வேட்டி, சேலை உற்பத்திக்கு அனுமதி ஏன் தாமதம்...? 'வெளிமாநில நிறுவனங்களுக்கு தாரை வார்க்க திட்டமா'...? - டிடிவி தினகரன்
விலையில்லா வேட்டி, சேலை உற்பத்திக்கான அனுமதியை தமிழக அரசு தாமதப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்தத் திட்டத்தையும் வெளிமாநில நிறுவனங்களிடம் ஒப்படைக்க அரசு திட்டமிட்டுள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்திலேயே பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலை உற்பத்தியை தொடங்க நெசவாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் நிலையிலும் இதற்கான அனுமதி வழங்கப்படாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனால் இந்தத் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள சுமார் 3 லட்சம் நெசவாளர் குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.கூடுதல் தரம் கொண்ட புதிய ரக நூலில் வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்காக கடந்த ஜூலை மாதமே முதற்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், உற்பத்தியை தொடங்குவதற்கான அனுமதியை நெசவாளர்களுக்கு வழங்காமல் அரசு தொடர்ந்து காலதாமதம் செய்வது கண்டனத்திற்குரியது.வேட்டி, சேலை உற்பத்தி முதல் நெசவு, தரப்பரிசோதனை, போக்குவரத்து, விநியோகம் என பல்வேறு பணிகளை குறுகிய காலத்திற்குள் நிறைவு செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில், உற்பத்திக்கான அனுமதியை வழங்காமல் அரசு மெத்தனமாக செயல்படுவது, பொங்கல் பண்டிகைக்குள் பயனாளிகளுக்கு வேட்டி, சேலைகளை வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்தும்.மேலும், விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் பல்வேறு நிபந்தனைகளை விதித்து பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசு திட்டமிடுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது. ஏற்கெனவே தாய்மாமன் தங்க மோதிரம் உள்ளிட்ட திட்டங்கள் வெளிமாநில நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதேபோன்று விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தையும் வெளிமாநில நிறுவனங்களிடம் ஒப்படைக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே விலையில்லா வேட்டி, சேலைகள் பயனாளிகளின் கைகளில் சென்றடைவதை உறுதி செய்வதுடன், சுமார் 3 லட்சம் நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உற்பத்திக்கான அனுமதியை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு டிடிவி தினகரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

விலையில்லா வேட்டி, சேலை உற்பத்திக்கான அனுமதியை தமிழக அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்திலேயே பொங்கல் பண்டிகைக்கான உற்பத்தியைத் தொடங்க நெசவாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், ஆகஸ்ட் மாதம் முடியும் தருவாயிலும் அனுமதி வழங்கப்படாதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தத் திட்டத்தையும் வெளிமாநில நிறுவனங்களுக்குத் தாரை வார்க்க அரசு திட்டமிட்டுள்ளதா என டி.டி.வி. தினகரன் சந்தேகம் எழுப்பியுள்ளார். இந்தத் தாமதம் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதால், அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அவரது பதிவு உணர்த்துகிறது.