தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் நிர்வாகிகளுக்கு பதவி கிடைக்காததால் அதிருப்தி? விஜய்யை சந்திக்க திட்டம்!
2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சினைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், கட்சியில் இணைந்து சுமார் மூன்று மாதங்கள் நெருங்கியும் பலருக்கு இன்னும் பதவிகள் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவில் இணைந்தபோது முன்னாள் அதிமுக நிர்வாகிகளுக்கு அவர்களின் அரசியல் அனுபவத்துக்கு ஏற்ப மாநில மற்றும் மாவட்ட அளவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஒரு சிலருக்கு மட்டும் பதவிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்னும் காத்திருப்பு பட்டியலிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர்களான எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், சிவபதி, எஸ்.வளர்மதி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்ளிட்ட பலரும் தவெகவில் இணைந்துள்ளனர். ஆனால், இவர்களில் பலருக்கு இதுவரை எந்த முக்கிய பொறுப்பும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை பலமுறை நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் சந்தித்து தங்களது எதிர்பார்ப்புகளை தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு முறையும், “தலைவரிடம் பேசியிருக்கிறோம், விரைவில் நல்ல அறிவிப்பு வரும்” என உறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அறிவிப்பு தொடர்ந்து தாமதமாகி வருவதால் முன்னாள் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, அதிமுக மாணவரணி செயலாளர் பதவியில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு முக்கியமான பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கமான TANSIM நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சு நிலவி வருகிறது. இதனால், தங்களுக்கு மட்டும் ஏன் தொடர்ந்து தாமதம் செய்யப்படுகிறது என்ற கேள்வியை முன்னாள் அதிமுக நிர்வாகிகள் எழுப்பி வருவதாக கூறப்படுகிறது. மேலும், “இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பது?” என்ற மனநிலையில் சிலர் இருப்பதாகவும், இதுகுறித்து முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க அவர்கள் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யை சந்திக்க தயாராகி வருவதாக கூறப்படும் நிர்வாகிகள் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமின்றி, பாலகங்கா, நீலகிரி கப்பச்சி வினோத், பச்சைமால், மாநில வர்த்தகர் அணி தலைவர் கே.என்.ராமச்சந்திரன், முன்னாள் துணைக் கொறடா சு.ரவி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட பலரும் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தவெகவில் இதுவரை தனியாக தொழிற்சங்க அமைப்பு தொடங்கப்படாததும் முன்னாள் அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகளிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்தில் இருந்து விலகிய பலரும் தவெக தொழிற்சங்கம் தொடர்பான அறிவிப்புக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வந்த முக்கிய நிர்வாகிகளுக்கு தொடர்ந்து பதவி வழங்கப்படாமல் இருப்பது கட்சிக்குள் புதிய அதிருப்தியை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே புதியவர்களுக்கும், பழைய தவெக நிர்வாகிகளுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், முன்னாள் அதிமுக நிர்வாகிகளின் இந்த அதிருப்தி மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால், முதல்வர் விஜய்யை சந்திக்கும் முயற்சி வெற்றியடைந்தால், பதவி எதிர்பார்ப்பில் உள்ள முன்னாள் அதிமுக நிர்வாகிகளுக்கு விரைவில் பொறுப்புகள் அறிவிக்கப்படுமா அல்லது அவர்களது காத்திருப்பு மேலும் தொடருமா என்பதே தற்போது தவெக மற்றும் அதிமுக வட்டாரங்களில் எதிர்பார்ப்பாக உள்ளது.

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்விக்குப் பிறகு, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர். கட்சி மாறிய அவர்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், தவெகவில் இணைந்து மூன்று மாதங்கள் கடந்தும் பலருக்கு இன்னும் பதவிகள் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்துள்ள அந்த நிர்வாகிகள், இது குறித்துப் பேசுவதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய்யைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.