PulseNews
வணிகம்

முதியோர் வீடுகளுக்கு இவ்வளவு மவுசா? கோவையிலும் புதுச்சேரியிலும் எகிறும் டிமாண்ட்: டாக்டர், அவசர உதவி, பராமரிப்பு எல்லாம் ஒரே இடத்தில்

இந்தியாவில் ஓய்வுக்குப் பிறகு குழந்தைகளுடன் வசிப்பது அல்லது பல ஆண்டுகளாக வாழ்ந்த அதே வீட்டில் தொடர்ந்து இருப்பதுதான் வழக்கமாக இருந்தது. ஆனால், இந்த நிலை தற்போது மெதுவாக மாறி வருகிறது. முதியோருக்கு ஓய்வு வாழ்க்கை என்பது வெறுமனே தங்குவதற்கான ஒரு வீட்டைத் தேர்வு செய்வதாக மட்டும் இல்லை. அருகிலேயே மருத்துவ வசதி, அன்றாட தேவைகளை எளிதாக நிறைவேற்றும் வசதிகள், அவசர உதவி, பொழுதுபோக்கு மற்றும் மற்றவர்களுடன் பழகுவதற்கான வாய்ப்பு ஆகியவற்றையும் அவர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையில் முதியோர் குடியிருப்பு அல்லது சீனியர் லிவிங் (Senior Living) என்ற புதிய பிரிவு வேகமாக வளர்ந்து வருகிறது. சொத்து ஆலோசனை நிறுவனமான காலியர்ஸ் (Colliers) அறிக்கையின்படி, இந்தியாவின் முதியோர் குடியிருப்பு சந்தை 2030ஆம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026ஆம் ஆண்டில் சுமார் ரூ.30,000 கோடியாக இருக்கும் இந்த சந்தை, 2028ஆம் ஆண்டில் ரூ.70,000 கோடியையும், 2030ஆம் ஆண்டில் ரூ.1 லட்சம் கோடியையும் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா வயதாகிறது; வீடுகளின் தேவையும் மாறுகிறது இந்தியாவின் மக்கள் தொகையில் முதியோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 11 சதவீதமாக உள்ளனர். இது 2050ஆம் ஆண்டில் சுமார் 21 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இந்தியாவில் 34 கோடிக்கும் அதிகமான முதியவர்கள் இருக்கலாம். இதனால், முதியவர்களுக்கு ஏற்ற வீடுகளுக்கான தேவை கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பொதுவான அடுக்குமாடி குடியிருப்பு ஒரு முதியவரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யாமல் இருக்கலாம். மருத்துவர் மற்றும் மருத்துவமனை வசதி, அவசர உதவி, வீட்டுப் பராமரிப்பு, பொழுதுபோக்கு, உடற்பயிற்சி மற்றும் சமூக நிகழ்வுகள் போன்றவை முக்கியமாகின்றன. தற்போது இந்தியாவில் முதியோர் குடியிருப்புகளுக்கான தேவை சுமார் 20 முதல் 22 லட்சம் வீடுகளாக உள்ளது. இது 2030ஆம் ஆண்டில் 28 முதல் 30 லட்சம் வீடுகளாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போது ஒழுங்கமைக்கப்பட்ட முதியோர் குடியிருப்பு வசதிகள் வெறும் 25,000 வீடுகள் மட்டுமே உள்ளன. தேவை அதிகம்; வீடுகள் குறைவு முதியோர் குடியிருப்புகளுக்கான தேவை மற்றும் தற்போதைய வசதிகளுக்கு இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இதுவே ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களை இந்தத் துறையில் அதிகம் கவனம் செலுத்த வைத்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் ஒழுங்கமைக்கப்பட்ட முதியோர் குடியிருப்பு வீடுகளின் எண்ணிக்கை சுமார் 1 லட்சமாக அதிகரிக்கும் என்று காலியர்ஸ் (Colliers) கணித்துள்ளது. அதாவது, அடுத்த சில ஆண்டுகளில் இந்தத் துறையின் வீடுகள் சுமார் நான்கு மடங்கு அதிகரிக்கலாம். 2025ஆம் ஆண்டுக்குப் பிறகு முதியோர் குடியிருப்பு துறையில் ரூ.13,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 75,000 புதிய முதியோர் குடியிருப்பு வீடுகள் உருவாகலாம். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மட்டுமின்றி, மருத்துவ நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் திட்டங்களும் அதிகரித்து வருகின்றன. சில நிறுவன முதலீட்டாளர்கள் சொத்து நிறுவனங்களுடன் இணைந்து முதியோர் குடியிருப்பு திட்டங்களை உருவாக்கி வருகின்றனர். சென்னை, மும்பை மட்டுமல்ல... சிறிய நகரங்களுக்கும் வாய்ப்பு இதுவரை மும்பை, பெங்களூரு, டெல்லி-என்சிஆர் போன்ற பெரிய நகரங்கள் முதியோர் குடியிருப்பு சந்தையில் முன்னிலையில் இருந்தன. ஆனால், அடுத்த கட்ட வளர்ச்சி சிறிய நகரங்களில் இருந்து வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயம்புத்தூர், புதுச்சேரி, டேராடூன், வதோதரா போன்ற நகரங்கள் முதியோர் குடியிருப்புகளுக்கான முக்கிய இடங்களாக உருவாகி வருகின்றன. திருப்பதி, விரிந்தாவன், அயோத்தி போன்ற ஆன்மிக நகரங்களும் கவனம் பெற்று வருகின்றன. இதற்கு முக்கிய காரணங்கள் உள்ளன. பெருநகரங்களுடன் ஒப்பிடும்போது இங்கு வாழ்க்கைச் செலவு மற்றும் வீட்டு விலைகள் குறைவாக இருக்கலாம். அதே நேரத்தில் மருத்துவ வசதிகளும் மேம்பட்டு வருகின்றன. அமைதியான வாழ்க்கையை விரும்பும் முதியவர்களுக்கு, அத்தியாவசிய வசதிகளுடன் கூடிய இதுபோன்ற நகரங்கள் புதிய வாய்ப்பாக இருக்கின்றன. வரும் ஆண்டுகளில் புதிய முதியோர் குடியிருப்பு திட்டங்களில் 30 முதல் 40 சதவீதம் வரை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் ஆன்மிக நகரங்களில் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வீடு மட்டும் போதாது... கவனிப்பும் தேவை முதியோர் குடியிருப்பு துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம், வீடு என்ற வரையறையைத் தாண்டி பராமரிப்பு வசதிகளையும் இணைப்பதாகும். தனியாக வசிக்க விரும்பும் முதியவர்களுக்கான வீடுகள், உதவி தேவைப்படுபவர்களுக்கான குடியிருப்புகள் என பல்வேறு வகையான திட்டங்கள் உருவாகின்றன. ஒரு படுக்கையறை, இரண்டு படுக்கையறை, மூன்று படுக்கையறை வீடுகள் மட்டுமின்றி, வில்லாக்கள், டவுன்ஷிப்கள் மற்றும் பெரிய கலப்பு பயன்பாட்டு திட்டங்களுக்குள்ளேயே முதியோர் குடியிருப்பு பகுதிகளை உருவாக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. வயது அதிகரிக்கும்போது முதியவர்களின் தேவைகளும் மாறுகின்றன. ஆரம்பத்தில் அன்றாட உதவி தேவைப்படலாம். பின்னர் உடல்நலப் பராமரிப்பு, மறுவாழ்வு சிகிச்சை அல்லது அவசர மருத்துவ உதவி தேவைப்படலாம். இதனால் டிமென்ஷியா பராமரிப்பு, தொலைதூர உடல்நலக் கண்காணிப்பு, தொலைமருத்துவம் போன்ற வசதிகளுக்கும் எதிர்காலத்தில் முக்கியத்துவம் அதிகரிக்கலாம். தொழில்நுட்பமும் முதியோர் வீடுகளுக்குள் வருகிறது முதியோர் குடியிருப்புகளில் தொழில்நுட்பத்தின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட் ஹோம் வசதிகள் மூலம் விளக்குகள், கதவுகள் உள்ளிட்ட அன்றாட செயல்பாடுகளை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். உடல்நலக் கண்காணிப்பு கருவிகள் மூலம் மருத்துவர்கள் முதியவர்களின் உடல்நிலையை தொலைவிலிருந்தே கண்காணிக்க முடியும். விழுந்துவிடுவது போன்ற அவசரநிலைகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அவசர உதவி அமைப்புகள் விரைவாக உதவக்கூடும். மருத்துவமனைக்குச் செல்லாமல் மருத்துவரிடம் ஆலோசனை பெற தொலைமருத்துவ வசதிகளும் உதவும். கட்டுமானத் துறையிலும் தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்து வருகிறது. பில்டிங் இன்ஃபார்மேஷன் மாடலிங் ( Building Information Modelling), தானியங்கி தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ் மற்றும் 3D பிரிண்டிங் போன்றவை கட்டுமானத்தை வேகப்படுத்தவும் செலவைக் குறைக்கவும் உதவக்கூடும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கட்டிடங்கள், குறைந்த மின்சார பயன்பாடு மற்றும் முதியோரின் உடல்நலம் மற்றும் நலனை கருத்தில் கொண்ட வடிவமைப்புகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. விதிமுறைகள் வந்தால் சந்தை மேலும் வளரலாம் முதியோர் குடியிருப்பு சந்தை வேகமாக வளரும்போது, தெளிவான விதிமுறைகளும் முக்கியமாகின்றன. