விவசாயிகளுக்கு குட் நியூஸ்: 50,000 புதிய மின் இணைப்புகள்: சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தில், விவசாயிகளுக்கு 50,000 புதிய மின் இணைப்புகள் வழங்குவது, 10,000 புதிய பணியாளர்களை நியமிப்பது மற்றும் நுகர்வோர் புகார்களுக்காக வாட்ஸ்அப் சாட்பாட் வசதி உள்ளிட்ட 17 முக்கிய அறிவிப்புகளை மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை (21.08.2026) காலை சட்டப்பேரவை தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் மின்துறை மானியக் கோரிக்கையின் போது மின் துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் 17 புதிய முக்கிய அறிவிப்புகளை வெள்ளிக்கிழமை (21.08.2026) வெளியிட்டார். 2026-27-ம் நிதியாண்டிற்குள் மின் பகிர்மான கழகத்தின் சார்பில் விவசாயப் பணிகளுக்காக 50,000 புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். அதேவேளையில், இந்த 50,000 இணைப்புகளும் இலவச மின் திட்டத்தின் கீழ் வருமா அல்லது முன்னதாக பெறப்பட்ட தட்கல் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்படுமா என்பது குறித்த தெளிவான விளக்கங்கள் அதில் இடம் பெறவில்லை. இதனால், இது இலவச மின் திட்டம்தானா என்ற எதிர்பார்ப்பும் கேள்விகளும் விவசாயிகள் தரப்பில் எழுந்துள்ளன. அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளின் விவரம்: விவசாய மின் இணைப்புகள்: வரும் 2026-27 ஆம் நிதியாண்டில் 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் மின் பகிர்மான கழகம் மூலம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். வாட்ஸ்அப் புகார் சேவை: மின் பயனாளர்கள் தங்களின் சந்தேகங்கள் மற்றும் புகார்களைப் பதிவு செய்யவும், அவற்றின் மீதான நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் ரூ.14 லட்சத்தில் தானியங்கி வாட்ஸ்அப் மென்பொருள் கட்டமைப்பு அமைக்கப்படும். சுய உறுதிமொழி அடிப்படையில் இணைப்பு: புதிய வீட்டிற்கான மின் இணைப்பு கேட்கும் விண்ணப்பதாரர்களுக்கு, நேரடி களஆய்வு ஏதுமின்றி அவர்களின் சுய உறுதிமொழிப் பத்திரத்தின் அடிப்படையிலேயே விரைவாக மின் இணைப்பு வழங்கும் எளிய நடைமுறை அமல்படுத்தப்படும். பணியாளர்களுக்கான இணையவழி கலந்தாய்வு: மின்துறை ஊழியர்களின் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு சார்ந்த நியமனங்களை மனித வள மேலாண்மை அமைப்புடன் ஒருங்கிணைத்து, ஆன்லைன் கலந்தாய்வு மூலம் வெளிப்படையாக நடத்த ரூ.8.26 லட்சத்தில் செயலி உருவாக்கப்படும். ஆரம்பநிலை பணிகளை உடனடியாக மேற்கொள்ளும் வகையில் 10,000 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தற்போதுள்ள மின்மாற்றிகளின் திறன் ரூ.110.76 கோடி மதிப்பில் உயர்த்தப்படும். தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தில் உள்ள மிக உயரழுத்த துணை மின் நிலையங்களில் மின்மாற்றிகளின் திறன் உயர்த்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக ரூ.129.41 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும். மிக உயரழுத்த துணை மின் நிலையங்களில் தடையற்ற மின் விநியோகம் மற்றும் தொலைநிலைப் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் Protection & Communication சாதனங்கள் ரூ.120.32 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்படும். மேலும், ஆயுட்காலம் முடிந்த அல்லது பழமையான பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் ரூ.92.3 கோடி மதிப்பில் மாற்றப்படும். சென்னையில் உள்ள 1,250 பகிர்மான மின்மாற்றி (DT) கட்டமைப்புகளை, சுமையைச் சுற்றி அமைப்புகளாக (RMU) மாற்ற ரூ.250 கோடி மதிப்பில் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் இடையூறு ஏற்படும் போது மின் விநியோகத்தை விரைவாக மீட்டெடுத்து, தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், 110 கி.வோ. துணை மின் நிலையங்களில் உள்ள 100 எண்ணிக்கையிலான ஐசோலேட்டர் சுவிட்ச்களை ரூ.130 கோடி மதிப்பில் பிரேக்கர்ஸ்-ஆக மாற்றும் பணி மேற்கொள்ளப்படும். மிக உயரழுத்த (EHV) புதைவடப் பழுதுகளைக் கண்டறிவதற்காக கேபிள் ஃபால்ட் லோகேட்டர் கருவி கொள்முதல் செய்யப்படும். 400 கி.வோ. வரையிலான மின்னழுத்த அளவுகளை கையாளும் திறன் கொண்ட இந்த கருவி ரூ.17 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்படும். மின் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், மின் தடைகளை குறைத்தல், பழுதுகளை விரைவாக கண்டறிந்து சீரமைத்தல் மற்றும் பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மின் திட்டங்களுக்கு இணைய வழி விண்ணப்பம்: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான மின் கட்டமைப்பு இணைப்பு, திறந்த அணுகல் மற்றும் பி.இ.எஸ்.எஸ் (BESS) திட்டங்களுக்கு இணையவழி விண்ணப்ப வசதி உருவாக்கப்படும். நகர்ப்புற புகார்களை பதிவு செய்யவும், அவற்றின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் வாட்ஸ்அப் சாட்பாட் (WhatsApp Chatbot) உருவாக்கப்பட்டு, நகர்ப்புற புகார் மேலாண்மை அமைப்புடன் (CCMS) ஒருங்கிணைக்கப்படும். நிறுவன வள திட்டமிடல் (ERP) அமைப்பில் ஓய்வூதிய செயலாக்கத்திற்காக எஸ்.ஏ.பி. இ.ஆர்.பி (SAP ERP) உடன் ஒருங்கிணைப்பு செய்யப்படும். இதற்காக ரூ.24.85 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். புதிய மின் இணைப்பு கோரும் வீட்டு விண்ணப்பதாரர்களுக்கான நடைமுறை எளிதாக்கப்படும். 14 மாவட்டங்களில் புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படும். அரியலூர் பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படும். சென்னையில் 3 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் சார்பு நீதிமன்றம் தேவைப்படும்சென்னை பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களில் கூடுதல் மின்னூட்டிகள் அமைக்கப்படும். அதிக சுமை உள்ள துணை மின் நிலையங்களில் மின்மாற்றிகளின் திறன் உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.” என்று அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுப் பேசிய மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், விவசாயிகளுக்கு 50,000 புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
இதனுடன் சேர்த்து, மின்சார வாரியத்தில் 10,000 புதிய பணியாளர்களை நியமிப்பது மற்றும் நுகர்வோர் புகார்களைத் தெரிவிக்க வாட்ஸ்அப் சாட்பாட் வசதியை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட 17 முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.