PulseNews
வணிகம்

அணுசக்தி துறையில் மெகா மாற்றம்: தனியார் நிறுவனங்களுக்கு உதவ புதிய பிரிவை தொடங்கும் இந்திய அணுமின் கழகம்

பிரத்யூஷ் தீப் இந்தியாவின் அணுமின் துறை பல ஆண்டுகளாக மத்திய அரசின் கடுமையான கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. ஆனால், தற்போது தனியார் நிறுவனங்களுக்கும் இந்தத் துறையில் பங்கேற்க வாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், புதிய மாற்றத்துக்கு தயாராகி வருகிறது இந்திய அணுமின் கழகம் (NPCIL). தனியார் நிறுவனங்களும், மாநில அரசுகளும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அணு உலை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அணுமின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக, புதிய வடிவமைப்பு பிரிவை (Design Vertical) அமைக்க இந்திய அணுமின் கழகம் திட்டமிட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது. ஆங்கிலத்தில் வாசிக்க இந்த புதிய பிரிவை உருவாக்குவதற்கான முன்மொழிவு தற்போது பரிசீலனையில் உள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப உதவி கடந்த டிசம்பர் மாதம் இயற்றப்பட்ட சாந்தி (SHANTI) சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வரைவு விதிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு, புதிய அணுமின் திட்டங்களுக்கான உரிமம் வழங்குவது உள்ளிட்ட சட்ட நடைமுறைகளில் தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், தனது பணிகளை மேலும் ஒழுங்குபடுத்த இந்திய அணுமின் கழகம் (NPCIL) இந்த புதிய பிரிவை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்தப் பிரிவு, இந்தியாவின் உள்நாட்டு அழுத்தக் கனநீர் அணு உலை (PHWR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விரும்பும் நிறுவனங்களுக்கு முக்கிய தொழில்நுட்ப மையமாக செயல்படும். வடிவமைப்பு தொடர்பான ஆலோசனை, தொழில்நுட்ப உதவி, வடிவமைப்பு ஆய்வு, தர உறுதி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்தப் பிரிவு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏன் அழுத்தக் கனநீர் அணு உலை (PHWR) தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம்? இந்தியாவில் தற்போது செயல்பாட்டில் உள்ள அணுமின் நிலையங்கள் அனைத்தும் இந்திய அணுமின் கழக கட்டுப்பாட்டிலேயே உள்ளன. நாட்டின் தற்போதைய அணுமின் உற்பத்தித் திறன் 8.7 ஜிகாவாட்-எலக்ட்ரிக் (GWe) ஆக உள்ளது. இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அழுத்தக் கனநீர் அணு உலை (PHWR) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட அணு உலைகளை இந்திய அணுமின் கழகம் பயன்படுத்தி வருகிறது. அணுமின் உற்பத்தியை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், ஆரம்ப கட்டத்தில் அழுத்தக் கனநீர் அணு உலை (PHWR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது நடைமுறைக்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்தத் தொழில்நுட்பத்துக்கான உள்நாட்டு விநியோகச் சங்கிலி, உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தேவையான கட்டமைப்பு ஏற்கனவே நாட்டில் இருப்பதுதான். 2047-க்குள் 100 ஜிகாவாட் அணுமின் திறன் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் அணுமின் உற்பத்தித் திறனை 100 ஜிகாவாட்டாக உயர்த்துவதற்கான வரைபடத்தை மத்திய மின்சார ஆணையம் (CEA) ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதில், பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் அழுத்தக் கனநீர் அணு உலைகளை (PHWR ) உருவாக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ”ஆனால், புதிய நிறுவனங்கள் அனைத்துக்கும் இந்திய அணுமின் கழகம் நேரடியாக தொழில்நுட்ப வழிகாட்டுதல் வழங்குவது கடினமாக இருக்கும். எனவே, பிற நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப உதவி வழங்குவதற்காக தனியான, சுதந்திரமான அமைப்பு தேவை. அத்தகைய அமைப்பை அணுசக்தித் துறையின் கீழ் உருவாக்கலாம். பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC), இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட சிறப்பு நிறுவனங்களின் நிபுணர்களை அதில் இணைக்கலாம்” என்றும் மத்திய மின்சார ஆணையம் (CEA) தெரிவித்திருந்தது. இது தொடர்பாக மத்திய மின்சார ஆணையம் மற்றும் இந்திய அணுமின் கழகம் ஆகியவற்றிடம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதில் எதுவும் கிடைக்கவில்லை. வெளிநாட்டு அணு உலைகள் ஏன் சவால்? அணுமின் நிலையங்களை அமைப்பதில் செலவு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்தியாவின் மின்சார சந்தையைப் பொறுத்தவரை, அதிக கட்டுமானச் செலவு அணுமின்சாரத்தின் போட்டித்தன்மையை