பரந்தூர் திட்டம் ரத்து! தொழில் வளர்ச்சியின் எதிரி விஜய்! -தங்கம் தென்னரசு தாக்கு!
ப ரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்திருக்கும் முதல்வர் ஜோசப் விஜய், மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டதும் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். விஜய்யின் இந்த அறிவிப்பு தி.மு.க.விடம் மட்டுமல்ல; தமிழக தொழில்துறை வல்லுநர்கள் மத்தி யிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. பரந்தூர் விமான நிலையத் திட்டம் குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்னதாகவே கொடுத்திருந்தது தி.மு.க. அது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், திட்டத்தை கைவிடுவதாக அறிவித்த விஜய்யின் செயல், அரசியல் கட்சிகளை அதிர்ச்சியடைய வைத்தன. திட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து விவாதிக்க தி.மு.க. முயற்சித்தபோதும், அதற்கு அனுமதி வழங்கப்படாததால் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தது தி.மு.க.. திட்டம் ரத்து செய்யப்படுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து தி.மு.க.வின் தொழில்துறை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் நாம் பேசியபோது... "அரசியல் காரணங்களுக்காகவே இந்த திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது. த.வெ.க. அரசின் தவறான முடிவுகளால் தமிழகத்திற்கு வரவிருந்த புதிய தொழிற்சாலைகளும், முதலீடுகளும் அண்டை மாநிலமான ஆந்திராவுக்குச் சென்றுவிடக் கூடிய ஆபத்து சூழ்ந்துள்ளது. ஆந்திராவின் பொருளாதார வளர்ச்சிக்கு த.வெ.க. அரசு மறைமுகமாக உதவுகிறதோ என்கிற சந்தேகம் இருக்கிறது. பரந்தூர் விமான நிலையத்தை நம்பித்தான் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் சர்வதேச எலெக்ட்ரானிக் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் கிளைகளை அமைத்தன. திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறி யாகியிருக்கிறது. தொழில் நிறுவனங்களால் உருவாகும் வளர்ச்சியை அழித்துவிட்டு, 1.5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை கொண்டு வருவோம்னு இந்த அரசு சொல்வது எப்படி சாத்தியமாகும்? அதை விளக்கச் சொன்னால் யாரிடமும் எந்த பதிலும் இல்லை. ஏற்கனவே ஓசூர் விமான நிலையத் திட்டத்தை நாம் இழந்துவிட்டோம். இப்போது பரந்தூர் திட்டத்தையும் கைவிடுவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். இதனை உணராமல் த.வெ.க. அரசு இருப்பதுதான் துரதிர்ஷ்டம். விமானப் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டால், பெங்களூரு விமான நிலையம் 5-வது இடத்தில் இருந்தது. இன்றைக்கு சுமார் 4.5 கோடி பயணிகளாக எண்ணிக்கை உயர்ந்து 3-வது இடத்துக்கு வந்துவிட்டது. அதேசமயம், 2 கோடியே 30 லட்சம் பயணிகளை கையாண்ட நம்முடைய சென்னை விமான நிலையம், இன்றைக்கு 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. அதேபோல, பொருளாதார வளர்ச்சிக்கு சரக்குகளை கையாளக்கூடிய திறன் மிக முக்கியமானது. அந்த வகையில், ஏறத்தாள 5.5 லட்சம் டன் சரக்குகளை கையாளக்கூடிய அளவிற்கு முன்னேறி வர்த்தக ரீதியாக ஐரோப்பிய நாடுகளுடன் வலிமையான இணைப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதையெல்லாம் திட்டமிட்டுத்தான் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அனுமதித்தோம். