PulseNews
சினிமா

நூற்றாண்டு நாயகர் "பத்மஸ்ரீ' பாலசந்தர்! இது கே.பி.யின் கலைப்பயணம்! -புஷ்பா கந்தசுவாமி (11)

(11) எம்.ஜி.ஆர். நடிக்க விரும்பிய அந்தக் கதை? "ம க்கள் திலகம்' எம்.ஜி.ஆர். பார்த்து பாராட்டிய நாடகம். அந்த நாடகத்தைப் படமாக்கி, அதில் அவர் நடிக்க விரும்பினார். அந்த நாடகத்தின் கதை என்ன ? அது ஏன் படமாகவில்லை? இது சிலரின் கேள்வி. ராகினி ரிக்ரியேஷன்ஸ் நாடகக் குழுவின் மிகமுக்கியமான நாடகம். அப்பாவிற்கு நாடகக் கதாசிரியராய் பெயர் வாங்கித் தந்த நாடகம், பிரபல திரைப்பட நடிகை சௌகார் ஜானகி முதன்முதலாக மேடையில் தோன்ற காரணமான நாடகம் "மெழுகுவர்த்தி.' "சர்வர் சுந்தரம்', "எதிர் நீச்சல்', "நாணல்', "மேஜர் சந்திரகாந்த்', "நவக்கிரகம்' முதலிய நாடகங்களைப் போல இது மக்களால் அதிகம் பேசப்படவில்லை. காரணம், அதன் சிக்கலான கதையம்சம், மனோதத்துவ அடிப்படையில் அமைந்த டிராஜடி கதை. நாடகத்தின் கதாநாயகன் ஒரு மெடிக்கல் ரெப். அவனுக்கு தாயின் மீது அளவு கடந்த அன்பு, பக்தி, பாசம். அவனைப் பொறுத்தவரை தாய்தான் அவனுக்கு உலகம். அதேசமயம் அவனை ஒரு பெண் காதலிக்கிறாள். அவள் ஒரு நர்ஸ். தன் காதலை அவனிடம் தெரிவிக்க ஒரு நல்ல வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறாள். அப்போது அவசரமாக கதாநாயகன் வெளியூருக்கு விமானத்தில் செல்கிறான். அந்த விமானம் விபத்துக்குள்ளாகிறது. சிலர் இறந்து போகிறார்கள். செய்தியைக் கேட்டு மகன் இறந்துவிட்டான் என நினைத்து அதிர்ச்சியால் அந்த தாய் இறந்துவிடுகிறாள். ஆனால், மகன் பத்திரமாக ஊர் திரும்புகிறான். தாய் இறந்த செய்தியை, மகனுக்குச் சொல்லாமல் மறைத்துவிடுகிறார்கள். பிறகு அவன் "அம்மா? எங்கே அம்மா?' என்று தேடும்பொழுது உண்மை சொல்லப்படுகிறது. அதைக் கேட்டு அவன் உடைந்து போகிறான். "இல்லை என் அம்மா இறந்திருக்க முடியாது...' என்கிறான். தன்னுடைய தாய் உயிரோடுதான் இருக்கிறாள் என்றே நம்புகின்றான். உண்மை ஒருநாள் வெட்ட வெளிச்சமாகும்போது அவன் புத்தி பேதலித்தவன்போல் ஆகிவிடுகிறான். அப்போது அவனைக் காண வரும் காதலியை பார்த்து இதோ என் தாய் என்கிறான். ஒரு நர்சான அவள் முதலில் அவனை அமைதிப்படுத்த நினைக்கின்றாள். காதலனை தன் மகனைப் போல பாதுகாத்து அவனை குணப்படுத்த முடிவு செய்கிறாள். அவன் காதலியான அவள் அவனுக்கு தாயாகிறாள். அவளுடைய மனக்குமுறல்தான் கதை. அவள் தாயாகவே இருந்து அவனை குணப்படுத்துகிறாள். ஒரு மெழுகுவத்தி போல தன்னை உருக்கி அவனுக்கு ஒளி தருகிறாள். ஒரு பெண்ணின் தியாகத்தைச் சொல்லும் கதை இது. சிக்கலான இந்தக் கதையை பலர் புரிந்து கொண்டார்கள். சிலர் எதிர்த்தார்கள். தாய்ப்பாசமிக்க மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இந்த நாடகத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டு பாராட்டினார். அதோடு அப்பாவை திரை உலகிற்கு அழைத்துச் சென்றார். நாடகத்தைப் பார்த்த அருணாசலம் ஸ்டுடியோ அதிபர் ஏ.