'கரூர் கம்பெனி... சங்கி அமைச்சர்...'- கடும் வார்த்தை போரால் பேரவையில் பரபரப்பு
இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், ''மின்வாரியத்தினுடைய தலைமை அலுவலகத்திலும் மற்ற பல இடங்களிலும் 18 ஹார்டு டிஸ்க்கள் காணாமல் போனது என்றார்கள். அவற்றில் முக்கிய ஆவணங்கள் எல்லாம் இருந்தன என்ற கருத்தை வெளியிட்டார்கள். மின்துறை அமைச்சர் சொன்னது 18 ஹார்டு டிஸ்க்கள். எடுத்ததாக சொன்னது 38 ஹார்டு டிஸ்க்கள். மின்வாரியத்தில் 18 ஹார்ட் டிஸ்க் காணவில்லை என்றால் 38 கிடைக்கப் பெற்று இருக்கிறது'' என்றார். அப்பொழுது மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் பதிலளிக்கையில், ''கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்சார வாரியம் பட்ட பாடுகள் எல்லாம் ஒரே வரியில் முடித்து விளக்க முடியாது. நமது கரூர் கம்பெனி மன்னிக்கவும் கரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இப்போதைய கோயம்புத்தூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள அவர்தான் 2021இல் இந்தத் துறைக்கு அமைச்சராக இருந்தார்'' என்றார். 'கரூர் கம்பெனி' என்று சொன்னதற்கு எதிர்க்கட்சியினர் எதிராக கோஷம் எழுப்பினர். உடனே எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி 'கம்பெனி என்று சொன்னதை நீக்கி விட்டீர்களா? என சபயநாயகரை நோக்கி எனக் கேள்வி எழுப்பினார். மேலும் பேசத்தொடங்கிய உதயநிதி, ''மாண்புமிகு சங்கி அமைச்சர் மன்னிக்கவும் மாண்புமிகு எரிசக்தித்துறை அமைச்சர்'' என்றார். அப்பொழுது மீண்டும் எழுந்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், ''பாத்ரூமில் மூன்று மணி நேரம் உட்கார்ந்து இருந்த எதிர்க்கட்சித் தலைவர் என்று சொல்வதற்கு ஐந்து நிமிடமாகாது'' என்றார். 'கம்பெனி' என்ற வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்' என சபாநாயகர் தெரிவித்தார். மீண்டும் எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, ''தமிழ்நாட்டில் பாத்ரூமில் யார் யார் எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்பது கண்காணிப்பதற்கு ஒரு அமைச்சர் வைத்திருக்கீர்களா? என்பதை நான் கேட்க விரும்புகிறேன்'' என்றார். இதனையொட்டி பேரவையில் தவெகவினர் மற்றும் திமுகவினர் வரத்தைப்போரால் கூச்சல் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

சட்டப்பேரவையில் மின்வாரிய அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனதாகக் கூறப்பட்ட விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார். அந்த ஹார்டு டிஸ்க்குகளில் முக்கியமான ஆவணங்கள் இருந்த நிலையில், காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட 18-க்கு பதிலாக, 38 ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தனது விளக்கத்தைத் தொடங்கியபோது, இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் ஏற்பட்டு பேரவையில் பரபரப்பு நிலவியது.