“இன்னும் பல ஆண்டுகள் சேர்ந்து பயணிப்போம்” - குஷ்பு நெகிழ்ச்சி!
தமிழ் சினிமாவில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் குஷ்பு. அதற்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக இந்தியில் கனிசமான படங்களில் நடித்துள்ளார். பின்பு நாயகியாக இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மொத்தம் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளர். இதனிடையே சின்னத்திரை சீரியல் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இதைத்தாண்டி அரசியலிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். இந்த நிலையில் குஷ்பு சினிமாவில் இன்று தனது 40வது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இது தொடர்பாக நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தென்னிந்தியத் திரையுலகில் நான் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறேன், எனது முதல் தென்னிந்தியத் திரைப்படமான கலியுக பாண்டவுலு 1986-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியானது. தென்னிந்தியாவைப் பற்றி எந்தவித புரிதலும் இல்லாத, 15 வயதுடைய ஒரு வெகுளித்தனமான சிறுமியாக நான் இங்கு வந்தேன். ஆனால், இங்கேயே தங்கி எனது தொழில் வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பத்தை உருவாக்கிக்கொண்டேன். எனக்குத் துணையாக நின்றவர்கள், அளவுக்கடந்த அன்பு செலுத்தியவர்கள், ஆதரவளித்தவர்கள் மற்றும் எனக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் என ஒவ்வொருவருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். என்னை ஏற்றுக்கொண்டு, என் வாழ்வின் ஒரு பகுதியாக மாறி, இந்தப் பயணத்தில் என்னுடன் பயணித்த என் ரசிகர்களுக்குக் கோடான கோடி நன்றிகள். நீங்கள் இல்லையென்றால், இந்த இடத்திற்கு நான் வந்திருக்க முடியாது. தெலுங்குத் திரையுலகின் மூலம் என்னை தென்னிந்தியாவிற்கு அறிமுகப்படுத்திய மறைந்த டி. ராமா நாயுடு அவர்கள், கே. ராகவேந்திர ராவ் அவர்கள் மற்றும் சுரேஷ் நாயுடு ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்தப் பயணத்தின் மிக அழகான அம்சம் என்னவென்றால், நடிகர் வெங்கி போல் எனக்கு வாழ்நாள் நண்பர் ஒருவர் கிடைத்ததுதான். ஒரு நடிகராகத் தொடங்கி, பெரும் நட்சத்திரமாக உயர்ந்த பிறகும், அதே அற்புதமான மனிதராகத் தொடர்ந்து திகழும் அவரது பயணம் எனக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக என் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்ததற்கு நன்றி வெங்கி. என் நண்பனே, நாம் இன்னும் பல ஆண்டுகள் சேர்ந்து பயணிப்போம். உன் மீது நிபந்தனையற்ற அன்பு கொண்டிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை குஷ்பு, திரையுலகில் தனது 40 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக இந்தித் திரையுலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து தென்னிந்திய மொழிகள் உட்பட மொத்தம் 200-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சினிமா தவிர்த்து சின்னத்திரை தொடர்களிலும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ள குஷ்பு, தற்போது தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தனது திரையுலக பயணத்தின் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து பயணிப்போம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.