PulseNews
வணிகம்

இந்தியாவின் எருமை இறைச்சி ஏற்றுமதி அதிகரிப்பு: 5 பில்லியன் டாலராக உயர்ந்த வெற்றிக் கதை

எழுதியவர்: ஹரிஷ் தாமோதரன் இந்தியாவின் சிறப்பாகச் செயல்படும் வேளாண் ஏற்றுமதிப் பொருள் எது? பதில்: எருமை இறைச்சி (Buffalo Meat). இதன் ஏற்றுமதி மதிப்பு 2025-26 நிதியாண்டில் (ஏப்ரல்–மார்ச்) 25.6% அதிகரித்து 5.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டிலும் இதன் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2025 ஏப்ரல்–ஜூன் காலகட்டத்தில் 896.8 மில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி, 2026 ஏப்ரல்–ஜூன் காலகட்டத்தில் 66.6% உயர்ந்து, கிட்டத்தட்ட 1.5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: இது குறித்து வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் ஒருவர் கூறுகையில், “கடந்த நிதியாண்டில் முதல்முறையாக 5 பில்லியன் டாலரைத் தாண்டினோம். 2026-27 நிதியாண்டில் 6 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஏற்றுமதியை எட்டும் பாதையில் உள்ளோம் ஆனால், மொத்த ஏற்றுமதி மதிப்பு அதிகரித்திருப்பது மட்டுமல்ல, இதில் குறிப்பிடத்தக்க அம்சம். ஒரு டன் எருமை இறைச்சிக்குக் கிடைக்கும் சராசரி ஏற்றுமதி மதிப்பும் கணிசமாக உயர்ந்துள்ளது. 2014-15ஆம் ஆண்டில் இந்தியா 14.8 லட்சம் டன் எருமை இறைச்சியை ஏற்றுமதி செய்தது. இதன் மதிப்பு 4.8 பில்லியன் டாலராக இருந்தது. அதாவது, ஒரு டன்னுக்கு சராசரியாக 3,240 டாலர் கிடைத்தது. அதன்பிறகு 2023-24 வரை ஏற்றுமதியின் அளவும் மதிப்பும் குறைந்ததுடன், ஒரு டன்னுக்கான சராசரி வருவாயும் 2,700–3,000 டாலர் அளவுக்குக் குறைந்தது. 2024-25ஆம் ஆண்டில் ஏற்றுமதி மீண்டும் வளரத் தொடங்கியது. அப்போது 4.1 பில்லியன் டாலர் மதிப்பிலான எருமை இறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டது. ஒரு டன்னுக்கான சராசரி மதிப்பு 3,236 டாலராக இருந்தது. இது 2025-26ஆம் ஆண்டில் 3,591 டாலராகவும், 2026 ஏப்ரல்–ஜூன் காலகட்டத்தில் 4,392 டாலராகவும் உயர்ந்தது. ஒரு டன்னுக்குக் கிடைக்கும் அதிகமான மதிப்பு, இந்திய எருமை இறைச்சிக்கான சர்வதேச வரவேற்பு மேம்பட்டிருப்பதைக் காட்டுகிறது. இதற்கு அரசின் கொள்கைகளும் முக்கிய காரணமாக உள்ளன. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) பதிவு செய்யப்பட்டு, கடுமையான பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு விதிமுறைகளைப் பூர்த்தி செய்யும் இறைச்சி பதப்படுத்தும் ஆலைகளிலிருந்து மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், அவ்வப்போது நடத்தப்படும் வழக்கமான மற்றும் திடீர் ஆய்வுகள் மூலம் விதிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றன” என்று கூறியுள்ளார். இந்தியாவில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற 83 ஒருங்கிணைந்த இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சி பதப்படுத்தும் ஆலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தினமும் 500 முதல் 2,000 வரையிலான பெரிய கால்நடைகளை, குறிப்பாக எருமைகளை, கையாளும் திறன் கொண்டவை. இதுதவிர, ஏற்றுமதிக்காக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட 5 தனித்தனி இறைச்சிக் கூடங்களும், 10 இறைச்சி பதப்படுத்தும் ஆலைகளும் உள்ளன. விரிவடைந்து வரும் சந்தை கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்திய