PulseNews
வணிகம்

கடன் தள்ளுபடி கண்துடைப்பு! - கொதிப்பில் விவசாயிகள்!

க டந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஜோசப் விஜய், "ஆட்சிக்கு வந்தவுடன் ஐந்து ஏக்கர்வரை விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் அதற்குமேல் கடன்பெற்றுள்ள விவசாயிகளின் பாதிக் கடன்களை தள்ளுபடி செய்யப்படும்'’ என்றும் வாக்குறுதியளித்தார். ஆட்சிக்கு வந்த முதலமைச்சர், அளித்த வாக்குறுதிக்கு மாறாக 25.5.2026 முதல் 16.6.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் 50,000-க்கு கீழ் கடன்பெற்றுள்ள சிறு குறு விவசாயிகளின் கடன்கள் மட்டும் முழுமை யாகத் தள்ளுபடி செய்யப்படும். அதற்குமேல் கடன்பெற்றுள்ள விவசாயிகளுக்கு 5000 வரை மட்டுமே தள்ளுபடி செய்யப்படுமென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். விவசாயிகளுக்கு எந்தவகையிலும் பயனளிக்காத முதல்வரின் அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கெதிராக பல்வேறு விவசாய சங்கங் கள் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப் பாட்டம், போராட்டம் நடத்திவருகிறார்கள். இதைத்தொடர்ந்து பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பினை மறு ஆய்வுசெய்த அரசு, விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனில் 75,000 வரை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுமெனவும் 75,000-க்கு மேல் கடன்பெற்றவர்களுக்கு ரூபாய் 35,000வரை மட்டுமே தள்ளுபடி என மீண்டும் ஒரு மாற்றுத்திட்டத்தை அறிவித்துள்ளது. விவசாயிகளுக்கு பயனளிக்காத மேற்கண்ட இரண்டு அறிவிப்புகளையும் திரும்பப் பெறக் கோரி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், போராட் டம் நடத்திவருகிறார்கள் விவசாயிகள். சென்னை யில் ஜூலை 7-ஆம் தேதி தமிழக விவசாய பாதுகாப்பு சங்கம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், விவசாயிகள் ஒன்றிணைந்து மிகப்பெரும் போராட்டத்தை நடத்தினார்கள். புள்ளாம்பாடி விவசாயி தர்மராஜிடம் இதுகுறித்து கேட்டபோது, "விவசாயிகளின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் நலிந்துகொண்டே போகிறது. காரணம், உற்பத்தி செய்யும் செலவினங் களுக்கு ஏற்றவகையில், விளைபொருட்களுக்கான விலை உயரவே இல்லை. கடந்த காலத்தில் அரசுகள் எப்படிப்பட்ட நடைமுறையில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடிசெய்து நடைமுறை படுத்தியதோ அதேபோன்று நடைமுறைப்படுத்த முதல்வர் முன்வரவேண்டும். அரசுக்கு கடன் தள்ளுபடி குறித்து அதிகாரி கள் தவறான புள்ளிவிவரங்களை அளித்துள்ளனர். விவசாயிகளின் பயிர்கடன்களை தள்ளுபடி செய்யக் கூடாதென ரிசர்வ் வங்கி, நபார்டு வங்கி ஆகியவை கூறுவதாக பொய்க்காரணத்தை கூறுகிறார்கள். கூட்டுறவு அமைப்பு மாநில பட்டியலில் உள்ளது. மேற்படி இந்திய ரிசர்வ் வங்கி, நபார்டு வங்கி ஆகியவை "கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் அரசு திருப்பிச் செலுத்தவேண்டும். அப்போதுதான் கூட்டுறவு அமைப்புகள் நலிவடையாமல் இயங்கமுடியும்' என்ற அறிவுறுத்தலைத்தான் கூறுகிறது. அந்த அடிப்படையில்தான் 31.3.2006-ல் மறைந்த முதல்வர் கலைஞர் முழுப் பயிர்க் கடனையும் தள்ளுபடிசெய்தார். விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களுக்கு திருப்பிச் செலுத்திய கடன் தொகையையும் அவர்களுக்கு ஏமாற்றமளிக்காத வகையில் குறிப்பிட்ட