PulseNews
வணிகம்

கொள்முதல் விலையை உயர்த்துக; திருச்சியில் பால் நிறுத்த போராட்டம்: ஆவின் பால் தட்டுப்பாடு அபாயம்

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் பால் நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகம் செய்வது பாதிக்கப்பட்டுள்ளதால், திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. ஆவினுக்கு பால் வழங்க விவசாயிகள் தயக்கம் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்து வருகிறது. ஆரம்ப காலங்களில் பெரும்பாலான விவசாயிகள் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு சென்று பால் விற்பனை செய்து வந்தனர். ஆனால், அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், ஆவினுக்கு பால் வழங்குவதை தவிர்த்து, அதிக விலை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு பாலை விற்பனை செய்து வருகின்றனர். தற்போது ஆவின் நிறுவனம் சராசரியாக ஒரு லிட்டர் பாலை ரூ.34-க்கு கொள்முதல் செய்வதாகவும், தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டருக்கு ரூ.50 வரை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் தனியார் நிறுவனங்களுக்கு பால் விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரூ.10 உயர்த்த வேண்டும் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்த வேண்டும் என விவசாயிகள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் மற்றும் ஆவின் பிரதம சங்கங்களின் பணியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் கால்நடை தீவனங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதுடன், தீவனத்துக்கான மானியமும் நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. எனவே, தற்போதைய கொள்முதல் விலை போதுமானதாக இல்லை என அவர்கள் கூறுகின்றனர். தினசரி பால் கொள்முதல் குறைந்தது தமிழ்நாட்டில் 8,800 பால் கூட்டுறவு சங்கங்களில் சுமார் 3 லட்சத்து 16 ஆயிரம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினசரி 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஆவின் நிறுவனம் மூலம் நாளொன்றுக்கு சுமார் 31 லட்சம் லிட்டர் பால் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்துவதாக சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால், இந்த உயர்வு போதாது என்றும், குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே, ஆவினுக்கு தினசரி கொள்முதல் செய்யப்பட்டு வந்த பால் அளவு 35 லட்சம் லிட்டரில் இருந்து தற்போது 28 லட்சம் லிட்டராக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது மேலும் குறைந்து 25 லட்சம் லிட்டராகும் வாய்ப்புள்ளதாகவும் பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். பால் நிறுத்த போராட்டம் தனியார் நிறுவனங்கள் ஆவினை விட லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை கூடுதல் விலை வழங்குவதால், விவசாயிகள் தனியார் நிறுவனங்களை நாடி வருகின்றனர். இதனால் ஆவினுக்கான பால் கொள்முதல் தொடர்ந்து சரிந்து வருவதாக பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்காக ஆகஸ்டு 23-ந் தேதி வரை அரசுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. அதற்குள் நல்ல முடிவு அறிவிக்கப்படாவிட்டால் ஆகஸ்டு 24-ந் தேதி முதல் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று முதல் தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான பால் உற்பத்தியாளர்கள் இன்று காலை ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு சென்ற ஆவின் வாகனங்கள் பால் கிடைக்காமல் திரும்பும் நிலை ஏற்பட்டது. திருச்சியில் ஆர்ப்பாட்டம் பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி திருச்சி மாவட்டம் கோப்பு அருகே உள்ள அயிலாப்பேட்டை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், தமிழகம் முழுவதும் சுமார் 13 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதில் இன்று சுமார் 10 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். திருச்சியில் ஒரு லட்சம் லிட்டர் பால் விநியோகம் பாதிப்பு திருச்சி மாவட்டத்தில் சுமார் 350 பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 20 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர். தினமும் சுமார் 2 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும் நிலையில், அதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான லிட்டர் ஆவின் நிறுவனத்துக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது போராட்டம் காரணமாக ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகம் செய்யும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அயிலை சிவசூரியன் கூறுகையில், “தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். அதே நேரத்தில் விவசாயிகளும், ஆவின் நிறுவனமும் பாதிக்காத வகையில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என்றார். ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகம் செய்வதை நிறுத்தியுள்ளதால், ஆவின் பால் பண்ணைகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே திருச்சி ஆவின் பால் பண்ணையில் கொள்முதல் செய்யப்படும் பால் சென்னைக்கும் அனுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் திருச்சியில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த பிரச்சினைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதே பால் உற்பத்தியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கொள்முதல் விலையை உயர்த்துக; திருச்சியில் பால் நிறுத்த போராட்டம்: ஆவின் பால் தட்டுப்பாடு அபாயம்
PulseNews சுருக்கம்

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி, தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் பால் நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விநியோகத் தடையால் திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. ஆவின் நிறுவனம் மாவட்ட பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து வரும் நிலையில், விவசாயிகள் பால் வழங்கத் தயக்கம் காட்டி வருகின்றனர்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business