உஸ்பெகிஸ்தான் அதிபரை சந்தித்த மோடி; யுரேனியம் விநியோகம் குறித்து பேச்சுவார்த்தை: 5 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு
எழுதியவர்: சுபஜித் ராய் தாஷ்கண்டில் ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்காத் மிர்சியோயேவ் ஆகியோர் நேரில் சந்தித்து கொண்டனர். அப்போது, இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான உறவை 'விரிவான மூலோபாயக் கூட்டாண்மை' (Comprehensive Strategic Partnership) நிலைக்கு உயர்த்த முடிவு செய்துள்ளன. நீண்டகால யுரேனியம் விநியோகத்திற்கான கட்டமைப்பை உருவாக்குவது குறித்து விவாதித்துள்ளன. மேலும் 2030-ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தக இலக்கை 5 பில்லியன் டாலராக நிர்ணயித்துள்ளன. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "வர்த்தகம் மற்றும் முதலீடு, உள்கட்டமைப்பு, முக்கியமான கனிமங்கள், சுரங்கம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத்துறை, கண்டுபிடிப்பு, விவசாயம், மருந்தாக்கம், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், யுபிஐ (UPI) உட்பட டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் கல்வி உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை விரிவாக்குவதில் இந்தப் பேச்சுவார்த்தை கவனம் செலுத்தியது. 2030-ஆம் ஆண்டிற்குள் 5 பில்லியன் டாலர் இருதரப்பு வர்த்தகத்தை எட்ட அவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்," என்று தெரிவித்துள்ளார். மேலும், "சுரங்கம், கலாச்சாரம், கல்வி, சுற்றுலா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டதை இரு தலைவர்களும் நேரில் பார்வையிட்டனர். உஸ்பெகிஸ்தானில் உள்ள பயாஸ் தேபா (Fayaz Tepa) மற்றும் காரா தேபா (Kara Tepa) ஆகிய பௌத்த தளங்களை மீட்டெடுப்பது மற்றும் பாதுகாப்பதற்கான விருப்பக் கடிதமும் ஒப்புக்கொள்ளப்பட்டது" என்றார். இரண்டு நாள் பயணம் வர்த்தகம், தூய்மையான ஆற்றல் மற்றும் இணைப்பு உள்ளிட்ட துறைகளில் உஸ்பெகிஸ்தான் உடனான உறவை வலுப்படுத்துவதற்காக மோடி சனிக்கிழமை இரண்டு நாள் பயணமாக தாஷ்கண்ட் வந்தடைந்தார். பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அணுசக்தியை உற்பத்தி செய்ய உஸ்பெகிஸ்தானிடமிருந்து யுரேனியத்தைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு முயன்று வருகிறது. நாங்கள் முன்னோக்கி செல்வோம் - மோடி "எங்களது மூலோபாயக் கூட்டாண்மையின் 15-வது ஆண்டை நாங்கள் கொண்டாடுகிறோம். இந்தச் சிறப்புமிக்க தருணத்தில், எங்களது உறவை 'விரிவான மூலோபாயக் கூட்டாண்மை' நிலைக்கு உயர்த்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று மோடி கூறினார். தொடர்ந்து "இந்தக் கட்டமைப்பிற்குள் உறுதியான இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலம் நாங்கள் முன்னோக்கிச் செல்வோம்" என்றார். "நேற்று இரவு உணவின் போது எங்களிடையே பயனுள்ள உரையாடல் நடந்தது, மேலும் பல முக்கியமான முடிவுகளை எடுத்தோம்," என்று மோடி கூறினார். "எங்களது நெருங்கிய ஒருங்கிணைப்பு மூலம் எங்களது ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களுக்கும் வழிகாட்ட வெளியுறவு அமைச்சர்கள் தலைமையில் ஒரு ஒருங்கிணைப்புக் குழுவை நாங்கள் அமைப்போம். தற்போதுள்ள கூட்டுக் குழுவை செயலாளர்கள் நிலையிலிருந்து அமைச்சர் நிலைக்கு உயர்த்த இரு தரப்பும் நடவடிக்கை எடுக்கும். இரு நாடுகளையும் சேர்ந்த தொழிலதிபர்கள் பங்கேற்கும் வணிக உச்சிமாநாட்டை இரு தரப்பும் இணைந்து நடத்தும். யுரேனியம் விநியோகத்திற்கு நீண்டகால ஏற்பாட்டையும் நாங்கள் அமைப்போம்” என்றார். அதிபர் மிர்சியோயேவ் உடனான இரவு உணவுச் சந்திப்பு மத்திய ஆசியாவிற்கான மோடியின் நான்கு நாள் பயணம் சனிக்கிழமை தாஷ்கண்டில் மிர்சியோயேவ் உடனான இரவு உணவுச் சந்திப்புடன் தொடங்கியது. அப்போது வர்த்தகம், சுற்றுலா, சுகாதாரம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த இரு தரப்பும் உறுதியளித்தன. சனிக்கிழமை காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட மோடி, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை பிஷ்கெக்கில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார். விமான நிலையத்தில் மோடியை மிர்சியோயேவ் நேரில் வந்து வரவேற்றார். இதுகுறித்து மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "அதிபர் ஷவ்காத் மிர்சியோயேவின் உற்சாகமான வரவேற்புடன் தாஷ்கண்டில் தரையிறங்கினேன். இந்தச சிறப்பு ஏற்பாட்டிற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உஸ்பெகிஸ்தானிற்கு நான் மேற்கொள்ளும் நான்காவது பயணம் இதுவாகும். இது நமது இருதரப்பு உறவுகளின் ஆழத்தையும் வளர்ந்து வரும் வேகத்தையும் பிரதிபலிக்கிறது," என்று பதிவிட்டார். மோடி மிர்சியோயேவ் உடன் இணைந்து தாஷ்கண்டில் உள்ள யங்கி உஸ்பெகிஸ்தான் நினைவிடத்தைப் பார்வையிட்டு அங்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உஸ்பெகிஸ்தான் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட யோகா நிகழ்ச்சியையும் அவர் பார்வையிட்டார்.

தாஷ்கண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்காத் மிர்சியோயேவும் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை ‘விரிவான மூலோபாயக் கூட்டாண்மை’ நிலைக்கு உயர்த்துவதற்குத் தலைவர்கள் முடிவு செய்தனர்.
இந்தியாவுக்குத் தேவையான யுரேனியத்தை நீண்டகால அடிப்படையில் விநியோகம் செய்வதற்கான கட்டமைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மேலும், 2030-ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தக இலக்கை 5 பில்லியன் டாலராக உயர்த்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.