PulseNews
வணிகம்

நெடுஞ்சாலைத்துறை அவலம்! -அதிர்ச்சியூட்டும் பின்னணி!

த மிழகத்தின் சாலைகளை அமைப்பதும், பராமரிப்பதும் மட்டுமல்ல... மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மிகப்பெரிய துறை நெடுஞ்சாலைத் துறை. தலைமைப் பொறியாளர் முதல் சாலைப் பணியாளர் வரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றும் இந்தத் துறையில், கடந்த சில மாதங்களாக நிர்வாக ரீதியாக ஏற்பட்டிருக்கும் குழப்பம், பொறியாளர்களிடையே உருவாகியிருக் கும் அச்சம், காலியாகக் கிடக்கும் முக்கிய பணி யிடங்கள், மறுசீரமைப்பு நடைமுறையில் ஏற் பட்டிருக்கும் சிக்கல்கள் என பல்வேறு தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. நெடுஞ்சாலைத்துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும், துறையின் உள்விவகாரங்களை நன்கு அறிந்த உயர்மட்ட நேர்மையான அதிகாரி ஒருவரிடமிருந்து கிடைத்த பின்னணி விபரங்களைப் பார்ப்போம். அரசாணை வெளியானது... அமலுக்கு வந்ததா? 2026 மார்ச் மாதம். நெடுஞ்சாலைத்துறையை மறுசீரமைப்பதற்கான அரசாணையை அப்போ தைய தி.மு.க. அரசு வெளியிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் 200 புதிய அலுவலகங்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்த புதிய அலுவலகங்கள் அனைத்தும் 15.06.2026 முதல் செயல்பட வேண்டும் என்பதுதான் திட்டம். அதாவது, அரசாணை வெளியான மார்ச் மாதத்திலிருந்து ஜூன் 15-ம் தேதி வரையிலான காலத்தில் புதிய அலுவலகங்களுக்கான கட்டமைப்பு, பணியாளர் ஒதுக்கீடு, கோப்புகள் மாற்றம், பணியாளர் அடையாள எண்கள் உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்... ஜூன் 15 கடந்துவிட்டது. புதிய அலுவலகங்கள் முழுமை யாக உருவாகவில்லை. அதற்குப் பதிலாக ஏற்கெனவே இருக்கும் அலு வலகங்கள், பயணியர் விடுதிகள் உள்ளிட்ட இடங் களிலேயே புதிய அலுவல கங்கள் செயல்படுவதாகச் சொல்லப்படும் நிலை தொடர்கிறது. கட்டடம் கட்டுவதற்கு முன்பே பேனர்... புகைப்படம்... அதற்கு மட்டும் வேகம் காட்டும் நிர்வாகம், அலுவலகத்தை உருவாக்கு வதில் ஏன் வேகம் காட்ட வில்லை என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. “நெடுஞ்சாலைத்துறையின் புதிய அலுவலகங்களின் நிலையைப் பார்க்கும்போது, அதுதாண்ணே இது... இது தாண்ணே அது...”கரகாட்டக் காரன் செந்தில் காமெடிதான் நினைவுக்கு வருகிறது. சென்னையைத் தாண்டி... நான்கு மண்டலங்களாகப் பிரிப்பு! இதுவரை நெடுஞ் சாலைத்துறையின் மாநில அளவிலான தலைமைப் பொறியாளர் பணியிடம் சென்னையை மையமாகக் கொண்டிருந்தது. மறு சீரமைப்புக்குப் பிறகு நிர்வாகம் சென்னை, திருச்சி, கோவை, மதுரை என மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் அலகுகள், திட்டப் பணிகள், சென்னை மாநகரச் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளும் புதிய நிர்வாக அமைப்புக்குள் மாற்றப்பட்டுள்ளன. நெடுஞ் சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கான அலுவலகங்களும் மாற்றி யமைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவு என்ன? ஒரு அலு வலகத்தில் இருந்த கோப்பு இன்னொரு அலுவலகத் துக்குச் செல்ல வேண்டும். ஒரு பணியாளரின் நிர்வாக விவரம் ஒரு அலுவலகத்தி லிருந்து மற்றொரு அலு வலகத்துக்குச் செல்ல வேண்டும். பணியாளர் களுக்கு அரசு வழங்க வேண்டிய வேலை அடையாள எண்கள் வழங்கப்பட வேண்டும். இப்படி ஏராளமான நிர்வாக நடவடிக்கைகள் ஒரே நேரத்தில் நடை பெற வேண்டிய நிலை. இதற்காக அரசாணையி லேயே மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த கால அவகாசம் கடந்தும் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்பதுதான் துறைக்குள் இருந்து தெரியவரும் உண்மை நிலை. “பணம் வேண்டாம்... நேர்மையாக இருங்கள்!” இதற்கிடையே உயர்மட்டப் பொறியாளர் களை அழைத்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “"இந்த ஆட்சியில் மினிஸ்டருக்கு பணம் வேண்டாம்... நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும்''’என்று பேசினார். நேர்மை வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால்... நேர்மையை நடைமுறைக்குக் கொண்டுவரும் நிர்வாகக் கட்டமைப்பு எங்கே? புதிய அலுவலகங்கள் எங்கே? பணியாளர்களின் அடையாள எண்கள் எங்கே? காலியாக இருக்கும் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? கோப்புகள் எப்படி மாற்றப்படும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தெளிவான நிர்வாக விளக்கம் இல்லாமல், நேர்மையாக மட்டும் இருக்கச் சொன்னால் எப்படி? இதுதான் தற்போது நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்குள் எழுந்திருக்கும் கேள்வி. 