இந்தியாவின் முன்னணி 500 நிறுவனங்களில் பெண் சி.இ.ஒ-க்கள் எத்தனை பேர் தெரியுமா?; நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
எழுதியவர்: தீரஜ் மிஷ்ரா இந்தியாவில் வருவாய அடிப்படையில் முன்னணி 500 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 9 பெண் தலைமைச் செயல் அதிகாரிகளும் (சி.இ.ஒ) மற்றும் 25 பெண் மேலாண்மை இயக்குநர்களும் (எம்.டி) மட்டுமே உள்ளனர் என்று கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் மக்களவையில் சமர்ப்பித்த தரவுகள் தெரிவிக்கின்றன. ஆங்கிலத்தில் படிக்க: வருவாயின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட இந்த முன்னணி 500 நிறுவனங்களில், 67 பெண் நிர்வாக இயக்குநர்களும் (முழுநேர இயக்குநர்கள்) மற்றும் 22 பெண் தலைமை நிதி அதிகாரிகளும் (சி.எஃப்.ஒ) இருப்பதாக அந்தத் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர் தலைமைப் பொறுப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்தும், அவர்களின் வளர்ச்சியைப் பாதிக்கும் முக்கியத் தடைகள் குறித்தும் அரசு ஏதேனும் மதிப்பீடு செய்துள்ளதா என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிளர்ச்சி எம்.பி-யான சாயானி கோஷ் கேள்வி எழுப்பிருந்தார். அதற்கு திங்கள்கிழமை அரசு அளித்த பதிலில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பெண் இயக்குநர்களின் முன்னேற்றத்திற்கான தடைகள் குறித்து எந்த மதிப்பீடும் செய்யப்படவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் முன்னணி 500 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் மொத்தம் 638 சார்பற்ற இயக்குநர்களும், ஒட்டுமொத்தமாக 860 இயக்குநர்கள் அல்லது வாரிய உறுப்பினர்களும் உள்ளனர். இந்த இயக்குநர்களில் கூடுதல் இயக்குநர்கள் (18), இயக்குநர்கள் (738), மேலாண்மை இயக்குநர்கள் (25), பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர்கள்/Nominee directors (12) மற்றும் முழுநேர இயக்குநர்கள் (67) அடங்குவர். அனைத்து நிறுவனங்களிலும் பெண்களின் பங்களிப்பைப் பார்த்தால், செயலில் உள்ள நிறுவனங்களில் உள்ள மொத்தம் 39.99 லட்சம் இயக்குநர்களில் 11.60 லட்சம் பெண் இயக்குநர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர் என்று தரவுகள் காட்டுகின்றன. மாநிலங்கள் முழுவதும் மொத்தம் 21.39 லட்சம் நிறுவனங்களும், 5.06 லட்சம் எல்.எல்.பி நிறுவனங்களும் தற்போது செயலில் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 15.48 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எச்.டி.எப்.சி லைஃப் நிறுவனத்தின் விபா படால்கர், ஆதித்யா பிர்லா கேபிட்டலின் விசாகா மூல்யே, ஹிந்துஸ்தான் யுனிலீவரின் பிரியா நாயர், இந்திய மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் பிரவீனா ராய் (இவர் முன்னதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (என்.சி.பி.ஐ) தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றினார்), கோல்கேட் - பாமோலிவ் (இந்தியா) நிறுவனத்தின் பிரபா நரசிம்மன் மற்றும் டிஜிட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஜாஸ்லீன் கோஹ்லி ஆகியோர் நாட்டின் முன்னணி பெண் மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகளில் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். நிறுவனங்கள் சட்டம், 2013 மற்றும் நிறுவனங்கள் (இயக்குநர்கள் நியமனம் மற்றும் தகுதி) விதிகள், 2014 ஆகியவற்றின் படி, பட்டியலிடப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் மற்றும் செலுத்தி முடிக்கப்பட்ட மூலதனம் ரூ.100 கோடி அல்லது அதற்கு மேல் உள்ள அல்லது விற்றுமுதல் ரூ.300 கோடி அல்லது அதற்கு மேல் உள்ள பட்டியலிடப்படாத ஒவ்வொரு பொது நிறுவனமும் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநரையாவது அதன் நிர்வாகக் குழுவில் நியமிக்க வேண்டும். இதுதவிர, பெண் இயக்குநர் பதவியில் இடைக்காலக் காலியிடம் ஏற்படும் பட்சத்தில், அதை உடனடியாக அடுத்த வாரியக் கூட்டத்திலோ அல்லது காலியிடம் ஏற்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்ளோ வாரியத்தால் நிரப்பப்பட வேண்டும். மேலும், ஒரு பெண் இயக்குநருக்கு வழங்கப்படும் கூட்டக் கட்டணம் பிற இயக்குநர்களுக்கு வழங்கப்படும் கட்டணத்தை விடக் குறைவாக இருக்கக் கூடாது என்றும் விதிமுறை வழங்குகிறது. பெண் இயக்குநர்களை நியமிப்பதற்கான சட்டப்பூர்வத் தேவைகளை பூர்த்தி செய்யத் தவறியது தொடர்பான தரவுகளையும் கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் வழங்கியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், அதாவது 2021-22 முதல் 2025-26 வரை, நிறுவனங்களின் பதிவாளர்களால் மொத்தம் 50 தீர்ப்பு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, ரூ.71.01 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பதை இது காட்டுகிறது. இவற்றில் 2021-22-ல் இரண்டு ஆணைகளும், 2022-23-ல் 10, 2023-24-ல் 19, 2024-25-ல் 11 மற்றும் 2025-26-ல் 8 ஆணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் வருவாய் அடிப்படையில் முன்னணியில் உள்ள 500 நிறுவனங்களில் உள்ள பெண் உயர் அதிகாரிகளின் எண்ணிக்கை குறித்து மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த நிறுவனங்களில் 9 பெண் தலைமைச் செயல் அதிகாரிகளும் (சி.இ.ஒ) மற்றும் 25 பெண் மேலாண்மை இயக்குநர்களும் (எம்.டி) மட்டுமே பணியாற்றுகின்றனர்.
மேலும், இந்த முன்னணி நிறுவனங்களில் 67 பெண் நிர்வாக இயக்குநர்களும் (முழுநேர இயக்குநர்கள்) மற்றும் 22 பெண் தலைமை நிதி அதிகாரிகளும் (சி.எஃப்.ஒ) பொறுப்பு வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவல்களை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.