PulseNews
வணிகம்

9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கையிருப்பு குறைவு, ஒரே மாதத்தில் ரூ20 அதிகம்: சர்க்கரை விலை உயர்வுக்கு காரணம் என்ன?

நடப்பு ஆண்டில் அக்டோபர் 20ஆம் தேதி தசரா, நவம்பர் 20-ந் தேதி தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. ஆனால், பண்டிகைக் காலம் தொடங்குவதற்கு முன்பே சர்க்கரையின் விலை கசப்பை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது. நுகர்வோர் விவகாரத் துறையின் தகவலின்படி, பெரும்பாலான கொள்முதல்கள் மேற்கொள்ளப்படும் விலையைக் குறிக்கும் அகில இந்திய சராசரி சில்லறை விலை, நேற்று (ஆகஸ்ட் 21) கிலோ ஒன்றுக்கு ரூ.65 ஆக இருந்தது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: ஜூலை 21ஆம் தேதி இது ரூ.45 ஆக மட்டுமே இருந்த நிலையில், ஜூலை 31ஆம் தேதிக்குள் ரூ.50 ஆக உயர்ந்தது. தற்போது ரூ65-ஆக உயர்ந்துள்ளது. எளிமையாகச் சொல்வதானால், ஒவ்வொரு தீபாவளி இனிப்பிலும், கேட்பெரி செலிபிரேஷன்ஸ், நெஸ்ட்லே, கிட்கேட் ஃபெரேரிரோ ரோச்சர் (Cadbury Celebrations, Nestlé KitKat அல்லது Ferrero Rocher) போன்ற சாக்லேட்களிலும் முக்கிய மூலப்பொருளாக இருக்கும் சர்க்கரையின் சில்லறை விலை, ஒரே மாதத்தில் கிலோவுக்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளது. சர்க்கரை ஆலைகளிலிருந்து நேரடியாக விற்பனை செய்யப்படும் சர்க்கரையின் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. பொருட்கள் மற்றும் விற்பனை வரியை கழித்த பிறகு ஆலைகளுக்கு கிடைக்கும் இந்த விலை, ஆகஸ்ட் 20ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் கிலோவுக்கு ரூ.57–60, மகாராஷ்டிராவில் ரூ.62.5–64, கர்நாடகாவில் ரூ.63–64 ஆக இருந்தது. ஆகஸ்ட் 1ஆம் தேதி இதே மூன்று மாநிலங்களில் முறையே ரூ.44.95–46.7, ரூ.46.2–46.9 மற்றும் ரூ.46.25–47 ஆக இருந்தது. இந்த திடீர் விலை உயர்வுக்கு என்ன காரணம்? முக்கிய காரணம் எதிர்பார்த்ததைவிட குறைந்த சர்க்கரை உற்பத்தியும், கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த சர்க்கரை கையிருப்பும்தான். 2025 நவம்பர் தொடக்கத்தில், இந்திய சர்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கம் (ISMA), 2025-26 சர்க்கரைப் பருவத்தில் (அக்டோபர்–செப்டம்பர்) இந்தியாவின் மொத்த சர்க்கரை உற்பத்தி 343.5 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிட்டிருந்தது. இதில் 34 லட்சம் டன் சர்க்கரை எத்தனால் தயாரிப்புக்கு திருப்பிவிடப்படும் எனக் கணக்கிட்ட பின்னர், நிகர சர்க்கரை உற்பத்தி 309.5 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. சர்க்கரை இருப்புநிலைக் குறிப்பு ஆனால், சமீபத்திய தொழில்துறை மதிப்பீடுகளின்படி, மொத்த சர்க்கரை உற்பத்தி 309 லட்சம் டன்னாகவும், எத்தனால் தயாரிப்புக்காக 30 லட்சம் டன் சர்க்கரை திருப்பிவிடப்பட்டதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் நிகர சர்க்கரை உற்பத்தி 279 லட்சம் டன்னாக மட்டுமே இருக்கும். இந்தியாவின் தனியார் சர்க்கரை ஆலைகளின் உச்ச அமைப்பு முதலில் கணித்த அளவைவிட இது 30.5 லட்சம் டன் குறைவாகும். சர்க்கரைப் பருவம் தொடங்கியபோது 50 லட்சம் டன்னுக்கும் சற்று அதிகமான தொடக்க கையிருப்பு இருந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டின் உற்பத்தியையும் சேர்த்தால் கிடைக்கும் மொத்த சர்க்கரை சுமார் 329 லட்சம் டன்னாக இருக்கும். இதில் உள்நாட்டு நுகர்வான 280 லட்சம் டன்னையும், ஏற்றுமதியான 8 லட்சம் டன்னையும் கழித்தால், இந்தப் பருவத்தின் இறுதியில் சுமார் 41 லட்சம் டன் சர்க்கரை கையிருப்பில் இருக்கும். இது 2016-17ஆம் ஆண்டில் இருந்த 39.4 லட்சம் டன்னுக்குப் பிறகு காணப்படும் மிகக் குறைந்த கையிருப்பாகும். 