ரூ.2,000 மேல் யு.பி.ஐ. பண்ணா காசு பிடிப்பாங்களா? வெளியான புதிய அறிவிப்பு
இனி ரூ.2,000-க்கு மேல் யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தினால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா? என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. இதற்குக் காரணம், யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கும் வணிகர்களிடம் இருந்து எம்.டி.ஆர். கட்டணம் (MDR) வசூலிக்க வழிவகுக்கும் வகையில் மத்திய அரசு புதிய முன்மொழிவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திருப்பதுதான். ஆனால், இந்தக் கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது என்று அர்த்தமில்லை. மேலும், தனிநபர் ஒருவருக்கு மற்றொருவர் அனுப்பும் பணத்திற்கு இந்தக் கட்டணம் விதிக்கப்படாது எனத் தெரிகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இதில், 2007-ம் ஆண்டின் பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டத்தில் மாற்றம் செய்யும் முன்மொழிவும் இடம்பெற்றுள்ளது. தற்போது, அந்தச் சட்டத்தின் 10ஏ பிரிவின்படி, மின்னணு பணப் பரிவர்த்தனை முறைகளைப் பயன்படுத்துவதற்காக வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது. இந்தப் பிரிவில் உள்ள அந்தத் தடையை நீக்குவதற்கான முன்மொழிவுதான் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் யு.பி.ஐ. போன்ற மின்னணு பணப் பரிவர்த்தனைகளுக்கு எம்.டி.ஆர். கட்டணம் விதிப்பதற்கு அரசுக்கு சட்டரீதியான வாய்ப்பு கிடைக்கும். யு.பி.ஐ.க்கு 0.25 முதல் 0.4 சதவீதம் கட்டணமா? இதுதொடர்பாக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கட்டணத்தையும் அறிவிக்கவில்லை. ஆனால், டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட தகவலின்படி, ரூ.2,000-க்கு மேல் வணிகர்களுக்கு செய்யப்படும் யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனைகளுக்கு 0.25 சதவீதம் முதல் 0.4 சதவீதம் வரை எம்.டி.ஆர். கட்டணம் விதிக்க மத்திய அரசு அனுமதிக்கலாம் எனத் தெரிகிறது. அப்படி கட்டணம் விதிக்கப்பட்டாலும், அது நேரடியாக வாடிக்கையாளரிடம் வசூலிக்கப்படும் என்று இப்போதே கூற முடியாது. இதில் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது எம்.டி.ஆர். என்றால் என்ன? என்பதுதான். எம்.டி.ஆர். என்றால் என்ன? வாடிக்கையாளர் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் ஒரு கடையில் பணம் செலுத்தும்போது, அந்தப் பரிவர்த்தனையைச் செயல்படுத்தும் வங்கி அல்லது பணம் செலுத்தும் நிறுவனத்துக்கு வணிகர் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும். இதுதான் எம்.டி.ஆர். கட்டணம் (MDR) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பரிவர்த்தனைகளில் இந்தக் கட்டணம் பரிவர்த்தனைத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக இருக்கும். உதாரணமாக, ரூ.10,000-க்கு ஒரு பொருளை வாங்கி கார்டு மூலம் பணம் செலுத்தினால், அதற்கான பரிவர்த்தனைக் கட்டணத்தை வணிகரே ஏற்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் இந்தச் செலவை ஈடுகட்ட சில வணிகர்கள் வாடிக்கையாளரிடம் கூடுதல் தொகையை வசூலிப்பதும் உண்டு. ரூ.2,000-க்கு மேல் யு.பி.ஐ. செய்தால் நாம்தான் கட்டணம் செலுத்த வேண்டுமா? தற்போதைய முன்மொழிவின்படி அப்படி நேரடியாகக் கூற முடியாது. கிடைத்துள்ள தகவல்களின்படி, எதிர்காலத்தில் எம்.டி.ஆர். கட்டணம் விதிக்கப்பட்டால், ரூ.2,000-க்கு மேல் வணிக நிறுவனங்களுக்கு செய்யப்படும் யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனைகளுக்கே அது பொருந்தும். இந்தக் கட்டணம் வியாபாரிகளை மட்டுமே சார்ந்ததே தவிர, பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து நேரடியாகப் பிடிக்கப்படாது. உதாரணமாக, நீங்கள் ஒரு கடையில் ரூ.5,000 மதிப்புள்ள பொருளை வாங்கி யுபிஐ மூலம் பணம் செலுத்தினால், அந்தப் பரிவர்த்தனைக்கு எம்.டி.ஆர். விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், உங்கள் நண்பருக்கு அல்லது குடும்ப உறுப்பினருக்கு ரூ.5,000 யுபிஐ மூலம் அனுப்பினால், அதற்கு எம்.டி.