PulseNews
வணிகம்

தலைமைச் செயலகத்தில் முக்கிய மாற்றம்; நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறும் முதல்வர் அலுவலகம்

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை தலைமைச் செயலகத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் இடப்பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், முதல்வர் விஜயின் அலுவலகம் (CMO) விரைவில் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான சீரமைப்புப் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்போது நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் 34 அரசு துறைகளின் செயலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. 10 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தின் 10-வது மாடியில், கடலை நேரடியாகக் காணக்கூடிய இடத்தில் முதல்வர் அலுவலகம் அமைக்கப்படவுள்ளது. கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை தலைமைக் கட்டிடத்தின் முதல் மாடியில் தான் முதல்வர் அலுவலகம் செயப்பட்டு வருகிறது. முதல்வர் விஜய் பதவியேற்றதிலிருந்து, அங்குதான் முதல்வர் அலுவலகம் இயங்கி வந்த நிலையில், தற்போது அதிகளவில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் வருகை தருவதால் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாற்றத்திற்கான முன்னேற்பாடுகளை பொதுப்பணித் துறை (PWD) தொடங்கியுள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் உள்ள மாநாட்டு அரங்கிற்கு அருகிலுள்ள உணவக பகுதி, முதல்வர் அலுவலகமாக மாற்றப்பட உள்ளது. அங்குள்ள மேஜைகள், நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றப்படவுள்ளன. முதல்வர் அலுவலகம் மாற்றப்படுவதால், தற்போது 10-வது மாடியில் இயங்கி வரும் சில அரசு துறைகளும் இடமாற்றம் செய்யப்படுகின்றன. தகவல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, உள்துறை (மதுவிலக்கு பிரிவு) மற்றும் வணிக வரித்துறை ஆகியவற்றின் சில பிரிவுகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட உள்ளன. அவற்றில் தகவல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை கலைவாணர் அரங்கத்தில் செயல்படவுள்ளது. மற்ற இரண்டு துறைகளின் பிரிவுகள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்குள்ளேயே மாற்று இடங்களில் இயங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு 2010-ஆம் ஆண்டு, அப்போதைய தி.மு.க ஆட்சியில் தலைமைச் செயலகம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது பொதுத்துறை, சட்டப்பேரவைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய துறைகள் அங்கு செயல்பட்டன. ஆனால் 2011-ஆம் ஆண்டு ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தலைமைச் செயலகம் மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்கே மாற்றப்பட்டது. 1975-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகை, பார்ஸ்ன் ஃபவுண்டேஷன் அண்ட் இன்ஜினியரிங் நிறுவனத்தால் கட்டப்பட்டது. பின்னர் பல கட்டங்களாக புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கட்டிடம், தற்போது தமிழக அரசின் முக்கிய நிர்வாக மையமாக செயல்பட்டு வருகிறது. முதல்வர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்படுவது, தமிழக தலைமைச் செயலக நிர்வாகத்தில் முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது. இடவசதி சிக்கலை தீர்ப்பதோடு, நிர்வாகப் பணிகளை மேலும் திறம்பட மேற்கொள்ளும் நோக்கத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தலைமைச் செயலகத்தில் முக்கிய மாற்றம்; நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறும் முதல்வர் அலுவலகம்

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நிலவும் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, முதலமைச்சர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றும் பணிகள் பொதுப்பணித்துறையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த இடமாற்றத்தால், அங்குள்ள சில அரசுத் துறைகள் கலைவாணர் அரங்கம் உள்ளிட்ட பிற இடங்களுக்கு மாற்றப்படுகின்றன.

மூலம்: The Indian Express
#business