2025-26 பருவத்தின் தொடக்க கையிருப்பு 50.03 லட்சம் டன் அல்ல; 48 லட்சம் டன் மட்டுமே என தொழில்துறையைச் சேர்ந்த சிலர் கூறுகின்றனர். அது உண்மையாக இருந்தால், இந்தப் பருவத்தின் இறுதி சர்க்கரை கையிருப்பு 39 லட்சம் டன்னாக இருக்கும். இது 2008-09ஆம் ஆண்டுக்குப் பிறகு காணப்படும் மிகக் குறைந்த அளவாகும். உற்பத்தி மதிப்பீடுகள் ஏன் இவ்வளவு தவறாகிப் போனது? கடந்த ஆண்டு செப்டம்பர்–அக்டோபர் மாதங்களில் தென்மேற்கு பருவமழை தாமதமாக விலகியதுடன், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத்தில் அதிகப்படியான மழை பெய்ததால் கரும்புப் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதன் விளைவாக வயல்களில் தண்ணீர் தேங்கியதுடன், போதிய சூரிய ஒளியும் கிடைக்கவில்லை. இதனால் வளர்ந்து கொண்டிருந்த கரும்புப் பயிர்களுக்கு தேவையான காற்றோட்டமும் சூரிய ஒளியும் குறைந்தன. இதன் காரணமாக கரும்பின் வளர்ச்சியும், தண்டுகளில் சுக்ரோஸ் சேர்வதும் பாதிக்கப்பட்டு, விளைச்சலும் சர்க்கரை ஆலைகளின் சர்க்கரை மீட்பு விகிதமும் குறைந்தன. நவம்பர் மாதத்தில் ஐ.எஸ்.எம்.ஏ (ISMA) மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் சர்க்கரை உற்பத்தி முறையே 130 லட்சம் டன் மற்றும் 63.5 லட்சம் டன்னாக இருக்கும் என கணித்திருந்தது. ஆனால், அந்த மாநிலங்களின் ஆலைகள் முறையே 99.2 லட்சம் டன் மற்றும் 47.2 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்தன. உத்தரப் பிரதேச சர்க்கரை ஆலைகளும் முன்பு கணிக்கப்பட்ட 103.2 லட்சம் டன்னுக்கு பதிலாக 89.7 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்துள்ளன. இதற்கு ‘ரெட் ராட்’ எனப்படும் பூஞ்சை நோயும், ‘டாப் ஷூட் போரர்’ எனப்படும் பூச்சித் தாக்குதலும் முக்கிய காரணங்களாகும். அந்த மாநிலத்தில் அதிகம் பயிரிடப்படும் Co-0238 கரும்பு ரகம், இந்த நோய் மற்றும் பூச்சித் தாக்குதல்களுக்கு அதிகளவில் பாதிக்கப்படத் தொடங்கியுள்ளது. இதன் தாக்கம் கரும்பு விளைச்சல் மற்றும் சர்க்கரை மீட்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள இழப்புகளில் வெளிப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சர்க்கரையின் சராசரி ஆலை விலை, 2025 செப்டம்பர் முதல் 2026 ஏப்ரல் வரை கிலோவுக்கு ரூ.38.31-லிருந்து ரூ.36.98 ஆகக் குறைந்தது. பின்னர் ஜூன் மாதத்தில் ரூ.38.23 ஆக உயர்ந்தது. ஜூலை மாதத்தில்தான் விலை கணிசமாக உயர்ந்து, சராசரியாக கிலோவுக்கு ரூ.41.85 ஆக இருந்தது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது, எதிர்பாராத உற்பத்திக் குறைவும், ஆலைகளிடம் உண்மையில் எவ்வளவு சர்க்கரை கையிருப்பில் உள்ளது என்ற சந்தேகமும் ஆகும். பணப்புழக்க நெருக்கடியில் இருந்த சில ஆலைகள், அரசால் நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர ஒதுக்கீட்டை விட அதிகமாக சர்க்கரையை ஏற்கனவே விற்றுவிட்டன. எனவே, அவற்றிடம் சர்க்கரை கையிருப்பு மிகவும் குறைவாக இருந்தது. அவை தெரிவித்த கையிருப்பு எண்ணிக்கை வெறும் காகிதத்தில் மட்டுமே இருந்தது” என்று தொழில்துறை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். இரண்டாவது காரணம் இந்த ஆண்டின் பருவமழை. ஜூன் மாதத்தில், குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் மழைப்பொழிவு