ஆர். விதிக்கப்படாது எனத் தெரிகிறது. அதாவது, தனிநபருக்கு அனுப்பும் பணத்துக்கும், வணிகருக்கு செலுத்தும் பணத்துக்கும் வித்தியாசம் இருக்கும். கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளில் ஏற்கெனவே எம்.டி.ஆர். வசூலிக்கப்படுகிறது. டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அதிகபட்ச கட்டண வரம்புகளையும் நிர்ணயித்துள்ளது. சிறிய வணிகர்களுக்கு, கடை அல்லது இணையதளத்தில் டெபிட் கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சம் 0.40 சதவீதம் வரை எம்.டி.ஆர். வசூலிக்கலாம். QR குறியீடு மூலம் ஏற்கப்படும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு இந்த வரம்பு 0.30 சதவீதமாக உள்ளது. மற்ற வணிகர்களுக்கு, கடை அல்லது இணையதளப் பரிவர்த்தனைகளில் அதிகபட்சம் 0.90 சதவீதமும், QR குறியீடு மூலம் செய்யப்படும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளில் 0.80 சதவீதமும் எம்.டி.ஆர். விதிக்கப்படலாம். வாடிக்கையாளரிடம் எம்.டி.ஆர். வசூலிக்கலாமா? டெபிட் கார்டு பரிவர்த்தனைகளில் வணிகரிடம் வசூலிக்கப்படும் எம்.டி.ஆர். கட்டணத்தை வாடிக்கையாளரிடம் மாற்றிக் கொடுக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி ஏற்கெனவே வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. எனினும், சில வணிகர்கள் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது கூடுதல் கட்டணம் கேட்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிப்பது உண்டு. இதேபோல், எதிர்காலத்தில் யு.பி.ஐ.க்கு எம்.டி.ஆர். கட்டணம் அமல்படுத்தப்பட்டால், அந்தச் செலவை வாடிக்கையாளரிடம் நேரடியாக வசூலிக்க அனுமதி இருக்குமா என்பது முக்கியமான கேள்வியாக இருக்கும். எதற்காக இந்த மாற்றம்? இந்தியாவில் யுபிஐ பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளதால், அதற்கான தொழில்நுட்பக் கட்டமைப்பு, தரவுப் பாதுகாப்பு மற்றும் வங்கி அமைப்புகளைப் பராமரிக்க ஆயிரக்கணக்கான கோடிகள் செலவாகின்றன. வங்கிகள் மற்றும் பின்டெக் நிறுவனங்கள் இந்தச் சேவையைத் தொடர்ந்து தடையின்றி வழங்க வருவாய் தேவைப்படுவதால், பெரிய வியாபாரிகளுக்கான பரிவர்த்தனைகளில் சிறு கட்டணத்தை அறிமுகம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது இப்போது யுபிஐ பயன்படுத்துவோர் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்? முக்கியமாக, இப்போதே ரூ.2,000-க்கு மேல் யுபிஐ பணம் செலுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று நினைக்க வேண்டாம். தற்போது இது ஒரு சட்டத் திருத்த முன்மொழிவு மட்டுமே. யு.பி.ஐ.க்கு எவ்வளவு எம்.டி.ஆர். கட்டணம் விதிக்கப்படும், எந்தப் பரிவர்த்தனைகளுக்கு அது பொருந்தும், அந்தக் கட்டணத்தை வணிகரா அல்லது வாடிக்கையாளரா ஏற்க வேண்டும் என்பது குறித்து அரசு தெளிவான விதிமுறைகளை வெளியிட வேண்டும். அதுவரை, ரூ.2,000-க்கு மேல் யுபிஐ பணம் செலுத்தினால் கட்டாயம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலை உருவாகவில்லை. சுருக்கமாகச் சொன்னால், யுபிஐக்கு எம்.டி.ஆர். வருவதற்கான கதவு திறக்கப்பட்டிருக்கிறது; ஆனால் கட்டணம் எப்போது, எப்படி விதிக்கப்படும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனைகளுக்கு எம்.டி.ஆர். (MDR) கட்டணம் வசூலிக்கும் வகையிலான சட்டத் திருத்த முன்மொழிவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மசோதாவில், மின்னணு பணப் பரிவர்த்தனை முறைகளுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற தடையை நீக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இது உடனடி அமலுக்கு வரவில்லை என்பதையும், தனிநபர்களுக்கு இடையேயான பரிமாற்றங்களுக்கு இது பொருந்தாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தில் வணிகர்களுக்குச் செய்யப்படும் ரூ.2,000-க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு 0.25 சதவீதம் முதல் 0.4 சதவீதம் வரை கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கட்டணம் விதிக்கப்பட்டால் அது வணிகர்களைச் சார்ந்ததே தவிர, வாடிக்கையாளர்களிடம் நேரடியாக வசூலிக்கப்படுமா என்பது குறித்த தெளிவான விதிமுறைகளை அரசு இன்னும் வெளியிடவில்லை. எனவே, தற்போது யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும்போது கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.