தவெக ஆட்சிக்கு 100 நாட்கள்.. சாதனை பட்டியல் தயாரிக்க விஜய் உத்தரவு! விளம்பர படங்களும் ரெடி!
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களை நெருங்கி வரும் நிலையில், இந்த காலகட்டத்தில் அரசால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் நீடித்து வந்த நிலையில், முதன்முறையாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த மே 10ஆம் தேதி தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், தற்போது அவரது தலைமையிலான அரசு முதல் பட்ஜெட்டையும் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைவதை கட்சி மற்றும் அரசு தரப்பில் முக்கிய நிகழ்வாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு துறையிலும் கடந்த 100 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் மற்றும் மாற்றங்கள் குறித்த விரிவான பட்டியலைத் தயாரிக்குமாறு அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுக்கும் முதல்வர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு துறையிலும் தவெக அரசு கொண்டு வந்த மாற்றங்கள், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், எடுக்கப்பட்ட நிர்வாக நடவடிக்கைகள் என எதுவும் விடுபடாமல் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ‘சிங்கப்பெண்’ அதிரடி சிறப்புப் படை, 200 யூனிட் இலவச மின்சாரம், 717 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடல், அம்மா உணவகங்களின் மறுசீரமைப்பு, விவசாயிகளுக்கான ரூ.134 கோடி சிறப்பு தொகுப்பு, பகுதி அளவிலான பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட நடவடிக்கைகளை 100 நாள் சாதனை பட்டியலில் முக்கியமாக முன்னிறுத்த தவெக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுமட்டுமின்றி, தொழில்துறையில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள், கனிமவளத் துறையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பத்திரப்பதிவுத் துறையில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் லஞ்சத்தை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சிகள் உள்ளிட்டவற்றையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, தவெக அரசின் 100 நாள் ஆட்சியை மையமாக வைத்து சிறப்பு விளம்பரப் படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் பிரபலங்களிடம் பேட்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விளம்பரப் படங்கள் மற்றும் 100 நாள் சாதனைகள் தொடர்பான தகவல்கள் விரைவில் தவெக தலைமை சார்பில் அடுத்தடுத்து வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆட்சியின் 100-வது நாளில் முதல்வர் விஜய் நேரடியாக அரசின் சாதனை பட்டியலை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக அரசின் முதல் 100 நாட்களில் என்ன செய்தது என்பதை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் வகையில் அரசு தரப்பிலும், கட்சி தரப்பிலும் தயாரிப்புகள் தீவிரமடைந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களை நெருங்கியுள்ள நிலையில், இந்த காலகட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் மற்றும் நிர்வாக மாற்றங்களை உள்ளடக்கிய விரிவான பட்டியலைத் தயாரிக்குமாறு அமைச்சர்களுக்கும் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மே 10 அன்று முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய், சிங்கப்பெண் சிறப்புப் படை, 200 யூனிட் இலவச மின்சாரம், 717 டாஸ்மாக் கடைகள் மூடல் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்த திட்டமிட்டுள்ளார். அரசின் 100 நாள் சாதனைகளை விளக்கும் வகையில் பிரத்யேக விளம்பரப் படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, திரைப்பிரபலங்களின் பேட்டிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆட்சியின் 100-வது நாளில் முதல்வர் விஜய் நேரடியாக இந்த சாதனை பட்டியலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.