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் 2019ஆம் ஆண்டில் முதியோர் குடியிருப்பு திட்டங்களுக்கான மாதிரி வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இந்த வழிகாட்டுதல்களை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தெளிவான விதிமுறைகளாக கொண்டு வந்தால், இந்தத் துறையில் நம்பகத்தன்மையும் வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கலாம். ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா ஏற்கனவே இந்தத் துறைக்கான தனிப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. மேலும் ரெரா (RERA) விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது, முதியோர் குடியிருப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் குடும்பங்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கக்கூடும். இனி ஓய்வு வாழ்க்கை எப்படி இருக்கும்? இந்தியாவின் ஒட்டுமொத்த வீட்டு சந்தையுடன் ஒப்பிடும்போது முதியோர் குடியிருப்பு சந்தை இன்னும் சிறியதாகத்தான் உள்ளது. ஆனால், அதன் வளர்ச்சி வேகம் கவனிக்கத்தக்கதாக உள்ளது. முதியோரின் எண்ணிக்கை அதிகரிப்பது, குடும்பங்களின் அளவு குறைவது, மக்கள் நீண்ட காலம் வாழ்வது, ஓய்வுக்காலத் திட்டமிடலில் அதிக கவனம் செலுத்துவது மற்றும் உடல்நலம், நலவாழ்வுக்காக செலவு செய்யும் மனநிலை அதிகரிப்பது ஆகியவை இந்த சந்தையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. ஒருபுறம் தேவை அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் புதிய திட்டங்களை உருவாக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், இந்தத் துறையின் உண்மையான வெற்றி எத்தனை வீடுகள் கட்டப்படுகின்றன என்பதில் மட்டும் இல்லை. முதியவர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் வாழ விரும்பும் வீடுகளாக இந்தத் திட்டங்கள் அமைகின்றனவா என்பதுதான் முக்கியம். திட்டமிட்ட முதலீடுகள் நடைமுறைக்கு வந்து, 2030ஆம் ஆண்டுக்குள் ஒழுங்கமைக்கப்பட்ட முதியோர் குடியிருப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டினால், இந்திய ரியல் எஸ்டேட் சந்தையில் இது ஒரு முக்கியப் பிரிவாக மாறக்கூடும். அப்போது, கோடிக்கணக்கான முதியவர்களுக்கு ஓய்வு என்பது கிடைத்த வீட்டில் வசிப்பது மட்டுமல்ல; தங்களுக்கு பிடித்த இடத்தில், தேவையான வசதிகளுடன், பாதுகாப்பாகவும் சமூகத்துடன் இணைந்தும் வாழ்வதைத் தேர்வு செய்யும் காலமாகவும் மாறலாம்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
முதியோர் வீடுகளுக்கு இவ்வளவு மவுசா? கோவையிலும் புதுச்சேரியிலும் எகிறும் டிமாண்ட்: டாக்டர், அவசர உதவி, பராமரிப்பு எல்லாம் ஒரே இடத்தில்
PulseNews சுருக்கம்

இந்தியாவில் ஓய்வுக்காலத்திற்குப் பிறகு குழந்தைகள் அல்லது சொந்த வீட்டில் வசிப்பது என்ற நிலை மாறி, தற்போது முதியோர் இல்லங்களுக்கான தேவை கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரி போன்ற இடங்களில் அதிகரித்து வருகிறது.

வெறுமனே தங்குவதற்கு மட்டுமன்றி, அருகிலேயே மருத்துவ வசதி, அவசரக்கால உதவிகள், அன்றாட தேவைகள், பொழுதுபோக்கு மற்றும் பிறருடன் பழகும் வாய்ப்பு போன்ற வசதிகளை முதியவர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளதே இந்த மாற்றத்திற்குக் காரணமாகும்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business