“கேலி செய்யாதீங்க, நான் இப்படித்தான் பேசுவேன்..” - பேரவையில் ஆத்திரமடைந்த நிதியமைச்சர்!
தமிழக சட்டமன்ற பேரவையின் தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அது மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கூட்டத்தொடரின் 5ஆம் நாளான இன்று (10-08-26) நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய கடையநல்லூர் மதிமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன், “நிதி அமைச்சர் தன்னுடைய உரை வீச்சை பட்ஜெட்டை வாசிக்கிற போது நான் உன்னிப்பாக கவனித்தேன். அவர் ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றவராக இருப்பார் என்று நினைக்கிறேன். ஆங்கில உச்சரிப்பு மிக நேர்த்தியாக இருந்தது. தமிழில் பல சொற்றொடர்களை அவர்கள் பேசாமல் விட்டுவிட்டார்கள், சில சொற்றொடர்கள் இலக்கண பிழையாக அமைந்தது. இதை குறையாகவோ குற்றச்சாட்டாகவோ நான் வைக்க விரும்பவில்லை. நிதியமைச்சர் வருங்காலத்தில் பிழையின்றி பட்ஜெட் வாசிக்கக்கூடிய முயற்சிகளை செய்ய வேண்டும்” என்று கூறினார். அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், “நான் பாஸ்கட்பால் பிளேயர், நான் அஃபென்ஸ் ஆடுவேன், டிஃபென்ஸ் ஆடுவேன். எப்போது டிஃபன்ஸ் ஆட வேண்டும், எப்போது அஃபென்ஸ் ஆட வேண்டும் என்று எனக்கு நன்றாக தெரியும்” என்று கூறும் போது எதிர்க்கட்சி வரிசையில் மதிமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன் குறுக்கே பேச முயன்றார். அப்போது நிதியமைச்சர் மரிய வில்சன், “நீங்கள் கத்தினால் நானும் கத்த வேண்டியது வரும். 30 வருடங்களாக எடுகேஷன் பீரியடில் (Education period) இருந்திருக்கேன். என்னுடைய கம்யூனிகேஷன் எல்லாம் இங்கிலீஷில் தான் இருந்திருக்கிறது. இப்போது இந்த மாமன்றத்தில் கொஞ்ச நாட்களாகவே உருவ கேலி செய்வது, சாதி ரீதியாக கேலி செய்வது, பெண்கள் ரீதியாக கேலி செய்வது, இப்போது மொழிக்கு வந்துவிட்டார்கள். எங்கள் தலைவர் செயல் மட்டும் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். எனக்கு ஒரு மொழி என்னுடைய கிறிஸ்டியனிட்டி கத்துக் கொடுத்திருக்கிறது. அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி, இது பாதி பேருக்கு எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது. நான் பைபிள் படித்திருக்கிறேன். நான் கிறிஸ்டியனாக பிறந்திருக்கிறேன். உங்களுக்கு அந்த மொழி தான் வேண்டுமென்றால் உங்களுடைய மதுரை எம்.பியாக இருந்தவர் இதுவரைக்கும் ஒரு நாளும் நாடாளுமன்றத்தில் பேசியதே கிடையாது. நாங்கள் முயற்சி செய்கிறோம். நீங்கள் சம்பந்தமே இல்லாமல் உருவ கேலி செய்வது, மொழியை வைத்து பாகுபாடு செய்யாதீர்கள். எனக்கு இப்படி தான் பேச முடியும். நான் உங்களுக்காக மாற்றிக் கொள்ள முடியாது. நான் இப்படித்தான் பேசுவேன்” என்று கோபத்துடன் அமர்ந்தார். இதனால் அவை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கை மீதான விவாதத்தின்போது, அமைச்சர் வாசித்த தமிழ் உச்சரிப்பு குறித்து மதிமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன் விமர்சனம் செய்தார். அமைச்சர் எதிர்காலத்தில் பிழையின்றி வாசிக்க முயற்சிக்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், உருவ கேலி மற்றும் மொழி பாகுபாட்டை ஏற்க முடியாது என ஆவேசத்துடன் பதிலடி கொடுத்தார். தான் கற்கும் காலத்தில் இருந்தே ஆங்கிலத்தில் பழகியதாகவும், தனக்குத் தெரிந்த அன்பு மற்றும் இரக்கத்தின் மொழியைப் புரியாதவர்கள் தன்னை விமர்சிப்பதாகவும் அவர் சாடினார். தான் பேசுவது இப்படித்தான் என்றும், தனது உச்சரிப்பை மாற்றிக்கொள்ள முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.