PulseNews
வணிகம்

உலகின் டாப் 5-ல் ஒரு இந்திய வங்கி, மருந்து நிறுவனங்களுக்கும் அதே இலக்கு: மோடியின் புது டார்கெட்

இந்தியாவின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சி வெறும் உள்நாட்டு சந்தையின் அளவை அதிகரிப்பதுடன் நின்றுவிடக் கூடாது; உலகின் முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவுக்கு இந்திய நிறுவனங்கள் வளர வேண்டும் என்ற இலக்கை பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் இருந்து நாட்டுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய வங்கித் துறைக்கும் மருந்துத் துறைக்கும் உலகளாவிய அளவில் மிகப்பெரிய இலக்குகளை நிர்ணயித்தார். “இந்திய வங்கித் துறை வளர்ந்து வருகிறது. உலகின் முதல் 5 வங்கிகளில் குறைந்தது ஒரு இந்திய வங்கி இடம்பெற வேண்டும்” என்று அவர் கூறினார். அதேபோல், இந்திய மருந்து நிறுவனங்கள் உலகின் மிகப்பெரிய 5 மருந்து நிறுவனங்களில் இடம்பெறும் அளவுக்கு வளர வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். ஏன் இந்த இலக்கை மோடி முன்வைத்தார்? இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக அதிகரித்து வந்தாலும், உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியலில் இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளது. இதை மாற்றும் நோக்கில், ஃபார்ச்சூன் 500 பட்டியலில் 50 இந்திய நிறுவனங்கள் இடம்பெற வேண்டும் என்ற மற்றொரு பெரிய இலக்கையும் பிரதமர் முன்வைத்துள்ளார். அதாவது, இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளில் ஒன்றாக மாறுவது மட்டுமல்லாமல், அந்த வளர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உலகத் தர நிறுவனங்களையும் உருவாக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கமாக பார்க்கப்படுகிறது. வங்கித் துறைக்கு உலகப் போட்டி இந்திய வங்கிகள் உள்நாட்டில் மிகப்பெரிய வாடிக்கையாளர் அடித்தளத்தைக் கொண்டுள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனைகள், இணைய வங்கி சேவைகள், நிதி தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை இந்திய வங்கித் துறையை வேகமாக மாற்றியுள்ளன. ஆனால் உலகின் முதல் 5 வங்கிகளில் ஒன்றாக இடம்பெற வேண்டுமெனில், உள்நாட்டு வளர்ச்சி மட்டும் போதாது. சர்வதேச அளவில் வங்கியின் சொத்து மதிப்பு, லாபம், தொழில்நுட்ப திறன், வெளிநாட்டு சந்தை விரிவாக்கம் உள்ளிட்ட பல அம்சங்களில் மிகப்பெரிய முன்னேற்றம் தேவைப்படும். இதனால் பிரதமரின் அறிவிப்பு, இந்திய வங்கிகளுக்கு ஒரு உலகளாவிய போட்டிக்கான சவாலாகவே பார்க்கப்படுகிறது. மருந்துத் துறைக்கும் புதிய அழுத்தம் இந்திய மருந்துத் துறை ஏற்கெனவே உலகின் முக்கிய மருந்து உற்பத்தி மையங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக குறைந்த விலையில் மருந்துகளை உற்பத்தி செய்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் இந்திய நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும், உலகின் மிகப்பெரிய 5 மருந்து நிறுவனங்களில் இந்திய நிறுவனங்கள் இடம்பெற வேண்டும் என்ற இலக்கு, வெறும் உற்பத்தி அளவை அதிகரிப்பதைத் தாண்டியது. ஆராய்ச்சி மற்றும் புதிய மருந்து கண்டுபிடிப்பு, உலகளாவிய பிராண்டு உருவாக்கம், உயர்தர உயிரி மருந்துகள், காப்புரிமை பெற்ற மருந்துகள் போன்ற துறைகளிலும் இந்திய நிறுவனங்கள் முன்னேற வேண்டிய கட்டாயத்தை இது உருவாக்குகிறது. “இந்தியாவுக்குள் மட்டும்” என்ற அணுகுமுறை போதாது உலக நாடுகளுடன் இந்தியா வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தி வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். 40 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா நிறைவு செய்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்திய சந்தையை உலகத்திலிருந்து மூடிவைப்பது தீர்வல்ல என்றும், உலக சந்தையில் போட்டியிடக்கூடிய தரமான பொருட்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்றும் மோடி கூறினார். இதன் மூலம் “இந்தியாவில் தயாரிப்போம்” என்பதிலிருந்து “உலகத்திற்காக இந்தியாவில் தயாரிப்போம்” என்ற அடுத்தகட்ட அணுகுமுறையை பிரதமர் வலியுறுத்தியுள்ளார். மின்னணு முதல் பாதுகாப்பு உற்பத்தி வரை கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியையும் பிரதமர் எடுத்துக்காட்டினார். மின்னணு பொருட்களின் உற்பத்தி கிட்டத்தட்ட 7 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், செல்போன் உற்பத்தி 33 மடங்கு உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். பாதுகாப்புத் துறை உற்பத்தியும் கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகரித்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இதன் அடுத்த கட்டமாக, உற்பத்தி, தொழில்நுட்பம், நிதி மற்றும் மனித வளத்தை ஒன்றிணைத்து உலகளவில் போட்டியிடும் இந்திய நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக உள்ளது. அடுத்த 5 முதல் 7 ஆண்டுகள் ஏன் முக்கியம்? பிரதமர் முன்வைத்துள்ள “சக்தியின் ஏழு தாரைகள்” என்ற கட்டமைப்பில் உற்பத்தி, விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை, கதி சக்தி, பாதுகாப்பு, பசுமை மற்றும் நீலப் பொருளாதாரம், இந்தியாவின் மென்மையான சக்தி ஆகியவை முக்கிய இடம் பெற்றுள்ளன. கடந்த 5 முதல் 7 தசாப்தங்களில் சாதிக்க முடியாதவற்றை அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் சாதிக்க வேண்டும் என்பதே பிரதமரின் அழைப்பு. இதனால், வங்கி, மருந்து, உற்பத்தி, தொழில்நுட்பம் என ஒவ்வொரு துறையிலும் இந்திய நிறுவனங்கள் உள்நாட்டு முன்னணி நிறுவனங்களாக இருப்பதைத் தாண்டி, உலகின் முன்னணி நிறுவனங்களாக மாற வேண்டும் என்ற மிகப்பெரிய சவால் முன்வைக்கப்பட்டுள்ளது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
உலகின் டாப் 5-ல் ஒரு இந்திய வங்கி, மருந்து நிறுவனங்களுக்கும் அதே இலக்கு: மோடியின் புது டார்கெட்
PulseNews சுருக்கம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உள்நாட்டுச் சந்தையைத் தாண்டி, உலகளாவிய நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவுக்கு விரிவடைய வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையின் போது, இந்திய வங்கிகள் மற்றும் மருந்து நிறுவனங்கள் உலகத் தரம் வாய்ந்த இலக்குகளை அடைய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்திய வங்கித் துறை தற்போது சிறப்பான வளர்ச்சியைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், உலகின் முதல் ஐந்து வங்கிகளில் ஒன்றாக இந்திய வங்கி ஒன்று இடம்பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார். அதேபோல மருந்துத் துறையிலும் சர்வதேச அளவில் இந்திய நிறுவனங்கள் முன்னிலை வகிக்க வேண்டும் என்பதே தற்போதைய முக்கிய நோக்கமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business