தினசரி ரூ. 250 சேமித்தால் ரூ. 40 லட்சம்: செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்குவது எப்படி? மத்திய அரசின் சூப்பர் திட்டம்
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் கல்வி, உயர்கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காகப் பெரிய நிதியை உருவாக்குவது இன்றைய காலகட்டத்தில் முக்கியமான ஒன்றாகும். இதற்கு, குழந்தை பிறந்தவுடனேயே சிறுகச் சிறுகச் சேமிக்கத் தொடங்கினால், எதிர்காலத்தில் ஒரு பெரிய நிதியைச் சுலபமாக உருவாக்க முடியும். இந்தப் பின்னணியில், மத்திய அரசால் பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக பிரத்தியேகமாக தொடங்கப்பட்ட திட்டமே 'செல்வமகள் சேமிப்புத் திட்டம்' (Sukanya Samriddhi Yojana). இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு அரசு அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. மிக இளம் வயதிலேயே பெண் குழந்தையின் பெயரில் கணக்கைத் தொடங்கலாம் என்பதுடன், ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை சேமிக்கலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும். தற்போது, இத்திட்டத்திற்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. கணக்கைத் தொடங்குவது எப்படி? வயது வரம்பு என்ன? பெண் குழந்தைக்கு 10 வயது நிறைவடைவதற்கு முன்பாகவே இந்தக் கணக்கைத் தொடங்க வேண்டும். குழந்தையின் பெற்றோரோ அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலரோ கணக்கைத் தொடங்கலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு பெண் குழந்தைகளின் பெயரில் மட்டுமே கணக்குகளை தொடங்க முடியும். (இரட்டையர்கள் அல்லது ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தால் சிறப்பு விதிகள் பொருந்தும். வங்கிகள் அல்லது அஞ்சலகங்களில் இதனை விசாரித்துக் கொள்ளலாம்). குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச சேமிப்பு விவரம் இத்திட்டத்தை குறைந்த முதலீட்டில் தொடங்க முடியும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சமாக ரூ. 250 செலுத்துவது கட்டாயம். அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம். தற்போதைய நிலவரப்படி, இத்திட்டத்திற்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யப்படுவதால், கூட்டு வட்டி முறையில் முதிர்வுத் தொகை கணிசமாக அதிகரிக்கும். தினசரி ரூ. 250 சேமித்தால் கிடைக்கும் ரூ. 40 லட்சம் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் நீங்க தினசரி ரூ. 250 வீதம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு மொத்தம் ரூ. 91,250 சேரும். விதிமுறைகளின்படி, இந்தத் தொகையை 15 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து செலுத்தினால், உங்களுடைய மொத்த முதலீடு ரூ. 13,68,750 ஆக இருக்கும். தற்போதைய வட்டி விகிதமான 8.2% அப்படியே தொடர்ந்தால், 21 ஆண்டுகள் கழித்து கணக்கு முதிர்ச்சியடையும்போது உங்களுக்கு சுமார் ரூ. 40.4 லட்சம் திரும்பக் கிடைக்கும். (குறிப்பு: வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டிற்கும் அரசு மறுஆய்வு செய்யும் என்பதால், வட்டி விகிதம் மாறினால் முதிர்வுத் தொகையிலும் மாற்றங்கள் ஏற்படும்). வரிச் சலுகைகள் மற்றும் முதிர்வு காலம் பழைய வருமான வரி விதிமுறையின் கீழ், பிரிவு 80C-இன் படி இத்திட்டத்தில் செய்யப்படும் ஆண்டு முதலீடு (ரூ. 1.5 லட்சம் வரை) வரி விலக்கு பெறத் தகுதியுடையது. இதில் கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கும் முழுமையான வரி விலக்கு உண்டு. கணக்குத் தொடங்கப்பட்ட தேதியிலிருந்து 21 ஆண்டுகளுக்கு பிறகு முதிர்ச்சியடையும். பெண் குழந்தை 18 வயதை நிறைவு செய்த பிறகு, அவரின் உயர்கல்வித் தேவைக்காக கணக்கிலுள்ள தொகையில் 50% வரை எடுத்துக்கொள்ள முடியும். சில தவிர்க்க முடியாத சிறப்புச் சூழல்களில் (உதாரணமாக, கணக்குதாரர் மரணம்) முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை முடித்துக்கொள்ளவும் விதிகளில் இடமுண்டு. பாதுகாப்பான மற்றும் அதிக வருவாய் தரக்கூடிய முதலீட்டைத் தேடும் பெற்றோருக்கு, செல்வமகள் சேமிப்புத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக அமையும்.

பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காக இப்போதிலிருந்தே சிறு சேமிப்பைத் தொடங்குவது எதிர்காலத்திற்குப் பெரும் பலனாக அமையும். இதற்காக மத்திய அரசு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை பிரத்யேகமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
தினசரி 250 ரூபாய் சேமிப்பதன் மூலம் முதிர்வு காலத்தில் 40 லட்சம் ரூபாய் வரை பெற முடியும். பெண் குழந்தைகளின் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது.