4 நிமிட ஜூம் அழைப்பில் 900 பேரை தூக்கிய சி.இ.ஓ-வுக்கு அதே கதில் 'என்னை ஏமாத்திட்டாங்க' - புலம்பும் விஷால் கார்க்
முன்னணி மோர்ட்கேஜ் நிறுவனமான 'பெட்டர் ஹோம் & ஃபைனான்ஸ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த இந்திய - அமெரிக்க தொழிலதிபர் விஷால் கார்க், கடந்த 2021-ம் ஆண்டில் ஒரு ஜூம் அழைப்பின் மூலம் தனது 900-க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்து இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர். இம்மாத தொடக்கத்தில் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகத் திரும்ப அவர் முயற்சித்து வருகிறார். ஆங்கிலத்தில் படிக்க: தனக்குப் பதிலாகச் புதிய சி.இ.ஓ-வாகப் பொறுப்பேற்ற டேனியல் லூயிஸ், நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பு தனது உண்மையான எண்ணங்களை மறைத்து தம்மை ஏமாற்றிவிட்டதாக விஷால் கார்க் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சி.என்.என் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், லூயிஸ் நிறுவனத்தின் வியூகங்களை வெளிப்படையாக ஆதரித்து, இயக்குநர் குழு மற்றும் பிற அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெற்று, இறுதியாக உச்சப் பதவியைக் கைப்பற்றிவிட்டதாக கார்க் தெரிவித்துள்ளார். விஷால் கார்க் தனது சி.இ.ஓ பதவியை எப்படி இழந்தார்? "அவர் என்னை ஏமாற்றிவிட்டார்" என்று சி.என்.என்-னிடம் பேசிய கார்க் கூறினார். "எங்கள் நிறுவனத்தின் வியூகம் அவருக்குப் பிடித்திருப்பதாகக் கூறினார். எக்ஸ் தளத்தில் எங்களைப் பாராட்டிப் பதிவிட்டு, அதைப் பயன்படுத்தி எங்கள் இயக்குநர் குழுவில் இணைந்து எங்கள் நம்பிக்கையையும் பெற்றார்" என்று அவர் குறிப்பிட்டார். லூயிஸ் ஜூலை 27-ல் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இணைந்த நிலையில், ஒரே வாரத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி அவர் இடைக்கால சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டார். இந்தத் தலைமை மாற்றத்திற்கு விஷால் கார்க்கும் இயக்குநர் குழுவும் "பரஸ்பரம் சம்மதித்ததாக" முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கார்க்கின் "முடிவெடுக்கும் திறன், கோபமான இயல்பு மற்றும் நம்பகத்தன்மை" குறித்த கவலைகளைச் சுட்டிக்காட்டி, கார்க்கைத் தவிர்த்து ஏனைய இயக்குநர் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக அவரைப் பதவியிலிருந்து நீக்க வாக்களித்ததாக நிறுவனம் பின்னர் தெரிவித்தது. இருப்பினும், பல ஆண்டுகால நிதி நெருக்கடியிலிருந்து 'பெட்டர்' நிறுவனம் மீண்டு வரத் தொடங்கிய தருணத்திலேயே தனது பதவி பறிக்கப்பட்டதாக கார்க் கூறுகிறார். தொற்றுநோய்க் காலத்தில் கடன் மறுநிதியளிப்புப் பிரிவில் ஏற்பட்ட வளர்ச்சியால் சுமார் 8 பில்லியன் டாலர் மதிப்பீட்டைக் கொண்டிருந்த இந்நிறுவனம், வட்டி விகிதங்களின் உயர்வு மற்றும் மறுநிதியளிப்பு வர்த்தகத்தின் வீழ்ச்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. நிறுவனத்தின் வருடாந்திர விற்பனை 2021-ல் 1.5 பில்லியன் டாலரிலிருந்து 2023-ல் 70 மில்லியன் டாலராகக் குறைந்ததாக அவர் பகிர்ந்துகொண்டார். ஆனால், தங்களின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) சார்ந்த