அசல் ரேஷன் கார்டு தேவையில்லை; அட்டை எண், கைரேகை இருந்தாலே போதும்: அமைச்சர் வெங்கடரமணன் அறிவிப்பு
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு இனி அசல் குடும்ப அட்டையை (Ration Card) நேரில் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், கார்டின் மென்பிரதி அல்லது அட்டை எண் மட்டுமே போதுமானது என்றும் உணவுத் துறை அமைச்சர் திரு. வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அமைச்சர், இது தொடர்பாகப் பல்வேறு தகவல்களையும் விளக்கங்களையும் அளித்தார். ஏடிஎம் (ATM) இயந்திரத்தில் கணக்கு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்திப் பணம் எடுப்பது போல, ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை எண்ணைக் கூறினாலே போதுமானது. அங்குள்ள கைரேகைச் சரிபார்ப்பு (Biometric / Live Scan) மூலமாகப் பயனாளி உறுதி செய்யப்பட்டு உடனடியாகப் பொருட்கள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். பொதுமக்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட குறிப்பிட்ட ரேஷன் கடைக்குத்தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. பணி நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெளியூர் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும் பொதுமக்கள், தங்களுக்கு அருகில் உள்ள எந்தவொரு ரேஷன் கடையிலும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதாரை செல்போனில் வைத்திருப்பதைப் போல, ரேஷன் கார்டின் மென்பிரதியையோ (Soft Copy) அல்லது அட்டை எண்ணையோ ஸ்மார்ட்போனில் வைத்திருந்தால் போதுமானது. அட்டை கையில் இல்லை என்பதற்காகப் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் திரும்பிச் செல்ல வேண்டியதில்லை என அமைச்சர் விளக்கமளித்தார். தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 38,438 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாநிலத்திலேயே அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,795 கடைகளும், அதற்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தில் 1,777 கடைகளும் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே சட்டமன்றம் வாயிலாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பொருட்கள் பெறுவதற்கு இனி அசல் குடும்ப அட்டையை நேரில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் அறிவித்துள்ளார். ரேஷன் கார்டின் நகல் அல்லது அட்டை எண் மற்றும் பயனாளியின் கைரேகை இருந்தால் மட்டுமே போதுமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது பேசிய அமைச்சர், ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பது போன்ற நடைமுறையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார். இதன் மூலம் மக்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.