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்துவோம் என இலக்கும் நிர்ணயித்தோம். அதற்கு ஆதாரமாக இருக்கக்கூடிய இந்த திட்டத்தை ஆரம்பித்தோம். பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் ஒரு புதிய விமான நிலையத் திட்டத்திற்கான இடத்தை தேர்வு செய்கிறபோது, பல காரணிகள் ஆராயப்பட வேண்டும். அதனடிப்படையில் பரந்தூர் பகுதி தேர்வுசெய்யப்பட்டது. அதாவது, சென்னையின் புவியியல் அமைப்பை ஆராய்ந்தால், சென்னையின் கிழக்கில் வங்கக்கடல் இருக்கிறது. அதனால் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் கிழக்கில் கொண்டுவர முடியாது. அதேபோல, வடக்கு பகுதியில் நிறைய தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்கள், பழவேற்காடு ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் என இருப்பதால் அங்கும் விமான நிலையம் கொண்டுவர முடியாது. தெற்கை எடுத்துக்கொண்டால் தாம்பரம் ஏர்ஃபோர்ஸ் ஸ்டேசனின் வான்வெளி கட்டுப்பாடுகள், கல்பாக்கம் அணுமின் நிலையம், பறவைகள் சரணாலயம் என இருப்பதால் இப்பகுதியிலும் சாத்தியமில்லை. அதனால் விமான நிலையம் அமைக்க ஒரே திசை மேற்குதான். அந்தவகையில் தான் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. ஒரு விமான நிலையம் அமைக்க குறைந்தபட்சம் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அரசு நிலம், தனியார் நிலம் என தேர்வு செய்யப்பட்ட 5,746 ஏக்கர் நிலத்தில் 90 சதவீதம் தி.மு.க. ஆட்சியில் கையகப்படுத்தி யுள்ளோம். அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோருடன் நானும் சென்று விவசாயிகளிடம் பேசி, அவர்கள் ஒப்புக்கொண்டதற்கு பிறகே நிலம் கையகப் படுத்தப்பட்டது. நிலத்திற்குரிய இழப்பீட்டையும் அவர்கள் பெற்றுக்கொண்டனர். அந்த வகையில், இந்த திட்டத்தை தி.மு.க. அரசு ஏனோதானோ வென்று கொண்டுவரவில்லை. இப்படிப்பட்ட சூழலில், திட்டத்தை ரத்து செய்வது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் த.வெ.க. அரசுக்கு அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது. நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி, எந்த நோக்கத்திற்காக நிலம் எடுக்கப்படுகிறதோ அதற்காகத்தான் பயன்படுத்த முடியும். இப்போ, திட்டத்தை ரத்து செய்து விட்டார்கள். இதற்காக எடுக்கப்பட்ட நிலத்தை என்னசெய்யப் போகிறார்கள்? இழப்பீடு பெற்றவர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்? என்றால் எந்த பதிலும் தெளிவும் முதல்வர் விஜய்யிடம் இல்லை. விமான நிலையத்திற்காக மாற்று இடத்தை தேர்வு செய்யாமலேயே ஒரு திட்டத்தை ரத்து செய்கிறார்கள் என்றால் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து எந்த புரிதலும் இவர்களுக்கு இல்லை. அப்படியே ஒரு புதிய இடத்தை தேர்வு செய்தாலும் கூட, அதற்கு ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெறவேண்டும். விஜய் அரசு கொண்டுவரும் புதிய இடத்தை ஒன்றிய அரசு ஏற்க சாத்தியமில்லை. பரந்தூரை தவிர்த்து மேற்கு திசையில் எந்த ஒரு பகுதியிலும் விமான நிலையம் அமைப்பதற்கான சூழலியலும் கிடையாது. விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகச் சொல்லி பரந்தூர் திட்டத்தை கைவிடும் விஜய் அரசு, மாற்று இடத்தை தேர்வு செய்கிறபோது விவசாய நிலங்கள் பாதிக்கப்படாதா? விவ சாய நிலங்களை கையகப் படுத்தாமல் விமான நிலைய திட்டத்தை இவர்கள் கொண்டு வந்துவிடுவார்களா? அதற்கு வாய்ப்பே இல்லை. தமிழகத்தின் பொரு ளாதார வளர்ச்சிக்கு தி.மு.க.வின் திட்டங்கள் தான் உதவின என்கிற பெருமை தி.மு.க.வுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த திட்டத்தை ரத்து செய்திருக்கிறார் விஜய். மற்றபடி விவசாயிகள் மீது எந்த அக்கறையும் அவருக்கு இல்லை'' என்று குற்றம்சாட்டுகிறார் தங்கம் தென்னரசு. தொழில் நிறுவன வல்லுநர்களிடம் பேசியபோதும் இதே கருத்துக்களை முன்வைக்கும் அவர்கள், "பரந்தூர் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு அரசு தரப்பில் நியாயமான காரணங்கள் இருப்பதுபோல தெரியவில்லை. தேர்தல் சமயத்தில் பரந்தூர் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை விஜய் நிறைவேற்றுகிறார் என்பதை கடந்து எதுவும் இல்லை. இதனால், தமிழகத்தின் தொழில் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் ஒருசேர பாதிக்கும் அபாயம் உண்டு. மாற்று இடத்தை தேர்வு செய்தால், திட்டத்தை நிறைவேற்ற 10, 15 ஆண்டுகள் ஆகும். அதுவரை சென்னையின் இரண்டாவது விமான நிலைய தேவை முடங்கிப்போகும். இதனால் இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் மிகவும் பின்தங்கிப்போகும். தவறான யோசனைகள் முதல்வர் விஜய்க்கு தரப்படுவதாக தோன்றுகிறது'' என்கிறார்கள். இதைப்பற்றி முதல்வர் விஜய்யிடம் கருத்துச் சொன்ன அதிகாரிகள், "வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக நீங்கள் இருப்ப தாக குற்றச்சாட்டுகள் வரும். திட்டத்தின் பெரும்பான்மை செயல் பாடுகள் முடிந்துள்ள நிலையில், ரத்து செய்வது ஆரோக் கியமாக இருக்காது. அப்படியே மாற்று இடம் தேர்வு செய் யப்பட்டால் அதனை மத்திய அரசு ஏற்குமா? என்பதில் உறுதியில்லை. பரந்தூரை தேர்வு செய்தது மத்திய அரசுதான். அதனால், பரந்தூரை தவிர்த்து வேறு எந்த பகுதியை தேர்வு செய்தாலும் அதனை மத்திய அரசு ஏற்காது. மேலும், ரத்து செய்வது பற்றி மத்திய அரசுக்கு முறைப்படி நாம் தெரிவிக்கவில்லை. அதனால் இதில் யோசித்து முடிவு செய்வதே நல்லது'' என அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். இவ்வளவுக்குப் பிறகும் திட்டத்தை ரத்துசெய்வதாக சட்டப் பேரவையில் சொல்லியுள்ளார் முதல்வர். இதனை மத்திய அரசுக்கு முறைப்படி தெரிவிக்கும்போது டெல்லியின் ரியாக்ஷன் எப்படியிருக்கும் என்பது அப்போது தெரியும்’என்று விவரிக்கிறார்கள் தமிழக தொழில்துறை அதிகாரிகள். __________ முதல்வரின் அறிவிப்பு! பின்னணி காரணம்! முதல்வர் விஜய் ஆட்சியமைத்த பிறகு, தேர்தலுக்கு முன்பு பிரச்சாரத்தில் அறிவித்தது போல் விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்யவில்லை. இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிருப்தி, வரவுள்ள ஏழு சட்டசபை தொகுதி களின் இடைத்தேர்த-ல் எதிரொ-க்கக் கூடுமென்று முதல்வரின் ஆலோசகர்கள் கணித் தனர். எனவே விவசாயிகளின் எதிர்ப்பை சரிக் கட்டும்விதமாக, விவசாயிகள் எதிர்ப்பு தெரி வித்த பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக அறிவிக்க வேண்டுமென ஆலோசனை கூறப்பட்டிருக்கிறது. பரந்தூருக்கு ஏற்கனவே விஜய் சென்று போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால், சட்டசபையில் முதல்வரே அறிவித்தால் சரியாக இருக்குமென்று கூறப்பட்டதை ஏற்று, அவரே அறிவித்திருப்ப தாகத் தெரிகிறது. -கீரன்

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டவுடன் அது குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் இந்த முடிவு தி.மு.க. மற்றும் தமிழகத் தொழில் துறை வல்லுநர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாகவே இந்தத் திட்டம் குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.