அப்பா, அம்மாவிடம் தயக்கம், ஆனா தங்கையிடம் அப்படி இல்லை; தனது குடும்பம் பற்றி மனம் திறந்த ஜேசன் சஞ்சய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த விஜய், தற்போது சினிமாவில் இருந்து விலகி அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அவரது மகன் தனது சிக்மா படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஜேசன் சஞ்சய் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது திரைப்பட உருவாக்க அணுகுமுறை குறித்தும், தனது பெற்றோர்களான விஜய் மற்றும் சங்கீதாவுடனான உறவு குறித்தும் அரிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தனது குடும்பம் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய், தனது வாழ்க்கையில் அம்மா எப்போதும் மிகப்பெரிய ஆதரவாக இருந்து வருவதாகக் கூறினார். அவர் கூறுகையில், “எனது வாழ்க்கையின் மிகப்பெரிய தூண் என் அம்மாதான். அவர் என்னையும் என் சகோதரியையும் 24 மணி நேரமும் நினைத்துக் கொண்டிருப்பார். ஒரு நாள் நான் அவருக்கு போன் செய்ய மறந்துவிட்டால், அவரே எனக்கு போன் செய்து, அன்று என்ன நடந்தது, நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்பார். ஆனால் அப்பா, அம்மாவிடம், எல்லாவற்றையும் எளிதாகப் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. என் அப்பா மற்றும் அம்மாவிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வதில் எனக்கு சற்று தயக்கம் இருக்கும். அவர்கள் எனக்கு அந்த அளவுக்கு இடம் கொடுக்கவில்லை. ஆனால், என் சகோதரியிடம் நான் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேச முடியும் என்று கூறியுள்ளார். ஜேசன் சஞ்சயின் இந்த வெளிப்படையான பேச்சு, பொதுவெளியில் அதிகம் பேசப்படாத அவரது குடும்ப வாழ்க்கையின் தனிப்பட்ட பக்கத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. மேலும், தனது பணியில் இயல்பாக இருக்கவே விரும்புவதாகவும், கதைக்கு ஏற்ற வகையில் தனது உண்மையான தனிப்பட்ட குணங்களை திரைப்படங்களில் வெளிப்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் சிக்மா படத்தில் சம்பத் மற்றும் ராஜு சுந்தரம் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘சிக்மா’ திரைப்படம் கடந்த மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பின்னர் அதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. திரையரங்கு வெளியீட்டிற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், ஜேசன் சஞ்சய் தற்போது ஊடகங்களைச் சந்தித்து தனது முதல் படத்தை தீவிரமாக புரமோட் செய்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது மகன் ஜேசன் சஞ்சய், லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள 'சிக்மா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அதன் விளம்பரப் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பட உருவாக்கம் மற்றும் குடும்ப உறவுகள் குறித்து ஜேசன் சஞ்சய் மனம் திறந்துள்ளார். அப்போது, தனது தந்தை விஜய் மற்றும் தாய் சங்கீதாவிடம் பேசுவதில் இருக்கும் தயக்கம், தனது தங்கையிடம் இருப்பதில்லை என்று அவர் பகிர்ந்துள்ளார்.