-ஆம் ஆண்டு த.வெ.க கட்சியைத் தொடங்கியதன் மூலம் விஜய் அரசியலில் நுழைந்தார். இரண்டே ஆண்டுகளில் அந்தக் கட்சி தனது முதல் தேர்தலைச் சந்தித்து, தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றி, 2026-ஆம் ஆண்டு விஜயை முதலமைச்சராகப் பதவியேற்கச் செய்தது. தற்போது அவரது அரசு ஒரு ஆண்டு கூட முழுமையாக நிறைவு செய்யாத நிலையில், நாட்டின் அரசியல் மனநிலையை அளவிடும் கருத்துக்கணிப்பில் அவரது பெயர் ஏற்கனவே தேசிய அளவில் அறியப்பட்ட அரசியல் தலைவர்களுடன் இணைத்து குறிப்பிடப்படுகிறது. சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள், கடந்த சில வாரங்களாக த.வெ.க தலைவர்கள் முன்வைத்து வந்த அரசியல் வாதத்திற்கு தேர்தல் ரீதியான ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளன. 2029 மக்களவைத் தேர்தலில் விஜயை தேசிய அரசியல் தலைவராகவும், பிரதமர் பதவிக்கான போட்டியாளராகவும் த.வெ.க அமைச்சர்கள் ஏற்கனவே முன்னிறுத்தி வருகின்றனர். பொதுத்தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. ஆனால், பிரபலத்தை தேசிய அளவிலான தேர்தல் கூட்டணியாக மாற்றுவது முற்றிலும் வேறுபட்ட சவாலாகும். இருப்பினும், கருத்துக்கணிப்பு, 2029-ஆம் ஆண்டு பிரதமர் பதவிக்கான போட்டியாளராக விஜயை முன்னிறுத்தும் எண்ணம் இனி தமிழ்நாட்டுக்குள் மட்டும் வரையறுக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. விஜய் தலைமையில் தேசிய அளவில் ஒரு முக்கிய அரசியல் பங்கு உருவாக வேண்டும் என்ற கோரிக்கை, தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என்று த.வெ.க அமைச்சர் ஒருவர் வெளிப்படையாகப் பேசத் தொடங்கிய பின்னர் மேலும் கவனம் பெற்றது. ஆகஸ்ட் 18 அன்று சட்டப்பேரவையில் பேசிய த.வெ.க-வின் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார்,, விஜய் எதிர்கால பிரதமராக வருவார் என்று குறிப்பிட்டு, முதலமைச்சரின் கடின உழைப்பைப் பாராட்டினார். அதேபோல், 2026-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பெற்ற வெற்றியுடன் த.வெ.க-வின் அரசியல் பயணம் முடிவடையாது என்பதையும் சரத்குமாரின் பேச்சு தெளிவுபடுத்தியது. இதற்கு ஒரு நாள் முன்னதாக, தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்தியா டுடே ரவுண்ட் டேபிள் தமிழ்நாடு (India Today Roundtable Tamil Nadu0 நிகழ்ச்சியில் இதைவிட விரிவான அரசியல் கருத்தை முன்வைத்திருந்தார். எதிர்காலத்தில் இந்தியாவுக்கு தென்னிந்தியாவில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என்றும், அத்தகைய தலைவர் தமிழ்நாட்டிலிருந்து வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஒரே நாளுக்குள் வெளியான இந்த இரண்டு கருத்துகளும், ஒரு தனிப்பட்ட தலைவரின் அரசியல் ஆசையைத் தாண்டி, த.வெ.க-வின் எதிர்கால அரசியல் இலக்காக இந்த விவகாரத்தை மாற்றின. இந்நிலையில், ஆகஸ்ட் மாத கருத்துக்கணிப்பு முடிவுகள், விஜய் த.வெ.க-வுக்குள் மட்டுமல்லாமல் பொதுமக்களிடையேயும் பிரதமர் பதவிக்கான முகமாக பார்க்கப்படத் தொடங்கியிருப்பதை வெளிப்படுத்துகின்றன. மேலும், பிரபலத்திற்கான போட்டியில் பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் பல முக்கிய தலைவர்களையும் அவர் பின்னுக்குத் தள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இந்தியாவின் அடுத்த பிரதமர் ரேஸ், வேகமாக முன்னேறி வரும் விஜய்: பிரபல நிறுவனம் கருத்துக்கணிப்பில் முக்கிய தகவல்
PulseNews சுருக்கம்

தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற நீண்டநாள் அரசியல் எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், நடிகர் விஜய் குறித்த புதிய கருத்துக்கணிப்பு தகவல் வெளியாகியுள்ளது. கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில் முதல்வராகப் பொறுப்பேற்று மூன்று மாதங்களை நிறைவு செய்துள்ள விஜய், நீண்டகாலமாக அரசியலில் இருக்கும் தலைவர்களுக்கு இணையாக முன்னேறி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியலில் களமிறங்கிய விஜய், இந்தியாவின் அடுத்த பிரதமர் ரேஸில் மிக வேகமாக முன்னேறி வருவதாக அந்தப் பிரபல நிறுவனம் கருத்துக்கணிப்பில் குறிப்பிட்டுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema