PulseNews
வணிகம்

த.வெ.க. பட்ஜெட்! சர்ச்சைகளும், குளறுபடிகளும்!

மு தல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட், கடந்த 5ஆம் தேதி புதனன்று தமிழ்நாடு சட்ட மன்றத்தில், நிதியமைச்சர் மரிய வில்சனால் தாக்கல் செய்யப்பட்டது. நடப்பாண்டுக்கான பட்ஜெட் உரையில், விஜய் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி மகளிர் உரிமைத்தொகை 2,500 ரூபாய்க்கான அறிவிப்பை வெளியிடுவாரென்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம், முதியோர் உதவித்தொகை 3000 ரூபாய், மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகை 3,000 ரூபாய், மாணவர் களின் அம்மாக்களுக்கு ரூ.15,000 கல்வி உதவித்தொகை, இளைஞர்களுக்கு மாதாமாதம் 4,000 ரூபாய் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்பு கள் வருமென்று எதிர்பார்த்து புஸ்ஸானது! இந்நிலையில், நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த ஆட்சியில் கடன் சுமையுடன்தான் நிதிநிலை இருந்தது, அதை சரிசெய்ய இரண்டாண்டுகள் ஆகும் எனக் கூறியிருப்பதன் மூலம், அடுத்த இரண்டாண்டுகளுக்கு இதே நிலைதான் தொடருமென்று நம்பப்படுகிறது. இந்த பட்ஜெட் அறிவிப்பில் நிறைய முரண்பாடுகளை எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால உதவித் தொகையாக 20,000 ரூபாய் வழங்குவோ மென்று விஜய் பேசியிருந்தார். தேர்தல் அறிக்கையிலோ 27,000 ரூபாய் வழங்கப்படு மென்று குறிப்பிட்டார்கள். ஆனால் தற்போது பட்ஜெட் அறிவிப்பிலோ ஏழாயிரம் ரூபாய் வழங்கப்படு மென்று அறிவித்துள்ளார்கள். கடந்த ஆட்சியிலேயே 8000 ரூபாயாக வழங்கிய நிலை யில், தற்போது 7,000 ரூபாய் என்று அறிவித் திருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்கள்... தற்காலிகப் பணியாளர்களுக்கும் பணி நிரந்தரம் செய்யப்படுமென்று அறிவித்தார் கள். ஆனால் பட்ஜெட்டில் அதுகுறித்து எதுவுமே சொல்லப்படாதது அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், தூய்மைப்பணி யாளர்களை தனியார்மயமாக்கியதற்கு எதிராகக் கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த போராட் டத்துக்கு ஆதரவளித்த த.வெ.க., அவர்களை மீண்டும் அரசு ஊழியர்களாக்கி, பணி நிரந்தரம் செய்யப்படுமென்று அறிவித்தார்கள். ஆனால், தற்போதைய பட்ஜெட்டில் அதுகுறித்த எந்த அறிவிப்பும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், சென்னை மட்டுமல்லாது, தமிழ்நாடு முழுக்கவே தூய்மைப் பணியாளர்களை தனியார் மயமாக்குவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன. எனவே தூய்மைப்பணியாளர்கள் கடும் விரக்தியில் இருக்கிறார்கள். ஸ்டிக்கர் திட்டங்கள்! ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், சென்னை வெள்ளத்தின்போது சமூக ஆர்வலர்கள் அனுப்பிய உணவுப்பொருட்களில் அ.தி.மு.க.வினர் தங்கள் ஸ்டிக்கர்களை ஒட்டியது அப்போது கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதேபோல் தற்போது கடந்த ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பலவற்றுக்கும் பெயரை மாற்றி புதிய திட்டங்களைப்போல் அறிவித்திருக்கிறார்கள். கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட "கலைஞரின் கனவு இல்லம்' / "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்' என்பதன் பெயரை, அவர்களின் கட்சிப்பெயரை சொல்வது போல் "வெற்றி வீடு திட்டம்' என்று மாற்றியுள்ளார்கள். கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில், மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் முன்னேற்றத் துக்கான நூல்களை வாசித்துப் பயன்பெறும் வகையில் உருவாக்கப் பட்ட "முதல்வர் படைப்பகம்' திட்டமானது, "டிஜிட்டல் நூலகம்' என மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலங்களில் செயல்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் பெயரை, அவர்களின் கட்சிப் பெயரால், 'வெற்றி மடிக்கணினி திட்டம்' என்று மாற்றி அறிவித்துள்ளார்கள். நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தின் பெயரை "மண்ணின் மகள் திட்டம்' என்று மாற்றியுள்ளார்கள். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் சாலைகள், குடிநீர், தெருவிளக்குகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தக்கூடிய தொல்குடி திட்டத்தை "ஆன்றோர் மேம்பாட்டுத் திட்டம்' என்று பெயரை மாற்றியுள்ளார்கள். அயலக உயர் கல்வி உதவித் தொகை திட்டத்தின் பெயரை, "அண்ணல் அம்பேத்கர் அயல் நாட்டுக் கல்வி உதவித்தொகை திட்டம்' என்று பெயர் மாற்றம் செய்துள்ளார்கள். பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதற்காக கடந்த ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' என்பதன் பெயரை "பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' என்று பெயர் மாற்றியுள்ளார்கள். இதேபோல "மகளிர் விடியல் பயணம்' என்பதில் "விடியல்' என்ற சொல்லை மட்டும் தூக்கிவிட்டார்கள். நடிகர் விஜய் என்றாலே அவரது பெரும்பாலான படங்கள் ரீமேக் படங்களாகத்தான் இருக்கும். சமீபத்தில் வெளியான ஜனநாயகன் படம்வரை அதுதான் வழக்கம்... அதே ரீமேக் வழக்கம், அவரது அரசியலிலும் தொடர்வது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. அரசின் திட்டங்கள் மீது த.வெ.க. ஸ்டிக்கர் ஒட்டுவதை விமர்சனம் செய்துள்ளார். த.வெ.க. ஆட்சி வந்ததுமே 717 மதுபானக் கடைகளை மூடுவதாக அறிவிக்கப் பட்டது. போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோமென்று தெரிவித்த வர்கள், பட்ஜெட் உரையிலோ, மதுபான விற்பனையை ஆன்லைனிலும் கொண்டு வருவதாக அறிவித்திருப்பது பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் மது விற்பனையையும், மது குடிப்பவர்களின் எண்ணிக்கை யையும் அதி கரிக்கவே செய்யு மென்றும், இது மிகவும் ஆபத் தானது என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராம தாஸ் கண்டித் துள்ளார். இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில், மது ப்ரியர்களின் வேண்டுகோளுக்கேற்ப புகழ்பெற்ற மதுபான வகைகளை விற்பனைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், குறிப்பாக பீர்களின் அரசன் எனப்படும் பட்வைசர் வகை பீர்களை விற்பனை செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமென்று புன்னகையுடன் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதும், மதுபான விற்பனையை அதிகரிப்பதற்கான செயலில் இந்த அரசு இறங்கியிருப்பதையே வெளிப்படுத்துகிறது. கூடுதலாக, தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலாளர் சித்திக், கடந்த ஆண்டு மதுபான விற்பனை மூலம் 51,000 கோடி வருவாய் கிடைத்ததாகவும், இந்தாண்டு 56,000 கோடி வருமானத்தை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருப்பது இதனை உறுதிப்படுத்துகிறது! ரீல் வேறு! ரியல் வேறு! நடப்பு பட்ஜெட்டில், அண்ணன் சீர் என்ற திட்டத்தின்மூலம் திருமணமாகும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுச்சேலையும் வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக 812 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டமும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப் பட்ட 'தாலிக்கு தங்கம்' என்ற திட்டத்தின் ரீமேக் தான்! இதுதவிர, தாய்மாமன் சீர் என்ற பெயரில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் நிதி நிலை சரியில்லை என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே, இதுபோல் இலவசங்களை வழங்கி, தன்னை அண்ணனென்று, தாய்மாமனென்று விளம்பரப்படுத்திக்கொள்ளும் திட்டங்கள் அவசியம்தானா என்ற கேள்வி எழுகிறது. விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தில், தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் அறிவிக்கப்பட்ட இலவச தொலைக்காட்சி, இலவச மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி திட்டங்களையெல்லாம் கடுமையாக விமர்சித்து, அவற்றையெல்லாம் எடுத்து குப்பையில் வீசி நொறுக்குவது போல் காட்டியிருந்தார்கள். அதை யொட்டி, தமிழ்நாட்டிலுள்ள இளைஞர் கள் பலரும் தங்கள் வீட்டிலிருந்த இலவச தொலைக்காட்சி, மிக்ஸி போன்றவற்றை போட்டு உடைத்து வீடியோ எடுத்து வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி யிருந்தது. அத்திரைப்படம் வெளியாகி எட்டே ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்துள்ள விஜய், தனது திரைப்படத்தில் காட்டியதற்கு மாறாக, இலவசங்களை வாரிவழங்குவதில் ஆர்வம் காட்டுவது ஏன்? அப்படியானால் திரைப்படத்தில் காட்டியதெல்லாம் மக்களை ஏமாற்றத் தானா? என்றும் விமர்சனம் செய் கிறார்கள். இன்னொரு தரப்பினரோ, நம் அரசியலமைப்புச் சட்டமோ, வரதட் சணை வாங்குவதும், கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றமென்று கூறு கிறது. ஆனால் அரசாங்கமே அண்ணன் சீர் என்ற பெயரில் ஒரு பவுன் தங்கத்தை வழங்குவது வரதட்சணை தானே? இது சட்டத்தை மீறுவதாகாதா? என்றும் கேள்வியெழுப்புகிறார்கள். மொத்தத்தில் மாற்றம் என்று சொல்லிக்கொண்டும், தூய சக்தி என்று சொல்லிக்கொண்டும் இவர்கள் அறிவித்துள்ள முதலாவது குளறுபடியான பட்ஜெட் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது!

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
த.வெ.க. பட்ஜெட்! சர்ச்சைகளும், குளறுபடிகளும்!
PulseNews சுருக்கம்

தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் மரிய வில்சன் கடந்த புதன்கிழமை அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். முதல்வர் விஜய் தலைமையிலான இந்த அரசின் பட்ஜெட் உரையில், தேர்தல் வாக்குறுதிகளான மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500, ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகை ரூ.3,000 குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட விதம் மற்றும் அதில் உள்ள அம்சங்கள் தொடர்பாக தற்போது சர்ச்சைகளும் பல்வேறு குழப்பங்களும் நிலவி வருகின்றன. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட் அமையும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், அது தொடர்பான விவாதங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business