எருமை இறைச்சியை உலகளவில் தனித்துவமான பிராண்டாக உருவாக்குவதில் திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். மாட்டிறைச்சிக்கு மாற்றாக இரண்டாம் நிலைத் தயாரிப்பாக அல்லாமல், தனித்துவமான பொருளாக இந்திய எருமை இறைச்சியை நிலைநிறுத்த முயற்சி செய்து வருகிறோம். உலக நாடுகளும் நமது தயாரிப்பின் தரம் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளை அங்கீகரித்து வருகின்றன” என்று அனைத்திந்திய எருமை மற்றும் செம்மறியாடு இறைச்சி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஃபவுசான் அல்வி தெரிவித்தார். மேலும் முன்பு இந்திய எருமை இறைச்சி ஒரு டன்னுக்கு சுமார் 3,000 டாலருக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், பிரேசில் மாட்டிறைச்சி ஒரு டன்னுக்கு 5,000 டாலர் என்ற விலையில் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த விலை வித்தியாசம் தற்போது ஒரு டன்னுக்கு 500–700 டாலராக குறைந்துள்ளது. உலகின் 3-வது பெரிய கால்நடை இறைச்சி ஏற்றுமதி நாடாக இந்தியா உள்ளது. அமெரிக்க வேளாண்மைத் துறை தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டில் இந்தியாவின் கால்நடை இறைச்சி ஏற்றுமதி அளவு, இறந்த விலங்கின் எடைக்கு இணையான கணக்கில் 17 லட்சம் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பிரேசிலின் 42.8 லட்சம் டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் 21.6 லட்சம் டன்னுக்கு அடுத்ததாகும். இந்தியாவின் மூன்று முன்னணி ஏற்றுமதியாளர்கள் மும்பையைச் சேர்ந்த அல்லனசன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் (Allanasons Private Ltd) அபுதாபியைத் தலைமையிடமாகக் கொண்ட லுலு குருப் (LuLu Group) நிறுவனத்துக்குச் சொந்தமான ஃபேர் எக்ஸ்போர்ட் இந்தியா (Fair Exports India) மற்றும் ஆக்ராவைச் சேர்ந்த எச்.எம்.ஏ ஆக்ரோ இன்டஸ்ட்ரீஸ் (HMA Agro Industries) ஆகியவை ஆகும். கரபீப் (Carabeef) என்றும் அழைக்கப்படும் இந்திய எருமை இறைச்சி, சாசேஜ்கள், பர்கர் பாட்டிகள், பதப்படுத்தப்பட்ட நகெட்ஸ், டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் உடனடியாக உண்ணக்கூடிய உணவுகள் போன்ற தொழில்துறை உணவுப் பொருட்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போது, அதிக மதிப்பு கிடைக்கும் வகையில் சில்லறை விற்பனை மூலம் எருமை இறைச்சியை அதிக அளவில் விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 20–30 கிலோ எடையுள்ள மொத்த உறைந்த இறைச்சித் தொகுதிகளுக்குப் பதிலாக 1 கிலோ அல்லது அதற்குக் குறைவான நுகர்வோர் பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது. அக்டோபர் 29ஆம் தேதி முதல், உறைந்த மற்றும் குளிரூட்டப்பட்ட அனைத்து எருமை இறைச்சி ஏற்றுமதிகளுக்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், ஒரு டன்னுக்கு ரூ.250 வரி விதித்து வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் தொகை, 2008ஆம் ஆண்டு பாஸ்மதி அரிசிக்காக உருவாக்கப்பட்ட நிதியைப் போன்ற இறைச்சி ஏற்றுமதி மேம்பாட்டு நிதிக்கு செல்கிறது. புதிய சந்தைகளுக்கும் ஏற்கனவே உள்ள சந்தைகளுக்கும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதே இந்த நிதியின் நோக்கம். வர்த்தகக் குழுக்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு நிதியளிப்பது, சர்வதேச வாங்குபவர்–விற்பனையாளர் கண்காட்சிகளை நடத்துவது முதல், சந்தை அணுகலைத் தடுக்கும் வரியல்லாத தடைகளை எதிர்கொள்வது வரை பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்தார். இந்த முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு இந்திய எருமை இறைச்சியின் ஏற்றுமதி சந்தைகள் பல்வேறு நாடுகளுக்கு விரிவடைந்திருப்பதே சான்றாக உள்ளது. 2014-15ஆம் ஆண்டில் இந்தியாவின் 4.8 பில்லியன் டாலர் மதிப்பிலான எருமை இறைச்சி ஏற்றுமதியில் 45% வியட்நாமுக்குச் சென்றது. வியட்நாம் 2.2 பில்லியன் டாலர் மதிப்பிலான இறைச்சியை இறக்குமதி செய்தது. அதைத் தொடர்ந்து மலேசியா (422.9 மில்லியன் டாலர்), எகிப்து (422.3 மில்லியன் டாலர்), தாய்லாந்து (393.4 மில்லியன் டாலர்), சவுதி அரேபியா (259 மில்லியன் டாலர்), ஐக்கிய அரபு அமீரகம் (130.8 மில்லியன் டாலர்), அல்ஜீரியா (125.1 மில்லியன் டாலர்), பிலிப்பைன்ஸ் (115.8 மில்லியன் டாலர்) ஆகிய நாடுகள் இருந்தன. 2025-26ஆம் ஆண்டில் நிலைமை மாறியுள்ளது. மொத்தம் 5.1 பில்லியன் டாலர் ஏற்றுமதியில், 10 நாடுகள் தலா 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான எருமை இறைச்சியை இறக்குமதி செய்துள்ளன. வியட்நாம் – 933.9 மில்லியன் டாலர், எகிப்து – 725 மில்லியன் டாலர், மலேசியா – 654.1 மில்லியன் டாலர், ஐக்கிய அரபு அமீரகம் – 444.2 மில்லியன் டாலர், சவுதி அரேபியா – 359.3 மில்லியன் டாலர், உஸ்பெகிஸ்தான் – 307 மில்லியன் டாலர், இந்தோனேசியா – 301.3 மில்லியன் டாலர், ஈராக் – 300.1 மில்லியன் டாலர், பிலிப்பைன்ஸ் – 176.6 மில்லியன் டாலர், ஜோர்டான் – 105.5 மில்லியன் டாலர் “உஸ்பெகிஸ்தான் ஒரு புதிய சந்தையாகும். அதேபோல், ரஷ்யா (97.5 மில்லியன் டாலர்), ஜார்ஜியா (70.5 மில்லியன் டாலர்), ஓமன் (82.7 மில்லியன் டாலர்), செனகல் (70.9 மில்லியன் டாலர்) போன்ற நாடுகளும் குறிப்பிடத்தக்க அளவில் இந்திய எருமை இறைச்சியை வாங்கும் முக்கிய சந்தைகளாக மாறியுள்ளன” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார். பால் உற்பத்தித் துறைக்கு ஆதரவாக எருமை இறைச்சி ஏற்றுமதி எருமை இறைச்சி ஏற்றுமதியின் வெற்றி என்பது சந்தை விரிவடைந்து, ஒரு டன்னுக்குக் கிடைக்கும் மதிப்பு அதிகரிப்பதுடன் மட்டும் முடிவடைவதில்லை. இது இந்தியாவின் கால்நடை பொருளாதாரத்திற்கும், பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் பல்வேறு வகைகளில் பயனளிக்கிறது. இந்தியா மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்குவதில்லை. கரா பீப் (Carabeef) எனப்படும் எருமை இறைச்சி ஏற்றுமதியும் போதுமான அளவு பால் கொடுக்காத எருமைகளிலிருந்தே வருகிறது. பொதுவாக சுமார் 5 முறை கன்று ஈன்ற பிறகு அல்லது பால் கொடுக்கும் திறன் குறைந்தபோது, அதாவது 8–9 வயதை எட்டும்போது, பால் உற்பத்தி குறைந்த எருமைகள், மலட்டுத்தன்மை கொண்டவை, மடி பாதிக்கப்பட்டவை அல்லது ஆண் எருமைகள் இறைச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன. விவசாயிகளுக்கு இத்தகைய உற்பத்தி செய்யாத விலங்குகளைப் பராமரிப்பது பொருளாதார ரீதியாகச் சுமையாகும். குறிப்பாக, தீவனம், உணவு, தண்ணீர் மற்றும் தொழிலாளர் வளங்களை தற்போது அல்லது எதிர்காலத்தில் பால் தரும் கால்நடைகளிடமிருந்து விலக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. உற்பத்தி செய்யாத கால்நடைகளுக்கு சந்தையை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், இறைச்சி ஏற்றுமதித் தொழில் பால் உற்பத்தித் துறைக்கு துணையாக செயல்படுகிறது. உதாரணமாக, 400 கிலோ எடையுள்ள ஒரு எருமையிலிருந்து சுமார் 125 கிலோ இறைச்சி கிடைக்கும். மீதமுள்ள எடையில் எலும்புகள், தோல், உண்ணக்கூடிய மற்றும் உண்ண முடியாத உட்பாகங்கள், ரத்தம், கொம்புகள், குளம்புகள் மற்றும் செரிக்கப்படாத உணவுப் பொருட்கள் ஆகியவை அடங்கும். சராசரியாக 100 கிலோ எலும்பில்லா இறைச்சி கிடைக்கும் எனக் கணக்கிட்டால், ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யப்படும் 14–15 லட்சம் டன் இறைச்சிக்கு சுமார் 1.4–1.5 கோடி எருமைகள் இறைச்சிக்காகத் தேர்வு செய்யப்பட வேண்டியிருக்கும். 2019ஆம் ஆண்டு கால்நடை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் சுமார் 11 கோடி எருமைகள் உள்ளன. இதனால் விவசாயிகள் குறைந்த அளவு பால் தரும் அல்லது வயதான எருமைகளைப் படிப்படியாக மாற்றி, அதிக பால் தரும் இளம் எருமைகளை வளர்க்க முடிகிறது. வணிகரீதியான பால் பண்ணைகளில் பரிந்துரைக்கப்படும் கால்நடை மாற்று விகிதம் உண்மையில் 25–30% ஆகும். பிரேசில், ஆஸ்திரேலியா அல்லது அமெரிக்காவில் மாட்டிறைச்சிக்காக வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் பால் உற்பத்திக்காக வளர்க்கப்படும் கால்நடைகள் குறைந்த வளங்களுக்காக போட்டியிடுகின்றன. இந்தியாவில் அத்தகைய போட்டி இல்லை. ஏனெனில் இங்கு மாடுகளும் எருமைகளும் குறிப்பாக இறைச்சிக்காக வளர்க்கப்படுவதில்லை. பால் தராத எருமைகள் மட்டுமே இறைச்சிக்காகத் தேர்வு செய்யப்படுகின்றன. இது உண்மையில் பால் உற்பத்தித் துறைக்கு நன்மை அளிக்கிறது” என்று தொழில்துறை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். இறைச்சிக் கூடங்கள் எருமைகளை வாங்கும்போது வழங்கும் விலை, அவற்றிலிருந்து கிடைக்கும் இறைச்சி மற்றும் எலும்புகளின் எடையை அடிப்படையாகக் கொண்டது. இது பொதுவாக உயிருடன் இருக்கும் எருமையின் எடையில் 47–48% ஆக இருக்கும். அதன்படி, 400 கிலோ எடையுள்ள எருமையிலிருந்து சுமார் 190 கிலோ கார்காஸ் வெயிட் (carcass weight) கிடைக்கும். உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆலைகளுக்கு தற்போது கொண்டு வரப்படும் எருமைகளுக்கு ஒரு கிலோ கார்காஸ் வெயிட் (carcass weight)-க்கு ரூ.300–320 வரை விலை வழங்கப்படுகிறது. 190 கிலோவுக்கு இது சுமார் ரூ.57,000–60,800 ஆகும். பால் விவசாயியைப் பொறுத்தவரை, 3.5–4 வயதுடைய, முதல் முறையாக பால் கொடுக்கும், ஆண்டுக்கு 2,000 லிட்டர் அல்லது அதற்கு மேல் பால் தரக்கூடிய எருமையின் விலை சுமார் ரூ.1.25–1.5 லட்சம் ஆகும். ஒரு விவசாயி வயதான எருமையை விற்பதன் மூலம் ரூ.50,000 பெற முடிந்தால், புதிய உற்பத்தித் திறன் கொண்ட எருமையை வாங்குவதற்கான செலவில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கை ஈடுகட்ட முடியும். எனவே, இறைச்சித் தொழில் பால் உற்பத்தித் தொழிலின் பொருளாதார வைபிலிட்டியை (viability) அதிகரிக்கிறது. பழைய எருமைகளைத் தொடர்ந்து மாற்றி, புதிய உற்பத்தித் திறன் கொண்ட எருமைகளை வளர்க்க இது உதவுகிறது. எருமை வளர்ப்பில் அதிகரிக்கும் நம்பிக்கை இந்தியாவில் அதிக கொழுப்பு கொண்ட பாலுக்கான தேவை, வழக்கமான டோனட் மில்க் (toned milk)-க்கான தேவையை விட இரண்டு மடங்கு வேகத்தில் அதிகரித்து வருவதாக குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ். சோதி தெரிவித்துள்ளார். நெய், கிரீம், பனீர், ஐஸ்கிரீம் மற்றும் கோவா அடிப்படையிலான இனிப்புகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இவற்றின் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விகிதம் 0–5% ஆகக் குறைக்கப்பட்டதும், கலப்பட நெய், போலி கோவா மற்றும் பனீருக்கு எதிராக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் இந்தப் பொருட்களுக்கான தேவையை மேலும் அதிகரித்துள்ளன. இவை அனைத்திற்கும் அதிக கொழுப்பு கொண்ட பால் தேவைப்படுகிறது. அந்த வகை பால் பெரும்பாலும் எருமைகளிடமிருந்தே கிடைக்கிறது” என்று அவர் தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள பால் ஆலைகள் எருமைப் பாலை ஒரு கிலோ கொழுப்புக்கு ரூ.880–920 என்ற விலையில் கொள்முதல் செய்கின்றன. 6.5% கொழுப்பு கொண்ட பாலுக்கான விலை லிட்டருக்கு சுமார் ரூ.59–62 ஆக இருக்கும். பால் விற்பனை மூலம் சராசரியாக லிட்டருக்கு ரூ.60 வருமானமும், வயதான அல்லது உற்பத்திக்குத் தகுதியற்ற எருமைகளை விற்பதன் மூலம் ரூ.50,000 வருமானமும் கிடைப்பதால், அதிகரித்து வரும் நுகர்வோர் தேவையைப் பயன்படுத்தி விவசாயிகள் எருமைகளை வளர்த்து பால் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கமடைகின்றனர். ஏற்றுமதியாளர்களின் கோரிக்கை எருமை இறைச்சி ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பது கொள்கையில் தெளிவும் நிலைத்தன்மையும் ஆகும். உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஏ.க்யூ ஃபெரோஸ் புட்ஸ் (A.Q. Frozen Foods (Amroha), அல் ஃபலா க்ளோபல் (Al-Falah Global) மற்றும் அல்-ரஹ்மான் ஃபெரோஸ் புட்ஸ் (Al-Rehman Frozen Foods (Sambhal), அல் ஹக்யூ புட்ஸ் (Al Haq Foods (Unnao), ஒமர் இன்டர்நேஷ்னல் (Omar International (Bijnor) ஆகிய ஐந்து ஆலைகளும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) பதிவு பெறுவதற்கான அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்திருந்தபோதிலும் மூடப்பட்டுவிட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு இரண்டு விஷயங்களில் தெளிவாக உள்ளது. கோவன்ஷ் (மாடுகள்) கொல்லப்படக்கூடாது; உரிமம் இல்லாமல் சட்டவிரோத இறைச்சிக் கூடங்கள் செயல்படக்கூடாது. இதை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். எங்களுடைய பிரச்சினை என்னவென்றால், மேல்மட்டத்தில் வகுக்கப்பட்ட விதிகளுக்கு மாறாக கீழ்மட்ட அதிகாரிகள் வெவ்வேறு விதிகளைப் பின்பற்றும்போதுதான்” என்று தொழில்துறை வட்டாரத்தைச் சேர்ந்த அந்த நபர் விளக்கினார்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இந்தியாவின் எருமை இறைச்சி ஏற்றுமதி அதிகரிப்பு: 5 பில்லியன் டாலராக உயர்ந்த வெற்றிக் கதை
PulseNews சுருக்கம்

இந்தியாவின் வேளாண் ஏற்றுமதிப் பொருட்களில் எருமை இறைச்சி முன்னணியில் உள்ளது. 2025-26 நிதியாண்டில் இதன் ஏற்றுமதி மதிப்பு 25.6 சதவீதம் அதிகரித்து, 5.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இந்த வளர்ச்சி நடப்பு நிதியாண்டிலும் தொடர்ந்து காணப்படுகிறது. கடந்த 2025 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 896.8 மில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி, 2026 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 66.6 சதவீதம் உயர்ந்து சுமார் 1.5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business