யூ.பி.ஐ பயன்படுத்த இனி கட்டணமா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; மத்திய அரசு அளித்த முக்கிய விளக்கம்
யூ.பி.ஐ (UPI) மூலம் பணம் செலுத்தும் பயனர்களுக்கு எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் உள்ள வணிகர்களுக்கு மட்டுமே, டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளுக்கான 'வர்த்தகர் தள்ளுபடி விகிதத்தை' (MDR - Merchant Discount Rate) விட குறைந்தபட்ச எம்.டி.ஆர் கட்டணம் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும்போது விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நபர்களுக்கு இடையிலான (P2P) அனைத்து பரிவர்த்தனைகள் தொடர்ந்து கட்டணமின்றி இலவசமாகவே இருக்கும் என்றும், வணிகர்களுக்கான பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் இருக்காது என்றும் நிதியமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், கட்டணம் எதுவும் நிர்ணயிக்கப்பட்டால், அது குறித்து தேசிய செலுத்துதல்கள் கழகத்தின் (NPCI) கீழ் செயல்படும் 'யூபிஐ மற்றும் சேவைகள் வழிநடத்தல் குழு' முடிவெடுக்கும். தற்போது, கிரெடிட் கார்டுகளுக்கு 1% முதல் 3% வரையிலும், டெபிட் கார்டுகளுக்கு பரிவர்த்தனை மதிப்பில் 0.9% வரையிலும் எம்.டி.ஆர் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க நாடாளுமன்றத்தின் மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட 'வரிவிதிப்பு & பிற சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026' அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படலாம் என்ற விவாதம் எழுந்தது. இந்த மசோதா 'செலுத்துதல் & தீர்வு அமைப்புகள் சட்டம், 2007'-இல் மாற்றங்களை முன்மொழிகிறது. இதன் மூலம் வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை சேவை நிறுவனங்கள், யூபிஐ மற்றும் ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள நிதியமைச்சகம், யூபிஐ அமைப்பின் நீண்டகால நிலைத்தன்மை, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வளர்ந்து வரும் நிதி அபாயங்களை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றை உறுதி செய்யவே இந்த சட்டத்திருத்தம் ஒரு துணை விதியாக கொண்டுவரப்பட்டு உள்ளதாகக் கூறியுள்ளது. அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அரசின் மானியங்களை மட்டுமே நம்பியிருப்பது சாத்தியமில்லை. யூபிஐ தடையின்றி, அனைவருக்குமானதாக மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்றதாக நீடிக்க ஒரு சீரான கட்டமைப்பு தேவைப்படுகிறது என்று நிதியமைச்சகம் கூறி உள்ளது. தற்போது, ரூ.2,000 வரையிலான சிறிய வணிகர்களுக்கான (P2M) பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்த ஊக்குவிப்புத் தொகை பரிவர்த்தனை மதிப்பில் அதிகபட்சமாக 0.15% ஆகக் குறைக்கப்பட்டு, வங்கிகள், சேவை நிறுவனங்கள் மற்றும் 3-ம் தரப்பு செயலிகளுக்குப் பிரித்து வழங்கப்படுகிறது. 2021-22 முதல் 2024-25 வரையிலான காலக்கட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் அரசு ரூ.8,730 கோடியை வழங்கி உள்ளது. எனினும், இது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை துறைக்கு ஏற்பட்ட மொத்த செலவில் 11% மட்டுமே என்று நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை தெரிவித்துள்ளது. பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், இணைய பாதுகாப்பு, மோசடி தடுப்பு நடவடிக்கை மற்றும் உள்கட்டமைப்பைத் தொடர்ச்சியாக மேம்படுத்த கணிசமான நிதி தேவைப்படுகிறது என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 2025-26 ஆம் நிதியாண்டில், ரூ.314 லட்சம் கோடி மதிப்பிலான 24,000 கோடிக்கும் அதிகமான யூபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் வணிகர்களுக்கான மொத்த பரிவர்த்தனைகளில் ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் 4% மட்டுமே. ஆனா இந்த 4% பரிவர்த்தனைகள் மொத்த யூபிஐ பணப் பரிவர்த்தனை மதிப்பில் மூன்றில் இரண்டு பங்காக உள்ளன. இந்தியா தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. யூபிஐ சேவையை கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளுக்கு மேலும் விரிவாக்கவும், அதன் போட்டித்தன்மையைத் தக்கவைக்கவும், இந்த அமைப்பு சுயசார்புடையதாகவும் மலிவானதாகவும் மாற வேண்டும். இந்தச் சட்டத்திருத்தம் யூபிஐ அமைப்பைப் பாதுகாப்பான, மலிவான மற்றும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கான ஒரு முன்னோடி நடவடிக்கையாகும் என்று நிதியமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

யூபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. தனிநபர்களுக்கு இடையிலான அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்றும், வணிகர்களுக்கான பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் எதுவும் இருக்காது என்றும் அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
எதிர்காலத்தில் குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் உள்ள வணிகர்களுக்கு மட்டும், கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை விடக் குறைவான எம்.டி.ஆர் (MDR) கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. யூபிஐ கட்டமைப்பின் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை உறுதிப்படுத்தவே இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.