PulseNews
வணிகம்

ஆதாரம் கேட்ட திமுக; உடனே கருத்தை வாபஸ் பெற்ற சி.வி.சண்முகம்!

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், துறைகள் ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் (27-08-26) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதித்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 10.5% உள்ஒதுக்கீட்டை எதிர்த்து முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் உறவினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த சூழலில், நேற்று (28-08-26) அவை மீண்டும் கூடியது, அப்போது திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், சி.வி.சண்முகம் சொன்ன தகவல் தவறானது என்றும் ஆதாரம் இருந்தால் அது எந்த வழக்கு? வழக்கு எண் என்ன? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சி.வி.சண்முகம், “வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்கக்கூடாது என்று 2021இல் நடைபெற்ற அவர் சார்ந்த சமூகத்தினுடைய பேரவைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த பெயரில் தான் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது அந்த வழக்கிலும் வாதாடியது அவர்கள் தான். அதை மறுக்க முடியாது” என்று கூறினார். அதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்துப் பேசிய சபாநாயகர், சி.வி.சண்முகம் ஆதாரம் இருந்தால் காட்டுங்கள், இல்லையென்றால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுவேன் என்று கூறினார். இதையடுத்து நீண்ட கழித்து பேரவையில் பேசிய சி.வி.சண்முகம், “முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அந்த நபரின் பெயரில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று சொன்னார். நான் இருப்பதாக சொன்னேன், அது தவறு. ஏனென்றால் 10.5% இடஒதுக்கீடு கொடுக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை அவர் பெயர் எல்லா விதத்திலும் வந்து கொண்டே இருந்தது. அதை நம்பி நான் சொன்னேன். அவர் பெயர் அதில் இல்லை, ஆனால் அவர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் போடப்பட்டது. அதை நம்பி நான் ஏற்றுக்கொண்டேன். முன்னாள் அமைச்சர் சொன்னது உண்மை, எனவே நான் சொன்னதை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஆதாரம் கேட்ட திமுக; உடனே கருத்தை வாபஸ் பெற்ற சி.வி.சண்முகம்!
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உறவினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகக் குறிப்பிட்டார்.

சி.வி.சண்முகத்தின் இந்த கருத்திற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டது. திமுக உறுப்பினர்களின் இந்த எதிர்ப்பையும் ஆதாரத்திற்கான கோரிக்கையையும் தொடர்ந்து, தனது கருத்தை சி.வி.சண்முகம் உடனடியாக வாபஸ் பெற்றுக்கொண்டார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business