PulseNews
சினிமா

“நான் ஒருபோதும் அந்த எல்லையை கடக்க மாட்டேன்” – சர்ச்சைக்கு தர்ஷா குப்தா உருக்கமான விளக்கம்!

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து பிரபலமான நடிகை தர்ஷா குப்தா, சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் வருமானம் ஈட்டி வந்த அவர், சமீபத்தில் தனது பெயரில் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார். அந்த செயலியில் ரசிகர்களுடன் வீடியோ காலில் பேச ரூ.6,000, பிராண்ட் புரமோஷனுக்கு ரூ.50,000, பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷனுக்கு ரூ.1,000 என பல்வேறு கட்டணங்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியானது. மேலும் 3 மாதங்கள் மற்றும் ஒரு வருடத்துக்கான சிறப்பு திட்டங்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தர்ஷா குப்தாவின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிலர் புகாரும் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தர்ஷா குப்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வமான விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “புரிந்துகொள்ளப்படாதது வலி அல்ல. ஆனால், என்னை நன்கு அறிந்த மனங்கள்கூட நான் அப்படிப்பட்ட ஒருவர் அல்ல என்று நம்பிவிடுவதுதான் மிகவும் கஷ்டமான விஷயம்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், பல ஆண்டுகளாக தன்னை நேசித்து வரும் ரசிகர்களிடம் தனது குணத்தை விளக்க வேண்டிய சூழல் வரும் என்று தான் ஒருபோதும் நினைத்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்காகவே ‘Renown’ செயலியில் இணைய சம்மதித்ததாக கூறியுள்ள தர்ஷா குப்தா, “என் ரசிகர்கள் எனக்கு குடும்பம் போன்றவர்கள். அவர்களுடைய பிறந்தநாள் அல்லது திருமணநாள் வாழ்த்துகளை என்னிடமிருந்து பெறவோ, என்னுடன் தனிப்பட்ட முறையில் பேசவோ முடியும் என்றுதான் நான் நினைத்தேன். அதுதான் அந்த செயலியில் இணைய நான் சம்மதித்த ஒரே காரணம். நான் சொல்வது உண்மை என்பதற்கு முருகப்பெருமானே சாட்சி. அந்தத் தளத்தில் வேறு என்ன நடக்கிறது என்பது எனக்கு ஒருபோதும் தெரியாது” என தெரிவித்துள்ளார். தனது குடும்பம் கற்றுக்கொடுத்த மதிப்புகளுடன் தான் வாழ்ந்து வருவதாகவும் தர்ஷா குப்தா கூறியுள்ளார். “நான் கவர்ச்சியான புகைப்படங்களை பகிரலாம். ஆனால் எனக்கென்று சில எல்லைகள் உள்ளன. எந்த அளவுக்கு பணமோ, புகழோ கிடைத்தாலும் அந்த எல்லைகளை நான் ஒருபோதும் கடக்க மாட்டேன்” என அவர் உறுதியாக தெரிவித்துள்ளார். தன்னைப் பற்றிய விமர்சனங்கள் பெரிய அளவில் பாதிக்கவில்லை என்றும், ஆனால் பல ஆண்டுகளாக தன்னை நேசித்து நம்பியவர்கள், தான் இல்லாத ஒரு நபராக தன்னை நினைத்திருப்பார்கள் என்பதுதான் மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “இத்தனை ஆண்டுகளாக நீங்கள் அறிந்த அதே நபராகவே என்னை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நான் ஒருபோதும் செய்யாத ஒரு விஷயத்துக்காக என்னை தவறாக நினைக்க வேண்டாம்” என தர்ஷா குப்தா உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்களும், நெட்டிசன்களும் தர்ஷா குப்தாவுக்கு ஆதரவும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.

Seithipunal15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“நான் ஒருபோதும் அந்த எல்லையை கடக்க மாட்டேன்” – சர்ச்சைக்கு தர்ஷா குப்தா உருக்கமான விளக்கம்!
PulseNews சுருக்கம்

சின்னத்திரை மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா, தனது பெயரில் அறிமுகப்படுத்திய புதிய செயலி தொடர்பாக சமூக வலைதளங்களில் எழுந்த சர்ச்சைகளுக்கு உருக்கமாக விளக்கம் அளித்துள்ளார். அந்தச் செயலியில் ரசிகர்களுடன் வீடியோ காலில் பேச ரூ.6,000, பிராண்ட் புரமோஷனுக்கு ரூ.50,000 என கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுடன் நெருக்கமாக இருப்பதற்காக மட்டுமே இந்தச் செயலியில் இணைந்ததாகவும், அங்கு வேறு என்ன நடக்கிறது என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்தாலும், குடும்பம் கற்றுக்கொடுத்த மதிப்புகளுடன் தான் வாழ்வதாகவும், பணத்திற்காகவோ புகழுக்காகவோ தான் ஒருபோதும் எல்லையை மீற மாட்டேன் என்றும் தர்ஷா குப்தா உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema