ரூ.10,000 மதிப்பிலான வாட்டர் பாட்டில்....! அப்படி என்னதான் இருக்கு அந்த தண்ணியில...?
தண்ணீர் குடிப்பது உடலின் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது. ஆனால் தற்போது தண்ணீர் குடுவையும் அன்றாட பயன்பாட்டுப் பொருளைத் தாண்டி, நவீன வாழ்க்கை முறையின் ஓர் அங்கமாக மாறி வருகிறது. குறிப்பாக திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பெரிய அளவிலான அழகிய குடுவைகளுடன் வலம் வருவது, இதனை புதிய ஃபேஷன் போக்காக மாற்றியுள்ளது.ஒருகாலத்தில் குடுவை வாங்கும்போது அதன் கொள்ளளவு, நீடித்த தன்மை ஆகியவற்றை மட்டுமே மக்கள் கவனித்தனர். ஆனால் தற்போது உடைகளுக்கு பொருத்தமான நிறம், வடிவம், தோற்றம் போன்றவற்றையும் கருத்தில் கொண்டு குடுவைகளை தேர்வு செய்யும் நிலை உருவாகியுள்ளது. விதவிதமான ஒட்டுப்படங்கள், வண்ணமயமான உறிஞ்சுக்குழாய்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி குடுவைகளை தங்களது ரசனைக்கேற்ப அலங்கரிப்பதும் அதிகரித்துள்ளது. பெரிய கொள்ளளவு கொண்ட குடுவையை எப்போதும் அருகில் வைத்திருப்பது, தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக அலுவலக மேசை அல்லது படிக்கும் இடத்தில் குடுவை கண்ணில் படும் வகையில் இருந்தால், அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற நினைவு ஏற்படும்.மேலும், ஒரே நேரத்தில் அதிக அளவு தண்ணீரை நிரப்பி வைத்துக்கொள்ள முடிவதால், அடிக்கடி எழுந்து சென்று குடிநீர் பிடிக்க வேண்டிய சிரமமும் குறைகிறது. இதன் மூலம் நாள் முழுவதும் தேவையான அளவு தண்ணீரை பருகுவதற்கான பழக்கத்தை எளிதாக உருவாக்கிக் கொள்ள முடியும்.இந்த வகை குடுவைகள் வழக்கமான தண்ணீர் பாட்டில்களில் இருந்து மாறுபட்ட நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளன. மேல்பகுதி அகலமாகவும், அடிப்பகுதி சற்று குறுகலாகவும் அமைந்திருப்பதால், வாகனங்களில் உள்ள குவளை வைக்கும் இடத்தில் எளிதாக பொருத்திக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. மூடியை முழுமையாக திறக்காமலேயே உறிஞ்சுக்குழாய் வழியாக தண்ணீர் பருக முடிவது கூடுதல் வசதியாக உள்ளது. தண்ணீர் வெளியே கசியாமல் இருக்கும் வகையில் மூடியும் பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த குடுவைகளின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று இரட்டைச் சுவர் வெற்றிடக் காப்பு அமைப்பாகும். இதன் மூலம் குடுவைக்குள் ஊற்றப்படும் குளிர்ந்த நீர் நீண்ட நேரம் குளிர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சில வகை குடுவைகளில் பனிக்கட்டிகளைச் சேர்த்து வைத்தால் அவை நீண்ட நேரம் உருகாமல் இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வெயில் காலங்களிலும் குளிர்ந்த நீரை நீண்ட நேரம் பருகும் வசதி கிடைக்கிறது.பொதுவாக இந்த வகை குடுவைகள் துருப்பிடிக்காத எஃகு போன்ற நீடித்த உலோகங்களால் தயாரிக்கப்படுகின்றன. சில குடுவைகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வேதிப்பொருட்கள் இல்லாத பாதுகாப்பான மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.மேலும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய தன்மை கொண்டதால் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டை குறைக்கவும் இவை உதவுகின்றன. இதனால் தனிநபர் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் இத்தகைய குடுவைகள் முக்கியத்துவம் பெறுகின்றனகுடுவையின் கொள்ளளவு, தயாரிப்பு நிறுவனம், வடிவமைப்பு, நிறம் மற்றும் கூடுதல் வசதிகள் ஆகியவற்றைப் பொறுத்து விலையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன. சுமார் 880 மில்லி கொள்ளளவு கொண்ட முன்னணி நிறுவனங்களின் குடுவைகள் ரூ.5,900 முதல் ரூ.7,200 வரையிலும், 1,200 மில்லி கொள்ளளவு கொண்ட பெரிய குடுவைகள் ரூ.7,000 முதல் ரூ.9,800 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.சில பிரத்யேக நிறங்கள் மற்றும் சிறப்பு வடிவமைப்புகள் கொண்ட குடுவைகளின் விலை ரூ.10 ஆயிரத்தையும் தாண்டுகிறது. அதேநேரத்தில், அதிக விலை கொடுத்து வாங்க விரும்பாதவர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் பல்வேறு மாற்று வகைகளும் இணையவழி விற்பனை தளங்களில் உள்ளன.ஒருகாலத்தில் தாகம் தணிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு சாதாரண குடுவை, இன்று உடல்நல அக்கறை, அன்றாட வசதி மற்றும் தனிப்பட்ட ரசனை ஆகியவற்றை வெளிப்படுத்தும் பொருளாக மாறியுள்ளது. தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன், கையில் எடுத்துச் செல்லும் பொருளாகவும் அழகிய தோற்றத்தை வழங்குவதால், இந்தப் பெரிய குடுவைகள் இன்றைய தலைமுறையினரிடையே தனி வரவேற்பைப் பெற்று வருகின்றன.

உடல் ஆரோக்கியத்திற்குத் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். தற்போது தண்ணீர் பாட்டில்கள் வெறும் பயன்பாட்டுப் பொருளாக மட்டுமல்லாமல், நவீன வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாக மாறியுள்ளன.
திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபலங்கள் ஸ்டைலான பாட்டில்களைப் பயன்படுத்துவதால், இது ஒரு புதிய பேஷன் டிரெண்டாக உருவெடுத்துள்ளது. முன்பு பாட்டில்களின் தரம் மற்றும் கொள்ளளவை மட்டுமே கவனித்த மக்கள், தற்போது ஆடைகளுக்கு ஏற்ப அதன் நிறம் மற்றும் வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.