PulseNews
வணிகம்

எந்தெந்த மாவட்டங்களுக்கு எத்தனை முதலீடுகள்? காஞ்சிபுரம், சென்னையுடன் போட்டி போடும் தூத்துக்குடி

தமிழக வெற்றிக் கழக அரசு, தனது முதல் பெரிய முதலீட்டு மாநாடான ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2026’ நிகழ்ச்சியில், ரூ67,542 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை உள்ளடக்கிய 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் நேற்று (ஆகஸ்ட் 13) தமிழக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இன்றைய அறிவிப்புகளுடன், எங்கள் அரசு பதவியேற்ற முதல் 100 நாட்களில் பெறப்பட்ட மொத்த முதலீட்டு ஒப்பந்தங்கள் ரூ1 லட்சம் கோடியைத் தாண்டும். இதன் மூலம் 1.2 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். சராசரியாக, நாங்கள் பதவியேற்ற ஒவ்வொரு நாளுக்கும் ரூ1,000 கோடி முதலீடு என்ற அளவில் ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளன” என்று தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, மாநாட்டு வளாகத்தில் இருந்து யூடியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் தெரிவித்தார். இந்த அனைத்து திட்டங்களும் ஆறு மாதங்கள் முதல் ஓராண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 25 நிறுவனங்கள் முதல் முறையாக தமிழ்நாட்டிற்கு வருகின்றன. ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்கள், கொள்கைத் தொடர்ச்சியையும் தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றன” என்று முதலீட்டு ஊக்குவிப்புக்கான நோடல் நிறுவனமான கைடன்ஸ் தமிழ்நாடு (Guidance Tamil Nadu) அமைப்பின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான தீபக் ஜேக்கப் கூறினார். மேலும், “திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத்தை மையமாகக் கொண்டு ஸ்பேர்பேங்க் (Sberbank) உடன் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், தமிழ்நாடு–ரஷ்யா பொருளாதார ஒத்துழைப்பில் இந்த முதலீட்டு மாநாடு புதிய அத்தியாயத்தையும் தொடங்குகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, ராமநாதபுரம் மாவட்டம் தனது முதல் பெரிய தொழில் முதலீட்டைப் பெற்றுள்ளது. போனிக்ஸ் கோதாரி ஃபுட்வேர் லிமிட்டேட் (Phoenix Kothari Footwear Limited) நிறுவனம் ரூ1,000 கோடி முதலீட்டில் திட்டத்தை அமைக்க உள்ளது. இந்தத் திட்டம் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கோத்தாரி இன்டஸ்ரியல் கார்ப்ரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் செயல் தலைவர் ஜின்னா ரஃபிக் அகமது கூறுகையில், பின்தங்கிய மாவட்டம் ஒன்றில் முதலீடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விரும்பினார். அதன்படியே இந்த இடத்தைத் தேர்வு செய்தோம். காலணி பூங்கா ஒன்றை அமைத்து, அதனுடன் தொடர்புடைய உதிரிபாகங்கள் மற்றும் பிற பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களையும் இங்கு கொண்டு வர உள்ளோம். தற்போது பெரும்பாலான உதிரிபாகங்கள் வியட்நாமில் இருந்து வருகின்றன. அவை அனைத்தையும் இந்தியாவிலேயே தயாரிக்க விரும்புகிறோம். ஒரு பெரிய பிராண்டையும் ராமநாதபுரத்திற்கு கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்தார். 111 ஆண்டுகள் பழமையான ஹித்துஜா குருப் (Hinduja Group) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகனப் போக்குவரத்து, வாகனத் துறை, நிதிச் சேவைகள், எரிசக்தி, பேட்டரி சார்ஜிங் உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் மொபிலிட்டி தீர்வுகள் உள்ளிட்ட துறைகளில் ரூ2,500 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன் முக்கிய திட்டமாக, ஹித்துஜா ரெனிவபுல்ஸ் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (Hinduja Renewables Energy Private Limited (HREPL) நிறுவனம் சூரியசக்தி, காற்றாலை மற்றும் பேட்டரி தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய 200 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தை உருவாக்க உள்ளது. இது குறித்து ஹிந்துஜா குருப் ஆப் கம்பெனிஸ் (Hinduja Group of Companies (India) நிறுவனத்தின் தலைவர் அசோக் இந்துஜா கூறுகையில், “வலுவான தொழில்துறை அடித்தளம், திறமையான மனிதவளம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மிகப்பெரிய வாய்ப்புகள் ஆகியவற்றைக் கொண்ட தமிழ்நாடு, இந்தியாவின் எரிசக்தி மற்றும் மொபிலிட்டி மாற்றத்திற்கு தலைமை தாங்குவதற்கான சிறந்த நிலையில் உள்ளது என்று கூறியுள்ளார். பெரும்பாலான முதலீடுகள் காஞ்சிபுரம் பகுதியில் 20 திட்டங்கள் என்ற அளவில் வந்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக சென்னை – 14, திருவள்ளூர் – 13, தூத்துக்குடி – 10 திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. தென் கொரியாவிலிருந்து 6 நிறுவனங்களும், ஜெர்மனியிலிருந்து 4 நிறுவனங்களும், சிங்கப்பூரிலிருந்து 3 நிறுவனங்களும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து தலா 2 ஒப்பந்தங்கள் வந்துள்ளன. ஸ்வீடன், தைவான் மற்றும் டென்மார்க் நிறுவனங்களிடமிருந்தும் முதலீடுகள் வந்துள்ளன. டைட்டன் (Titan) நிறுவனம் ஓசூரில் தனது பிரீமியம் கைக்கடிகாரங்கள், நகைகள் மற்றும் மின்னணு வணிகத்திற்கான ஆட்டோமேஷன் உபகரணங்கள் தயாரிக்கும் வசதிகளை விரிவுபடுத்த ரூ1,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 1,200 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டைச் சேர்ந்த வாகன மற்றும் மின்சார வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமான லூகாஸ் டிவிஎஸ் (Lucas TVS) பல்வேறு உற்பத்தி நிலையங்களில் மொத்தம் ரூ2,500 கோடி முதலீடு செய்ய உள்ளது. பிரான்ஸைச் சேர்ந்த சைன்ட் – கோபின் (Saint-Gobain) கிருஷ்ணகிரியில் புதிய பசுமைத் தொழிற்சாலையை அமைப்பதற்கும், காஞ்சிபுரத்தில் உள்ள தனது தொழிற்சாலையை விரிவுபடுத்துவதற்கும் ரூ2,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. உலகின் மிகப்பெரிய ஜிப்பர் மற்றும் ஃபாஸ்டனிங் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஜப்பானின் ஒய்.கே.கே. (YKK) திருவள்ளூரில் ரூ1,651 கோடி முதலீடு செய்ய உள்ளது. ஃபார்ஜூன் (Fortune) 500 பட்டியலில் 292-வது இடத்தில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த சூப்பர் மிக்ரொ கம்பியூட்டர் (Super Micro Computer) சென்னையில் சர்வர் அசெம்பிளி பணிகளைத் தொடங்க உள்ளது. விண்வெளித் துறையைச் சேர்ந்த இரண்டு முக்கிய நிறுவனங்களும் இந்த மாநாட்டில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. சென்னையைச் சேர்ந்த அக்னிகுள் காஸ்மோஸ் (Agnikul Cosmos) மீண்டும் பயன்படுத்தக்கூடிய திரவ எரிபொருள் மூலம் இயங்கும் ஏவுகணை வாகனங்களுக்கான அசெம்பிளி மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளைத் தொடங்க ரூ400 கோடி முதலீடு செய்ய உள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) சேமிப்பு, அசெம்பிளி, ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதிகளை அமைக்க ரூ250 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்த முதலீடுகள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வர உள்ளன. அல்ட்ராவைலெட் ஆட்டோமேட்டீவ் பிரைவேட் லிமிட்டேட் (Ultraviolette Automotive Private Limited) தமிழ்நாட்டில் தனது முதல் முழுமையான ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. இதற்காக ரூ779 கோடி முதலீடு செய்யப்படுகிறது. உயிரியல் அறிவியல் துறையில் 8 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. அவற்றில் கேப்லின் குருப் ஆப் கம்பெனிஸ் (Caplin Group of Companies) ரூ925 கோடி முதலீடு செய்ய உள்ளது. இது குறித்து அமைச்சர் கீர்த்தணா கூறுகையில், 2036ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற மிகப்பெரிய இலக்கை எங்கள் முதலமைச்சர் எங்களுக்கு வழங்கியுள்ளார். இது மிகப்பெரிய எண்ணிக்கைதான். ஆனால், அதன் தாக்கம் அதைவிடப் பெரியதாக இருக்கும். ஒரு இளம் பட்டதாரிக்கு பொருளாதார வளர்ச்சி என்பது சிறந்த வேலைவாய்ப்பைக் குறிக்கும். ஒரு பெண்ணுக்கு அது பொருளாதார சுதந்திரத்தைக் குறிக்கலாம். ஒரு தொழில்முனைவோருக்கு அது ஆபத்தை எதிர்கொண்டு முதலீடு செய்யும் நம்பிக்கையைக் கொடுக்கும். ஒரு குடும்பத்திற்கு அது வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் குறிக்கும். இன்று தனது முதல் தொழில் முதலீட்டைப் பெறும் ராமநாதபுரம் போன்ற ஒரு மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஒரு இளைஞர் வேலை தேடி தனது சொந்த ஊரை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பதே இதன் அர்த்தம். பொருளாதார வளர்ச்சியை அதன் தாக்கம் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்கும்போது, அது இப்படித்தான் இருக்கும்” என்று அமைச்சர் எஸ். கீர்த்தனா தெரிவித்தார்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
எந்தெந்த மாவட்டங்களுக்கு எத்தனை முதலீடுகள்? காஞ்சிபுரம், சென்னையுடன் போட்டி போடும் தூத்துக்குடி
PulseNews சுருக்கம்

தமிழக வெற்றிக் கழக அரசு தனது முதல் பெரிய முதலீட்டு மாநாடான ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2026’ நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இதில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில், ரூ.67,542 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்த ஒப்பந்தங்கள் கடந்த ஆகஸ்ட் 13 அன்று பரிமாறிக்கொள்ளப்பட்டன. அரசு பதவியேற்ற முதல் 100 நாட்களில் ஈட்டப்பட்ட மொத்த முதலீடு ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதுடன், இதன் மூலம் 1.2 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business