கே. வேலன் அப்பாவை இயக்குனராக திரையுலகிற்கு அறிமுகம் செய்ய முடிவு செய்தார். இந்த நாடகம் சிறப்பாக பேசப்பட, இதில் காதலியாக கதைநாயகியாக ஒரு சாதாரண நாடக நடிகை நடிப்பதை விட பிரபலமான ஒருவர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று அப்பா நினைத்தார். "சௌகார் ஜானகியை நடிக்க வைக்கலாம், அவருக்கு நாடகம் பிடிக்கும், நான் பேசுகிறேன்' என்றார் மேஜர் சுந்தர்ராஜன். அவர் டெலிபோன் டிபார்ட்மெண்டில் இருந்ததால் சௌகார் ஜானகி அவர்களோடு நட்பிலிருந்ததார். அவர் ஒத்துக்கொள்வாரா? முன்னணி நடிகை என்ற சந்தேகம்? இருந்தாலும், அவரை "சர்வர் சுந்தரம்' நாடகம் பார்க்க வைக்க வை' என்றார் அப்பா. நாடகம் பார்த்த பிறகு சம்மதம் சொல்லி விட்டார் சௌகார். அது மட்டுமல்ல, நாடக ஒத்தி கையில் தவறாமல் கலந்து கொண்டார். சௌகார் ஜானகி நாடகத்திற்குள் வந்த பிறகு அது சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பம்பாய் சென்றும் இந்த நாடகம் போடப்பட்டது. சௌகாரும் சென்று நடித்துக்கொடுத்தார். நடிகை கண்ணாம்பாவின் கணவர் நாக பூஷணத்திற்கு ஒரு படம் செய்து கொடுக்க இருந்த எம்ஜிஆர்., அப்போது இந்த நாடகத்தின் உரிமையை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னதும் அவரும் பணம் கொடுத்து வாங்கிவிட்டார். அப்பாவும், அதற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். பிறகு நாகபூஷணம் "இதில் எம்.ஜி.ஆரை எப்படி நடிக்க வைக்க முடியும்? இந்தக் கதை வேண்டாம்' என்று சொல்லிவிட்டார். "மெழுகுவத்தி' காதலனுக்காக வாழ்வை தியாகம் செய்யும் ஒரு காதலியின் கதை. நாடகத்தில் நடிக்க சம்மதித்த சௌகார் ஜானகிக்கு இன்னும் சிறப்பான ஒரு பாத்திரத்தில் நடிக்க வைக்க அப்பா நினைத்தார். அதுதான் எதிர் நீச்சல் பட்டு மாமி கதாபாத்திரம்...! மனைவி பதவியில் அமர விரும்பிய ஒரு பெண்ணை தாயின் தூய்மையான பீடத்துக்கு உயர்த்திவிட்ட சம்பவங்களை அமைதியாகவும் அழுத்தமாகவும் அளவு மீறி மிகையாகாமலும் வரிசைப்படுத்தியிருக்கிறார் கதாசிரியர் பாலசந்தர். வேகத்துக்கு பதில் ஆழத்தையும் மகிழ்ச்சிக்கு பதில் நிறைவையும் பெற வைக்கிறது சாமர்த்தியமான டைரக்ஷன். சவுகார் ஜானகிக்கு நாடக உலகத்தை திறந்துவிட்டிருக்கிறது இந்த சக்திமிக்க ஆனால் நம்பமுடியாத மனோதத்துவக் கதை. ஜானகியின் பொலிவான சாந்தமும் கனவு படிந்த விழிகளும் கதாநாயகி பாகத்திற்குப் பெரிதும் துணை செய்கிறது. கதாநாயகன் சுந்தர்ராஜன் நாம் சாதாரணமாக சந்திக்கக் கூடிய இளைஞராகவே தோன்றுகிறார், நம்பத்தக்க நடிப்பு. "சினிமா தோற்றுப் போவதற்கு டெலிவிஷன் வரும்வரை காத்திருக்க வேண்டாம் போலிருக்கிறது. நாலு பாலசந்தர்கள் கிளம்பினால் போதுமே' குமுதம் விமர்சனம் இது. பத்திரிகைகளின் பாராட்டைப் படித்தபோது, அப்பாவின் புதுமை முயற்சிக்கு ரசிகர்களிடம் ஆதரவு கிடைத்தாக உணர வைத்தது. அப்பாவைத் தேடி திரைப்படம் இயக்கும் வாய்ப்பு வந்தது, அப்பா மறுத்துவிட்டார். காரணம் என்ன? (சொல்கிறேன்...) -எழுத்தாக்கம் "கலைமாமணி' சபீதா ஜோசப்

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நூற்றாண்டு நாயகர் "பத்மஸ்ரீ' பாலசந்தர்! இது கே.பி.யின் கலைப்பயணம்! -புஷ்பா கந்தசுவாமி (11)
PulseNews சுருக்கம்

ராகினி ரிக்ரியேஷன்ஸ் குழுவின் மிக முக்கியமான நாடகமான 'மெழுகுவர்த்தி', கே. பாலசந்தருக்கு நாடக ஆசிரியராகப் பெயர் பெற்றுத் தந்தது. மேலும், நடிகை சௌகார் ஜானகி முதன்முதலில் மேடையில் அறிமுகமாவதற்கும் இந்த நாடகமே காரணமாக அமைந்தது.

எம்.ஜி.ஆர். இந்த நாடகத்தைப் பார்த்து பாராட்டியதோடு, அதனைப் படமாக்கி அதில் நடிக்கவும் விருப்பம் தெரிவித்தார். அந்தக் கதை என்ன, அது ஏன் திரைப்படமாக உருவாகவில்லை என்பது பலருடைய கேள்வியாக இருந்து வருகிறது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema