PulseNews
வணிகம்

மாதாந்திர ஜீவனாம்சம் vs ஒரே தவணை தொகை: விவாகரத்து வழக்கில் ஆண்களுக்கு எது சிறந்தது?

திருமண விவாகரத்து வழக்குகள் சில சமயங்களில் மிக நீண்ட சட்டப் போராட்டமாகவும், கணவன்மார்களுக்கு கடுமையான நிதி நெருக்கடியையும் மன உளைச்சளையும் ஏற்படுத்தும் களமாகவும் மாறிவிடுகின்றன. குறுகிய காலத் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த பிறகும், பல ஆண்டுகள் தொடரும் நீதிமன்ற வழக்குகளால் ஆண்களின் வாழ்வாதாரமும் சேமிப்பும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை விளக்கும் ஓர் உண்மை நிலவரக் கதை இது. திருமணம் முடிந்த ஆறு மாதங்களுக்குள்ளேயே வினீத் சிங்கின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது. பணப் பிரச்சினையால் எழுந்த தகராறுகள் நாளுக்கு நாள் அதிகரித்தன. முதலாவது திருமண நாளுக்கு முன்பாகவே அவரது மனைவி அவரைப் பிரிந்து சென்றார். அதன் தொடர்ச்சியாக, வரதட்சணை கொடுமைச் சட்டம் (பிரிவு 498A) உட்பட மூன்று வெவ்வேறு வழக்குகள் வினீத் மீது பாய்ந்தன. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தனது மனைவிக்கு மாதம்தோறும் 10,000 ரூபாய் ஜீவனாம்சமாக வழங்கி வந்தார். சுமார் 15 ஆண்டுகள் கழிந்த நிலையிலும், அவரது பி.எச்.டி (PhD) படிப்பும் கனவுகளும் பாதியிலேயே கைவிடப்பட்டன. தற்போது வழக்குகளைத் திரும்பப் பெறவோ அல்லது விவாகரத்து வழங்கவோ அவரது மனைவி 50 லட்சம் ரூபாய் ஒரே தவணையில் (Lump sum settlement) கேட்கிறார். "வழக்கறிஞர் கட்டணம், நீதிமன்ற அலைச்சல், மாதாந்திர ஜீவனாம்சம் என லட்சக்கணக்கில் பணம் செலவாகிவிட்டது; என் வாழ்க்கையும் தொழிலும் முற்றிலும் முடங்கிப்போய்விட்டன" என்று வேதனையுடன் கூறுகிறார் வினீத். வினீத்தைப் போலவே, டெல்லியைச் சேர்ந்த 43 வயதான சித்தார்த் குமாரும் குடும்ப வன்முறை மற்றும் துன்புறுத்தல் வழக்குகளை எதிர்கொண்டார். குழந்தைகள், உறவினர்களைச் சந்திக்க முடியாமல் சமூக ரீதியாகவும் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். மனைவி தரப்பில் 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கப்பட்ட போதிலும், சித்தார்த் சோர்ந்து போகாமல் 4 முதல் 5 ஆண்டுகள் நீதிமன்றத்தில் போராடி, தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நிரூபித்து விடுதலையானார். இறுதியாக, 10 லட்சம் ரூபாய் ஒப்பந்த தொகையுடன் இந்தச் சிக்கலில் இருந்து விடுபட்டார். சட்டப் போராட்டம் எப்படி நீள்கிறது? பெண்களை வரதட்சணை கொடுமை மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்க இந்தியாவில் பல சட்டங்கள் உள்ளன. பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் வரதட்சணை கொடுமை தொடர்பான குற்றப்பிரிவுகள், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், வரதட்சணைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்தச் சட்டங்கள் பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டவை. அதே நேரத்தில், சில வழக்குகளில் அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து உச்ச நீதிமன்றமும் பல்வேறு உயர் நீதிமன்றங்களும் சில சந்தர்ப்பங்களில் கவலை தெரிவித்துள்ளன. குறிப்பாக வரதட்சணை கொடுமை வழக்குகளில் உடனடியாக கைது செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. 2014-ஆம் ஆண்டு அர்னேஷ் குமார் வழக்கில், ஏழு ஆண்டுகளுக்குக் குறைவான தண்டனை உள்ள குற்றங்களில் காவல்துறை தானாகவே கைது செய்யக் கூடாது என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. சில வழக்குகளில் விவாகரத்து, வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை, குழந்தைகள் தொடர்பான வழக்குகள் என பல்வேறு நீதிமன்றங்களில் ஒரே நேரத்தில் வழக்குகள் நடைபெறக்கூடும். இதனால் கணவன் பல நீதிமன்றங்களுக்கு வெவ்வேறு நாட்களில் சென்று வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டிய நிலை உருவாகலாம். வழக்கு தொடரப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? மனைவி வழக்கு தொடர்ந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டவுடன் பதற்றமடைவது இயல்புதான். ஆனால் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் பின்னர் வழக்கிலேயே பாதிப்பை ஏற்படுத்தலாம். செய்ய வேண்டியவை: முதலில் திருமண வழக்குகளில் அனுபவமுள்ள வழக்கறிஞரை அணுக வேண்டும். தேவையான சூழ்நிலையில் முன்ஜாமீன் பெறுவது குறித்து சட்ட ஆலோசனை பெற வேண்டும். மனைவியுடன் நடந்த குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப் உரையாடல்கள், மின்னஞ்சல்கள், அழைப்பு பதிவுகள், காணொளிகள், சமூக வலைதளப் பதிவுகள் போன்ற வழக்குக்கு தொடர்புடைய ஆதாரங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டும். தன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் ரத்து செய்ய சட்ட ரீதியாக வாய்ப்பு உள்ளதா என்பதையும் வழக்கறிஞரிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம். அதேபோல், விவாகரத்துக்கான சட்ட நடவடிக்கைகளையும் தொடங்கலாம். நீதிமன்ற விசாரணைகள் மற்றும் சமரசப் பேச்சுவார்த்தைகளில் முறையாக பங்கேற்பது முக்கியம். என்ன செய்யக்கூடாது? வழக்கு தொடரப்பட்ட கோபத்தில் மனைவியை தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி மூலம் மிரட்டக்கூடாது. அவதூறாகப் பேசவோ, உடல் ரீதியாகத் துன்புறுத்தவோ கூடாது. மனைவி அல்லது அவரது குடும்பத்தினரைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பதிவுகளை வெளியிடுவதும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். அதேபோல், பதற்றத்தில் உடனடியாக ஒரு பெரிய தொகைக்கு சமரசம் செய்துகொள்வதும் தவறு. சொத்துகளை உறவினர்களின் பெயருக்கு மாற்றுவது, வருமானத்தை மறைப்பது, வங்கிக் கணக்குகளை மூடுவது போன்ற நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும். ஜீவனாம்சம் எவ்வளவு? விவாகரத்து வழக்கில் கணவனின் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை மட்டும் கணக்கிட்டு ஜீவனாம்சம் நிர்ணயிக்கப்படுவதில்லை. இருவரின் வருமானம், சம்பாதிக்கும் திறன், வாழ்க்கைத் தரம், குழந்தைகளின் தேவைகள், கடன்கள், குடும்பப் பொறுப்புகள், இருவரின் ஒட்டுமொத்த நிதிநிலை உள்ளிட்ட பல காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படலாம். இடைக்கால ஜீவனாம்சம், வழக்கு செலவுகள், குழந்தைகளுக்கான பராமரிப்பு, நிரந்தர ஜீவனாம்சம், குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகள் என பல்வேறு நிதிச்சுமைகள் ஏற்படலாம். ஒரே தவணையா? மாதாந்திர ஜீவனாம்சமா? சிலர் வழக்கு நீண்ட காலம் தொடராமல் இருக்க ஒரே தவணையாக ஒரு தொகையை வழங்க விரும்புவார்கள். ஒரே தவணை என்றால் உடனடியாக பெரிய தொகை தேவைப்படும். ஆனால் அதன் பிறகு எதிர்கால நிதிச்சுமை குறித்து ஒரு அளவுக்கு தெளிவு கிடைக்கும். மாதாந்திர ஜீவனாம்சம் என்றால் உடனடியாக அதிக பணம் தேவைப்படாது. ஆனால் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து பணம் செலுத்த வேண்டியிருக்கும். அதனால் எதிர்கால வருமானம், வீட்டுச் செலவு, கடன் தவணை, வரி, காப்பீடு மற்றும் ஓய்வுக்கால சேமிப்பு ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். குழந்தைகள் இருந்தால், அவர்களை தொடர்ந்து சந்திக்க விரும்பும் கணவருக்கு மாதாந்திர பராமரிப்பு முறை சில சூழ்நிலைகளில் நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கலாம். குழந்தைகள் தொடர்பான உரிமைகளைத் தொடர விரும்பாத நிலையில், ஒரே தவணைத் தீர்வு குறித்து இருதரப்பும் பரிசீலிக்கலாம். சொத்து பிரச்சினை வந்தால்? விவாகரத்து நேரத்தில் வீடு மற்றும் பிற சொத்துகள் மிகப்பெரிய பிரச்சினையாக மாறக்கூடும். ஒரு வீடு கணவன்-மனைவி இருவரின் பெயரிலும் இருந்தால், உரிமைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட பங்குதான் முக்கியம். பங்கு குறிப்பிடப்படாத சூழ்நிலையில், நீதிமன்றங்கள் பொதுவாக இருவருக்கும் சம பங்கு இருப்பதாகக் கருதக்கூடும். கணவன் மட்டும் கடன் தவணையை செலுத்தியிருந்தாலும், அதனால் மட்டும் கூட்டு உரிமைப் பங்கு தானாக மாறாது. இருவரும் இணைந்து வாங்கிய வீட்டை ஒருவர் வாங்கிக்கொள்வது, சொத்தைப் பிரிப்பது, வீட்டை விற்று பணத்தை உரிமைப் பங்குக்கு ஏற்ப பிரிப்பது அல்லது பரஸ்பர சம்மத விவாகரத்து மூலம் பிரச்சினையைத் தீர்ப்பது போன்ற வழிகள் இருக்கலாம். அதனால் சொத்து வாங்கியபோதே யார் எவ்வளவு பணம் செலுத்தினர் என்பதற்கான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம். கூட்டு வீட்டுக்கடன் என்ன ஆகும்? கணவன்-மனைவி இருவரும் இணைந்து வீட்டுக்கடன் வாங்கியிருந்தால், விவாகரத்து ஆனதால் மட்டும் கடன் பொறுப்பு முடிந்துவிடாது. கடனில் பெயர் உள்ளவர்கள் தொடர்ந்து கடனைச் செலுத்த வேண்டியிருக்கும். வீட்டு சொத்தை விற்று கடனை அடைப்பது, ஒருவரின் பெயருக்கு சொத்தை மாற்றுவது அல்லது புதிய கடனாக மாற்றுவது போன்ற தீர்வுகளை இருவரும் பரிசீலிக்கலாம். குழந்தைகளின் உரிமை? பெற்றோர் விவாகரத்து செய்தாலும், தந்தையின் மூதாதையர் சொத்தில் குழந்தைகளுக்கு சட்டப்படி உரிமை இருக்கக்கூடிய சூழ்நிலைகள் உள்ளன. எனவே விவாகரத்துக்குப் பிறகு சொத்து மற்றும் வாரிசு திட்டமிடலை தனியாக கவனிக்க வேண்டும். விவாகரத்து முடிந்துவிட்டால் எல்லா வாரிசு தொடர்பான விஷயங்களும் தானாக முடிந்துவிடும் என்று நினைப்பது தவறு. உயில், காப்பீடு, முதலீடுகள், வங்கிக் கணக்குகளின் நியமனங்கள் மற்றும் குழந்தைகளுக்கான வாரிசு ஏற்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒரு சொத்தில் நியமிக்கப்பட்ட நபர் அந்தச் சொத்தின் இறுதி உரிமையாளராகிவிடுவார் என்பதும் அவசியமில்லை. நியமனம் மற்றும் வாரிசுரிமை இரண்டும் வெவ்வேறு சட்டக் கருத்துகள். பிரிவின்போது செய்யப்படும் நிதித் தவறுகள் விவாகரத்து பிரச்சினை தொடங்கியவுடன் மனைவிக்கான அனைத்து செலவுகளையும் திடீரென நிறுத்துவது, சொத்துகளை உறவினர்களின் பெயருக்கு மாற்றுவது, வருமானத்தை மறைப்பது, கூட்டு வங்கிக் கணக்கிலிருந்து பெரிய தொகையை எடுத்துக்கொள்வது