“கூடுதலாக ரூ.1 வசூலித்தால் கூட பணி நீக்கம்” - அதிரடி காட்டிய மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ்!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வரும் சூழலில், துறை ரீதியான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்று அறிவுப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இன்று (31-08-26) மாற்றுத் திறனாளிகள், மதுவிலக்கு, சமூகநலன், வேளாண்மைத் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. அந்த வகையில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ், துறை சார்ந்த மானியக் கோரிக்கையைத் தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், டாஸ்மாக்கில் 23 ஆண்டுகளாக பணியாற்றுவோருக்கு ஊதிய உயர்வு, டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.20,000, டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023 ஊதியம், டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ரூ.30,284 ஊதியம், டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 ஊதியம் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார். டாஸ்மாக்கில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் இந்த அறிவிப்புகளி வெளியிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, “மேற்காணும் அறிவிப்புகள் பணியாளர்கள் நலன் சார்ந்து வெளியிடப்படுவதோடு அல்லாமல், பணியாளர்கள் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால் அரசு மிக கடுமையான நடவடிக்கை எடுக்கும். கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான டாஸ்மாக் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் 1 ரூபாய் இருந்து 9 ரூபாய் வரைக்கும் கூடுதலாக வசூலிக்கப்பட்டால் அவர்களுக்கு அபராதம் என்று தான் விதித்திருந்தார்கள். ஆனால், நம்முடைய அரசில் 1 ரூபாய் வசூலித்தால் கூட மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டும். அதாவது முதல் மூன்று மாதங்களில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு அடுத்த முறையும் அதே தவறு நடந்தால் அவர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இதன் மூலம் சொல்வது என்னவென்றால் எந்த துறையிலும் ஊழல் இருக்கக்கூடாது. அது நுகர்வோரிடம் இருந்து வாங்கக்கூடிய பணமாக இருந்தாலும் சரி அரசுக்கு வர வேண்டிய பணமாக இருந்தாலும் சரி எந்த விதத்திலும் இந்த அரசு அதை ஒத்துக்கொள்ளாது” என்று அதிரடியாக கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதத்தின் போது, மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது அவர், டாஸ்மாக் மதுக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ஒரு ரூபாய் வசூலித்தாலும் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அதிரடியாக எச்சரித்துள்ளார்.