காலத்தில் கடனைச் செலுத்தியவர்களுக்கும் பணம் திருப்பிவழங்கப் பட்டது. அப்படி தள்ளுபடி செய்யப்பட்ட அனைத்துத் தொகைகளும் அரசால் சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனங்களுக்கு வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது கூட்டுறவு சங்க அதிகாரிகள் கடன் தள்ளுபடி விஷயத்தில் பல்வேறு குளறுபடிகளைச் செய்துவருகிறார்கள். எப்படியென்றால் 75,000-க்கு மேல் கடன்பெற்றுள்ள விவசாயிகள், அவர்கள் பெற்றுள்ள முழு கடன் தொகையையும் வங்கிக்கு திருப்பிச் செலுத்தவேண்டும். அப்படி செலுத்தியபிறகு 75,000-க்கு மேற்பட்டுள்ள உபரித்தொகையை அவரவர் வங்கிக் கணக்கிற்கு அனுப்புவார்களாம். ஒரு வீட்டில் 5 ஏக்கர் வரையுள்ள கணவன்- மனைவி வரம்பிற்குள் கடன்பெற்றிருந்தாலும்கூட அதில் ஒருவருக்கு மட்டுமே தள்ளுபடி செய்யப்படுமென்றும், அதேபோல் குத்தகை விவசாயம் செய்பவர்கள் கடன்பெற்றிருந்தால் அவர்களுக்கு தள்ளுபடி இல்லை என்கிறது அரசு. இப்படி பல்வேறு குளறு படிகளுடன் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். இதற்காக ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களுக்கும் செல்லும் அதிகாரிகள், சங்க ஊழியர்கள் திரட்டித்தரும் புள்ளிவிவரங்களில் பல்வேறு மாற்றங்களை செய்யச் சொல்லிவருகிறார்கள். கூட்டுறவு சங்க ஊழியர்கள், விவசாயிகளுக்கு சாதகமாக கடன் தள்ளுபடி செய்வதை விட்டுவிட்டு அரசாங்கத் திற்கு சாதகமாக நடந்துகொள்ள கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கட்டளையிட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி அரசு 36,585 கோடி கூட்டுறவு வணிக வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு சுமார் 8000 கோடி கடன் தள்ளுபடி செய்வதற்கே 1008 காரணங்களை கூறி விவசாயிகளை ஏமாற்றப்பார்க்கிறது. மேலும் விவசாயிகள் விவசாயம் செய்யும்போது இயற்கை பாதிப்பினால் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தமுடியாமல் தவணை தவறிய கடன்கள் இருந்தால் அதை தள்ளுபடி செய்யமுடியாதென தற்போது அரசாணையில் கூறியுள்ளது''’என்கிறார். விவசாயி சகாதேவனோ, "விவசாயத்தையே நம்பியுள்ளது நமது நாடு. விவசாயத்திற்கு முன்னுரிமையளித்து உணவு தானியங்களை உற்பத்தி செய்தால், பசி பட்டினியில் தவிக்கும் மக்களுக்கு உணவு கிடைக்கும். எஞ்சுவதை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். அதன்மூலம் இந்திய அரசுக்கு வருமானம் கிடைக்கும். மனிதனுக்கு தண்ணீர், உணவு இல்லையேல் உயிர் வாழமுடியாது. அனைத்து, உயிர்களுக்கும் உணவளிக்கும் விவசாயி எப்போது உயர்வான்?''” என்கிறார். ஆக மொத்தத்தில்... "பயிர்க்கடன் தள்ளுபடி என்பதே கண்துடைப்பு' எனக் கொந்தளிக் கிறார்கள் விவசாயிகள்! -எஸ்.பி.எஸ்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கடன் தள்ளுபடி கண்துடைப்பு! - கொதிப்பில் விவசாயிகள்!

தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்யாமல், நிபந்தனைகளுடன் கூடிய பெயரளவிலான கடன் தள்ளுபடி திட்டங்களை அரசு அறிவித்துள்ளதால், விவசாயிகள் கடும் அதிருப்தியில் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டுறவு வங்கிகளின் நடைமுறைகளில் உள்ள குளறுபடிகள் மற்றும் அதிகாரிகளின் தவறான புள்ளிவிவரங்களால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டும் அவர்கள், முழுமையான கடன் தள்ளுபடியை வலியுறுத்தி வருகின்றனர்.

மூலம்: Nakkheeran
#business