போன்ற செயல்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். நீதிமன்றத்தில் நம்பகத்தன்மையையே இது பாதிக்கக்கூடும். மேலும், பிரிவுக்குப் பிறகு கணவன் இரண்டு வீடுகளுக்கான செலவுகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். வீட்டு வாடகை, மின்சாரம், காப்பீடு, குழந்தைகளின் செலவுகள், கடன் தவணைகள் உள்ளிட்ட முன்பு பகிர்ந்து கொண்ட செலவுகள் தனித்தனி பொறுப்புகளாக மாறக்கூடும். எனவே வழக்கு தொடங்கிய உடனேயே வருமானம், அத்தியாவசியச் செலவுகள், கடன் தவணைகள், காப்பீடு, குழந்தைகளின் செலவுகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் சட்டச் செலவுகள் ஆகியவற்றை கணக்கிட்டு தனியான நிதித் திட்டத்தை உருவாக்குவது நல்லது. விவாகரத்து அல்லது பிரிவு ஏற்பட்டாலும், காப்பீட்டு தவணைகளை திடீரென நிறுத்திவிடுவது சரியான நடவடிக்கை அல்ல. விவாகரத்துக்குப் பிறகு குடும்பப் பொறுப்புகள் மாறியிருந்தால், காப்பீட்டுத் திட்டங்களையும் நியமனங்களையும் சட்ட ஆலோசனை மற்றும் நிதி ஆலோசனையுடன் மறுபரிசீலனை செய்யலாம். முக்கியமான விஷயம் திருமணத் தகராறு ஏற்பட்டால், அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளைத் தவிர்த்து சட்ட ஆலோசனையை முதலில் பெறுவது முக்கியம். பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டங்களை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதும் முக்கியம். அதே நேரத்தில், உண்மையான குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டுகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவும் கூடாது. ஒரு வழக்கு தொடரப்பட்டவுடன் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுப்பதைவிட, ஆதாரங்களைப் பாதுகாத்து, தகுதியான வழக்கறிஞரை அணுகி, நீதிமன்ற நடைமுறைகளில் முறையாக பங்கேற்பதே பாதுகாப்பான அணுகுமுறை. அதேபோல், விவாகரத்து என்பது சட்டப் பிரச்சினை மட்டுமல்ல; அது பல ஆண்டுகளுக்கான நிதித் திட்டத்தையும் பாதிக்கக்கூடிய ஒன்று. எனவே பிரிவு ஏற்படும் சூழ்நிலை தென்பட்ட உடனேயே சட்ட ஆலோசனையுடன் சேர்த்து நிதி ஆலோசனையும் பெறுவது, எதிர்கால நிதிச்சுமையை ஓரளவு கட்டுப்படுத்த உதவும்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மாதாந்திர ஜீவனாம்சம் vs ஒரே தவணை தொகை: விவாகரத்து வழக்கில் ஆண்களுக்கு எது சிறந்தது?
PulseNews சுருக்கம்

விவாகரத்து வழக்குகளில் நீண்ட கால சட்டப் போராட்டங்கள் கணவர்களுக்கு பெரும் நிதி நெருக்கடியையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகின்றன. திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த பிறகும் பல ஆண்டுகளாகத் தொடரும் நீதிமன்ற நடைமுறைகள், ஆண்களின் வாழ்வாதாரத்தையும் சேமிப்பையும் எவ்வாறு கடுமையாகப் பாதிக்கின்றன என்பதை இந்தச் செய்தி விளக்குகிறது.

திருமணம் முடிந்த ஆறு மாதங்களிலேயே வினீத் சிங் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நபரின் வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகளைக் கொண்டு இந்த உண்மை நிலவரம் விவரிக்கப்படுகிறது. மாதாந்திர ஜீவனாம்சம் வழங்குவதற்கும், ஒரே தவணையாகத் தொகையைச் செலுத்துவதற்கும் இடையே உள்ள வேறுபாடுகளையும், ஆண்களுக்கு எது சிறந்தது என்பதையும் இந்த அலசல் ஆராய்கிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business