சென்னையில் சொத்து வரி 3.45 லட்சம் பேருக்கு உயர்வா? ஒரே நாளில் ரூ 10 கோடி வசூல்..! மறுமதிப்பீட்டு நோட்டீஸ் பின்னணி..
“கடந்த ஆண்டு 9 ஆயிரம் ரூபாய் தான் சொத்து வரி கட்டினேன், இந்த ஆண்டு 23 ஆயிரம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறாங்க”, “வெறும் மெசேஜிலும், ரீல்ஸிலும் ஆட்சி நடத்த முடியாது” என்று ஆதாங்கப்பட்டார் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். “கடந்த ஆண்டு வரை 1030 ரூபாய் தான் வரி செலுத்தினேன் இந்த முறை 3000 ரூபாய்க்கு மேல் வரை கட்ட சொல்றாங்க “ என்று அங்கலாய்த்துக் கொண்டார் மத்திய அரசு ஊழியர் ஒருவர். “30 வருஷ பழைய வீட்டுக்கு போய் கூடுதல் வரி விதிச்சிருக்காங்க.. நான் கட்டிட்டேன்”. “இருந்தாலும் அந்த பணத்தை திருப்பி தரக்கோரி புகார் தெரிவித்து உள்ளேன்” என ஒருவர் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி பகுதியில் குயிருப்போரின் திடீர் ஆதங்க குரலுக்கு என்ன காரணம் ? என்று மாநகராட்சி ஆணையர் சமீரனை தொடர்பு கொண்டோம். சென்னை மாநகராட்சி பகுதியில் 14.50 லட்சம் பேர் வரி செலுத்துவோராக உள்ள நிலையில் , தங்களுடைய அரசியல் செல்வாக்கு, மற்றும் அதிகாரிகளை கைக்குள் வைத்துக் கொண்டு 3லட்சத்து 45 ஆயிரம் பேர் , ஆரம்பத்தில் இருந்த வீட்டின் அளவுக்கு மட்டுமே சொத்து வரி செலுத்தி வந்தது, ட்ரோன் மூலம் ஜி.ஐ.எஸ். நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட வீடு மற்றும் நில சர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அவர்கள் கணக்கில் காட்டாமல் இருந்த குடியிருப்பு பகுதிக்கும், காலி மனைக்கும் சேர்த்து சதுர அடிக்கு தகுந்த சரியான வரி தற்போது விதிக்கப்பட்டுள்ளது. அந்த வரியை கட்டச்சொல்லி சம்பந்தப்பட்ட வீடு மற்றும் நில உரிமையாளர்களின் செல்போனுக்கு குறுந்தகவலும், வீட்டு முகவரிக்கு , சொத்து வரி மறுமதிப்பீட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. மற்ற படி ஒரு ரூபாய் கூட சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். ஒரே நாளில் 28 ஆயிரம் பேர் 10 கோடி ரூபாயை வரியாக செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு வேளை இந்த புதிய சர்வே முறையில் ஏதாவது குறைபாடு இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளிக்கும் வசதியும் உள்ளது என்று மாநகராட்சி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த புதிய முறையில் மாற்றி அமைக்கப்பட்ட வரி வசூலுக்கு புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது, சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்புகள் உருவானது. இந்த நிலையில் மறுமதிப்பீட்டு சொத்துவரி வசூலை நிறுத்திவிட்டு மீண்டும் பழையபடியே சொத்து வரி வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சமீரன் அறிவித்துள்ளார்.

சென்னையில் சொத்து வரி மறுமதிப்பீட்டு நோட்டீஸ்கள் வழங்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் 10 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. சுமார் 3.45 லட்சம் பேருக்கு வரி உயர்வு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொத்து வரி திடீரென பல மடங்கு உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் தனது வரி 9 ஆயிரத்தில் இருந்து 23 ஆயிரமாக உயர்ந்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதேபோல் 30 ஆண்டுகள் பழமையான வீடுகளுக்கும் வரி உயர்த்தப்பட்டிருப்பதுடன், வரி செலுத்திய பிறகும் பணத்தைத் திரும்பப் பெறுவது குறித்துப் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.