40 ஆண்டுகளாகப் படிந்த கறை... “கமிஷன்’ என்ற வார்த்தை! நெடுஞ்சாலைத்துறையில் 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வருவதாகவும், தொடர்ந்து தொழிற்சங்கப் பிரதிநிதியாக இருப்பதாகவும் கூறும் அந்த அதிகாரி, இன்னொரு முக்கியமான விஷயத்தை வெளிப்படையாகச் சொல்கிறார். "நெடுஞ்சாலைத் துறையில் கடந்த 40 ஆண்டுகளாக ஊழல் என்பது தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக மாறிவிட்டது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதே துறையில் நேர்மையை உயிர்மூச்சாகக் கொண்டு பணியாற்றும் பொறியாளர்களும் பணியாளர்களும் இருக்கிறார் கள். அரசுத் துறையில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி முதல் அலுவலக உதவியாளர் வரை யாராக இருந்தாலும் லஞ்சம் பெறுவதை நியாயப் படுத்த முடியாது. புகார் வந்தால் நடவடிக்கை யிலிருந்து தப்பவும் முடியாது. இந்தத் துறையில் பலர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. சிலர் தண்டனை பெற்றிருக்கிறார்கள். சில வழக்குகளில் விசாரணை முடிந்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டவர்களும் உள்ள னர். அதாவது, நடவடிக்கை என்பது புதிதல்ல. ரூ.8,000 கோடி பில்கள்... கமிஷன் வசூல் நடந்ததா? நெடுஞ்சாலைத்துறையில் நிர்வாக ரீதியாக நிலுவையில் இருக்கும் பணிகளின் பில்களுக்காக மட்டும் ரூ.8,000 கோடிக்கும் மேற்பட்ட தொகைக்கு கமிஷன் வசூல் நடந்திருக்கிறது. இந்த விவரங்களை அமைச்சரிடம் கொண்டு சென்று நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சில பொறி யாளர்கள் செயல்பட்டனர். ஆதவ் அர்ஜுனாவும் போட்டு வாங்குவது போல், சில பொறியாளர்கள் மூலம் காய்களை நகர்த்தினார். இறுதியில் அந்த அதிகாரிகளுக்கே சிக்கலாகிவிட்டது. “சொந்தக் காசில் சூனியம் வைத்தது மாதிரி''’என்கிறார்கள் துறைக்குள் இருப்பவர்கள். பணியிட மாறுதல்... ரூ.10 லட்சத்தில் தொடங்கி கோடிகளில் முடிந்ததா? நெடுஞ்சாலைத்துறையில் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வரும் இன்னொரு விஷயம் பணியிட மாறுதல். ஒரு பொறியாளர் விரும்பிய இடத்துக்கு மாற வேண்டுமென்றால் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக கோடிகள் வரை பணம் பெறப்பட் டுள்ளது. இந்தப் பின்னணியில்தான் புதிய அமைச்ச ராக ஆதவ் அர்ஜுனாவை நேரடியாகச் சந்தித்த போது, இதுபோன்ற நடைமுறைகள் தமக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். இனி பணியிட மாறுதல்கள் கையூட்டு அடிப்படையில் இருக்காது; முறையான பொது பணியிட மாறுதல் கவுன்சிலிங் மூலமாகவே நடைபெறும் என்று உறுதியளித்தார். ஆனால்... இன்றுவரை அந்த வாக்குறுதி நடைமுறைக்கு வரவில்லை என்பதுதான் அதிகாரிகள் தரப்பில் எழும் குற்றச்சாட்டு. அமைச்சர் எங்கே? பொறியாளர்கள் யாரிடம் செல்வது? தற்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா யாரையும் சந்திப்பதில்லை. அரசு செயலாளருடன் மட்டுமே தொடர்பு வைத்துக்கொள்கிறார். இதனால் துறையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கே அமைச்ச ரிடம் நேரடியாகப் பேசுவதில் தயக்கம் ஏற்பட்டுள் ளது. தைரியமாகப் பேச வேண்டியவர்கள் அமைதியாகிவிட்டால்... கீழே இருப்பவர்கள் என்ன செய்வார்கள்? அதுதான் இப்போது நடக்கிறது. 13 பதவிகளில் 6 காலி... தலைமைப் பொறியாளர் கூட இல்லை! நெடுஞ்சாலைத்துறையின் உயர்மட்ட நிர்வாகத்தில் ஏற்பட்டிருக்கும் காலியிடங்களின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கிறது. 13 தலைமைப் பொறியாளர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதோடு கண்காணிப்புப் பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கோட்டப் பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. உதவிக் கோட்டப் பொறியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. நெடுஞ்சாலைத்துறை வரலாற்றில் இவ்வளவு நீண்ட காலமாக பொறியாளர் பணியிடங்கள் காலியாக இருந்ததில்லை. அந்த அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. அரசாணை சொன்னது ஒன்று... நெடுஞ்சாலைத்துறையில் நடந்தது வேறொன்றா...? (வரும் இதழில்...) -ராம்கி

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நெடுஞ்சாலைத்துறை அவலம்! -அதிர்ச்சியூட்டும் பின்னணி!
PulseNews சுருக்கம்

தமிழகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் சாலைப் பராமரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் நெடுஞ்சாலைத் துறையில், கடந்த சில மாதங்களாக நிர்வாக ரீதியாகப் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கின்றன. சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட இந்தத் துறையில், முக்கியப் பணியிடங்கள் காலியாக இருப்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாகச் சீரமைப்புப் பணிகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் காரணமாகப் பொறியாளர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இந்தத் துறையின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business