குறைவாக இருந்தது. இதனால் அடுத்த 2026-27 சர்க்கரைப் பருவத்திலும் கரும்பு விளைச்சலும் சர்க்கரை உற்பத்தியும் பாதிக்கப்படும் என வர்த்தகர்கள் கருதத் தொடங்கினர். பெரிய வணிகர்கள் மற்றும் கையிருப்பு வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாமல், மொத்தமாக சர்க்கரையைப் பயன்படுத்தும் தொழில்துறை நிறுவனங்களும் ஜூலைக்கு முன்பே சர்க்கரையை வாங்கத் தொடங்கின. ஆகஸ்ட் மாதம் முதல், சில சர்க்கரை ஆலைகளும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விலை மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பில் விற்பனையைத் தாமதப்படுத்தத் தொடங்கின” என்று அந்தத் தொழில்துறை வட்டாரம் தெரிவித்தது. எத்தனால் தயாரிப்புக்காக சர்க்கரை திருப்பிவிடப்பட்டது எவ்வளவு காரணம்? மேலோட்டமாகப் பார்க்கும்போது, நடப்பு சர்க்கரைப் பருவத்தில் எத்தனால் தயாரிப்புக்காக திருப்பிவிடப்பட்ட 30 லட்சம் டன் சர்க்கரை குறிப்பிடத்தக்கதாகத் தெரிகிறது. ஆனால், எத்தனால் தயாரிப்புக்காக சர்க்கரை திருப்பிவிடப்படுவதற்கு முன்பே இருந்த மொத்த சர்க்கரை உற்பத்தி, ஆரம்ப மதிப்பீட்டைவிட 34.5 லட்சம் டன் குறைந்துள்ளது. இவ்வளவு பெரிய உற்பத்திக் குறைவு ஏற்படும் என்று பலர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். குறிப்பாக, சர்க்கரைப் பருவத்தின் தொடக்கமான ஜூலை மாதத்திலேயே விலை திடீரென உயரத் தொடங்கும் என எதிர்பார்ப்பது இன்னும் கடினம். உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஒரு சர்க்கரை ஆலை. பிரவீன் கண்ணா/கோப்பு தற்போது சர்க்கரை விலை கடுமையாக உயர்ந்ததற்கு எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டமே காரணம் என்று கூறுவது மற்றொரு காரணத்தாலும் சரியாக இருக்காது. 2025 நவம்பர் முதல் 2026 ஜூலை வரை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு பெட்ரோலில் கலப்பதற்காக மொத்தம் 810.67 கோடி லிட்டர் எத்தனால் வழங்கப்பட்டது. இதில் கரும்பை அடிப்படையாகக் கொண்ட மூலப்பொருளிலிருந்து தயாரிக்கப்பட்டது 259.24 கோடி லிட்டர் மட்டுமே; அதாவது 32 சதவீதம். இதில் நேரடி கரும்புச் சாறு/சிரப் மூலம் 147.6 கோடி லிட்டரும், பி ஹெவி மோலாசஸ் (B-Heavy Molasses) மூலம் 98.19 கோடி லிட்டரும், சி ஹெவி மோலாசஸ் (C-Heavy Molasses) மூலம் 13.45 கோடி லிட்டரும் தயாரிக்கப்பட்டன. மீதமுள்ள 551.43 கோடி லிட்டர், அதாவது 68 சதவீத எத்தனால், தானியங்களை மூலப்பொருளாகப் பயன்படுத்தும் ஆலைகளில் இருந்து பெறப்பட்டது. இதில் மக்காச்சோளத்தில் இருந்து 288 கோடி லிட்டரும், இந்திய உணவுக் கழகத்தின் அரிசியில் இருந்து 207.1 கோடி லிட்டரும், உடைந்த/சேதமடைந்த உணவு தானியங்களில் இருந்து 56.33 கோடி லிட்டரும் தயாரிக்கப்பட்டன. எனவே, எத்தனால் தயாரிப்புக்காக சர்க்கரை திருப்பிவிடப்பட்டதால்தான் சர்க்கரை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாகக் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கருத்தாகும். சர்க்கரை விலையை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? மேலும் என்ன செய்ய முடியும்? மே 13ஆம் தேதி, மத்திய அரசு நாட்டிலிருந்து அனைத்து வகையான சர்க்கரை ஏற்றுமதிக்கும் 2026 செப்டம்பர் 30ஆம் தேதி வரை தடை விதித்தது. எதிர்காலத்தில் சர்க்கரைப் பற்றாக்குறை ஏற்படும் என்ற உறுதியான முடிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இது மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 20) அக்டோபர் 31ஆம் தேதி வரை 10 லட்சம் டன் வரை கச்சா சர்க்கரையை சுங்க வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது. சர்க்கரைக்கு வழக்கமாக விதிக்கப்படும் 100 சதவீத வரிக்கு மாற்றாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த கச்சா சர்க்கரையை குஜராத்தின் காண்ட்லா துறைமுகத்தில் சுத்திகரிப்பு ஆலைகளை நடத்தி வரும் ஸ்ரீ ரேனுகா சுகர்ஸ் (Shree Renuka Sugars) மற்றும் ஸ்ரீ தத் இந்தியா பிரைவவேட் லிமிட்டெட் (Shri Dutta India Private Ltd) போன்ற நிறுவனங்கள் பதப்படுத்த முடியும். இறக்குமதி செய்யப்படும் கச்சா சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, இந்திய சர்க்கரை ஆலைகள் அக்டோபர் இறுதி முதல் நவம்பர் தொடக்கம் வரை கரும்பு அரவைப் பணிகளைத் தொடங்கும் வரை உள்நாட்டு சந்தையின் தேவையை பூர்த்தி செய்ய உதவும். ஏற்றுமதிக்கு தடை விதித்ததுடன், வரியில்லா இறக்குமதிக்கும் அனுமதி வழங்கிய மத்திய அரசு, ஜூலை 28ஆம் தேதி அனைத்து சர்க்கரை விற்பனையாளர்களுக்கும் 400 டன் கையிருப்பு வரம்பை விதித்தது. மேலும், அத்தகைய சர்க்கரை கையிருப்பைப் பெற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்கு மேல் எந்த விற்பனையாளரும் அதை வைத்திருக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது. ஆகஸ்ட் 13ஆம் தேதி, அனைத்து சர்க்கரை ஆலைகளுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியது. அதில், 2025-26 நிதியாண்டில் (ஏப்ரல்–மார்ச்) ஆண்டுக்கு 500 டன் அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்கரையை “நேரடியாகவோ அல்லது முகவர்கள் மூலமாகவோ” வாங்கிய மொத்த நுகர்வோர் குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதில் குளிர்பானம் மற்றும் மிட்டாய் தயாரிப்பாளர்கள், இனிப்பு விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். வரவிருக்கும் 2026-27 சர்க்கரைப் பருவத்தில், நேரடி கரும்புச் சாறு மற்றும் பி.ஹெவி மோலாசஸ் (B-Heavy Molasses) ஆகியவற்றிலிருந்து எத்தனால் தயாரிப்பதைத் தவிர்க்குமாறு அரசு ஆலைகளுக்கு உத்தரவிடலாம் என எதிர்பார்க்கலாம். உள்நாட்டு சந்தையில் சர்க்கரை விநியோகத்தை எப்படியாவது அதிகரிப்பதே தற்போதைய முன்னுரிமையாக இருக்கிறது. இதற்காக இறக்குமதி செய்வதோடு, சர்க்கரை ஆலைகள் மற்றும் வர்த்தகர்கள் சர்க்கரையை விற்பனை செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்” என்று தொழில்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கையிருப்பு குறைவு, ஒரே மாதத்தில் ரூ20 அதிகம்: சர்க்கரை விலை உயர்வுக்கு காரணம் என்ன?
PulseNews சுருக்கம்

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பண்டிகைகள் வரவிருக்கும் நிலையில், சர்க்கரையின் விலை உயர்வு நுகர்வோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 21-ஆம் தேதி கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்ட சர்க்கரையின் விலை, ஆகஸ்ட் 21-ஆம் தேதி ரூ.65 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே மாதத்தில் சர்க்கரை விலை ரூ.20 அதிகரித்துள்ளதற்கு, கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கையிருப்பு குறைந்துள்ளதே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. நுகர்வோர் விவகாரத் துறை வெளியிட்ட அகில இந்திய சராசரி சில்லறை விலை தரவுகளின்படி இந்த விலை உயர்வு பதிவாகியுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business