பாதிக்கக்கூடும். இதனால், இந்தியாவில் உள்நாட்டு அழுத்தக் கனநீர் அணு உலை (PHWR) தொழில்நுட்பம் செலவு குறைந்த மாற்றாக பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் இலகு நீர் அணு உலைகள் (LWR), அழுத்த நீர் அணு உலைகள் (PWR) போன்ற தொழில்நுட்பங்கள் அதிக செலவாகும் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில மதிப்பீடுகளின்படி, இந்திய அணு உலைகளின் செலவு ஒரு மெகாவாட்-எலக்ட்ரிக்குக்கு சுமார் ரூ.18 கோடி எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் ரஷ்ய அணு உலைகளுக்கு சுமார் ரூ.34 கோடி வரை செலவாகலாம். பிரான்ஸ் மற்றும் அமெரிக்க தொழில்நுட்பங்களின் செலவு இதைவிட அதிகமாக இருக்கக்கூடும். "வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களின் செலவு இந்தியாவில் சாத்தியமாக வேண்டுமென்றால், அவற்றை மொத்தமாகக் கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால், ஒரே நேரத்தில் 15 அல்லது 25 உலைகளை யாரும் ஆர்டர் செய்ய வாய்ப்பில்லை என்பதால் தற்போதைய சூழலில் அது கடினம். எனவே, வெளிநாட்டு உலைகளின் செலவு குறையும் வரை, தனியார் நிறுவனங்கள் ஆரம்பத்தில் செலவு குறைந்த அழுத்தக் கனநீர் அணு உலைகளையே தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது," என்று அணுசக்தித் துறை வல்லுநர் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். ஜெய்தாப்பூர் திட்டம் சொல்லும் பாடம் இந்தியாவில் அணுமின் திட்டங்களின் அதிக செலவு ஏற்கனவே ஒரு முக்கிய தடையாக இருந்துள்ளது. மகாராஷ்டிராவின் ஜெய்தாப்பூர் அணுமின் திட்டம் பல ஆண்டுகளாக முடங்கியிருப்பதற்கு, திட்டத்தின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அதிகப்படியான செலவும் முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால், இந்தியாவில் அணுமின் துறையை வேகமாக விரிவுபடுத்த வேண்டுமெனில், செலவு குறைந்த தொழில்நுட்பம் அவசியம் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது. அதானி, ஜிண்டால் நிறுவனங்களின் பெரிய திட்டம் இந்தியாவின் தனியார் நிறுவனங்களும் அணுமின் துறையில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன. அதானி அணுமின் நிறுவனம் 10 ஜிகாவாட், ஜிண்டால் ஸ்டீல் 18 ஜிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனை வரும் ஆண்டுகளில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்த இரு நிறுவனங்களின் நிர்வாகிகளும் கூறுகையில், ”ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள 700 மெகாவாட் அழுத்தக் கனநீர் அணு உலை (PHWR) வடிவமைப்பு, இந்தியாவின் அணுமின் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான நடைமுறை தொடக்கப் புள்ளியாக இருக்கலாம். ஏனெனில், இதற்கான வடிவமைப்புத் தரநிலைகள், முதிர்ச்சியடைந்த உள்நாட்டு விநியோகச் சங்கிலி மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் சுற்றுச்சூழல் அமைப்பு ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. அதேநேரத்தில், வெளிநாட்டு அணு உலை தொழில்நுட்பங்கள் மற்றும் சிறிய மாடுலார் உலைகள் (SMR) போன்றவை, இந்தியாவின் அணுமின் துறை மேலும் வளர்ச்சி அடைந்த பின்னர் முக்கிய பங்கு வகிக்கலாம்" என்று தெரிவித்தனர்.. இதற்கிடையில், தனியார் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப உதவி வழங்க இந்திய அணுமின் கழகம் (NPCIL), புதிய வடிவமைப்பு பிரிவை உருவாக்கும் முயற்சி, இந்திய அணுமின் துறையில் அரசுத் துறையிலிருந்து தனியார் பங்களிப்பை நோக்கிய மாற்றத்தை வேகப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அணுசக்தி துறையில் மெகா மாற்றம்: தனியார் நிறுவனங்களுக்கு உதவ புதிய பிரிவை தொடங்கும் இந்திய அணுமின் கழகம்
PulseNews சுருக்கம்

இந்தியாவின் அணுசக்தித் துறை நீண்டகாலமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், தற்போது அதில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக, தனியார் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகள் உள்நாட்டு அணு உலை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின் திட்டங்களைச் செயல்படுத்த உதவும் வகையில் இந்திய அணுமின் கழகம் (NPCIL) புதிய வடிவமைப்புப் பிரிவை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய பிரிவின் மூலம் தனியார் துறையினருக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கி, அணுசக்தித் திட்டங்களில் அவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இந்திய அணுமின் கழகம் தயாராகி வருகிறது. இதன் மூலம் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அணுமின் திட்டங்களை விரிவுபடுத்தும் பணிகள் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business