கடன் செயலாக்கத் தொழில்நுட்பம் மற்றும் வியூகக் கூட்டாண்மைகள் மூலம், நடப்பு ஆண்டில் நிறுவனம் சுமார் 200 மில்லியன் டாலர் வருவாயை ஈட்டும் பாதையில் உள்ளதாக அவர் உரிமை கோருகிறார். "நாங்கள் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்; கடன் வழங்லை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளோம்; லாபத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்" என்று கூறிய கார்க், "விளையாட்டு மைதானத்தின் மறுமுனையிலிருந்து பந்தை இலக்குக் கோட்டின் 5-யார்டு எல்லை வரை கொண்டு வந்த பிறகு, நாங்கள் வெற்றிக்கு மிக அருகில் இருந்தோம்" என்றும் தெரிவித்தார். ஜூலை 27-ல் இயக்குநர் குழுவில் சேருவதற்கு முன்பாக, செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் லாபத்தை அதிகரிப்பது குறித்து லூயிஸ் பல மாதங்களாக கார்க்கிற்கு ஆலோசனைகளை வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆரம்பத்திலிருந்தே சி.இ.ஓ ஆக வேண்டும் என்பதே லூயிஸின் நோக்கமாக இருந்திருக்கலாம் என்று கார்க் தற்போது சந்தேகிக்கிறார். மேலும் "இயக்குநர் குழு ஒரு தவறான முடிவை எடுத்துவிட்டது" என்றும் அவர் கருதுகிறார். பதவியிலிருந்து நீக்கப்பட்ட போதிலும், விஷால் கார்க் இன்னும் 'பெட்டர்' நிறுவனத்தின் இயக்குநர் குழு உறுப்பினராக நீடிக்கிறார். அவர் நீக்கப்பட்ட பிறகு பல முதலீட்டாளர்கள் அவரைத் தொடர்புகொண்டு, மீண்டும் சி.இ.ஓ-வாகப் பொறுப்பேற்குமாறு ஊக்குவித்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஆரம்பகால முதலீட்டாளர்களின் ஆதரவு உட்பட, நிறுவனத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றுவதற்குத் தேவையான வாக்கு வலிமை தன்னிடம் இருப்பதாக கார்க் உரிமை கோருகிறார். இதற்காக 'குவின் இமேனுவல்' நிறுவனத்தின் பிரபல வழக்கறிஞர் அலெக்ஸ் ஸ்பைரோவை அவர் நியமித்துள்ளதுடன், தம்மை மீண்டும் சி.இ.ஓ-வாக நியமிக்க வேண்டும் என்று பெட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிடம் முறைப்படி வலியுறுத்தியுள்ளார். மேலும், நிறுவனம் லாபகரமானதாக மாறும் வரை ஆண்டிற்கு 1 டாலர் ஊதியத்தில் வேலை செய்யத் தயார் என்றும், நிறுவனம் லாபமடைந்த பிறகு தான் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாகவும் அவர் சலுகை அளித்துள்ளார். "கடந்த 10 ஆண்டுகளாக நான் இதைச் செய்து வருகிறேன், ஆனால், அதைக் கொண்டுசென்ற விதம் சரியாக அமையவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்" என்று கூறிய கார்க், "இந்தப் பிரச்னை சுமூகமாகத் தீர்க்கப்படும் என நம்புகிறேன்; பெட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் இன்னும் பிரகாசமாகவே உள்ளது" என்றும் முடித்தார்.

பெட்டர் ஹோம் & ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்த விஷால் கார்க், கடந்த 2021-ம் ஆண்டு ஜூம் செயலி வாயிலாக ஒரே நேரத்தில் 900-க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து சர்ச்சையில் சிக்கினார். இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தற்போது அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் மீண்டும் சேர விஷால் கார்க் முயற்சித்து வருகிறார். தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.