சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரிக்கு படகுப் போக்குவரத்து! - வெளியான மெகா பிளான்!

சென்னை: சென்னை மாமல்லபுரம், புதுச்சேரி இடையே படகு போக்குவரத்து சேவை கொண்டு வரப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

சென்னை - மாமல்லபுரம்- புதுச்சேரி இடையே படகு போக்குவரத்து சேவை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பல்வேறு புதிய உட்கட்டமைப்புத் திட்டங்களை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறிவித்தார்.

கடல்வழி உயர்மட்டச் சாலை மற்றும் படகுப் போக்குவரத்து:

மும்பை - நவிமும்பை கடல் இணைப்புச் சாலையைப் போல, சென்னை – மாமல்லபுரம் – புதுச்சேரியை இணைக்கும் வகையில் புதிய கடல்வழி உயர்மட்டத் தொடர் சாலை அமைக்கப்படும். மேலும், கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்த சென்னை, மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே படகுப் போக்குவரத்து சேவை அறிமுகப்படுத்தப்படும்.

புதிய தொழில்நுட்ப விரைவுச் சாலைகள்:

சென்னை, கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய விரைவுச் சாலைகள் உருவாக்கப்படும். சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான 8 வழிச் சாலைத் திட்டம், கிளம்பாக்கம் - செங்கல்பட்டு உயர்மட்டச் சாலை மற்றும் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்.

ரூ.500 கோடியில் சாலைப் பாதுகாப்பு இயக்கம்:

‘முதலமைச்சரின் பாதுகாப்பான சாலை இயக்கத் திட்டத்தின்’ கீழ் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீட்டில் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிதல், நெடுஞ்சாலை அவசரச் சிகிச்சை மையங்கள் நிறுவுதல் மற்றும் சாலைப் பாதுகாப்புக் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்தல் போன்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறைப்பு நடவடிக்கைகள்:

பாடி முதல் திருநின்றவூர் வரை தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய உயர்மட்டச் சாலை அமைக்கப்படும்.

வடசென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.20 லட்சத்தில் புதிய திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

பேசின் பிரிட்ஜ் சந்திப்பில் உள்ள குறுகிய பாலம் மற்றும் வியாசர்பாடி ரயில்வே மேம்பாலம் ஆகியவை அகலப்படுத்தப்படும். கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள பாலமும் விரிவுபடுத்தப்படும்.

சென்னைச் சாலைகளில் புதிய மேம்பாடுகள் மற்றும் நடைமேம்பாலங்கள் அமைக்க ரூ.432 கோடி செலவிடப்படும்.

மாவட்டங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கான திட்டங்கள்:

ரூ.1,000 கோடி மதிப்பில் 7 மாநகராட்சிகளில் உள்ள 500 கி.மீ முக்கியச் சாலைகள் மேம்படுத்தப்படும்.

கோவை மாவட்டம் குறிச்சிகுளம் முதல் சிட்கோ வரை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.40 லட்சம் மதிப்பில் மேம்பால திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்படும்.

ஊரகச் சாலைகளை மேம்படுத்த ரூ.2,550 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் ஆன்மீக மண்டல படகுச் சேவைகள்:

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் இருந்து பாம்பன் கால்வாய் வழியாக மண்டபம் வரை உள்நாட்டுப் பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை தொடங்கப்படும். மேலும், இந்தியா - இலங்கை இடையேயான படகுப் போக்குவரத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழில்நுட்பம் மற்றும் பெருந்திட்டம்:

நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்த ‘நில எடுப்பு கண்காணிப்புப் பிரிவு’ அமைக்கப்படும். வாகனப் போக்குவரத்தைக் கணக்கிட செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான 'தமிழ்நாடு நெடுஞ்சாலை பெருந்திட்டம் 2036' உருவாக்கப்பட்டு, தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைத் தொடக்கப் புள்ளிகளைக் குறிக்கச் சிறப்பு நினைவுத் தூண்கள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரியை இணைக்கும் வகையில் புதிய படகு போக்குவரத்து சேவையைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறிவித்துள்ளார். சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில் பல்வேறு புதிய உட்கட்டமைப்புத் திட்டங்களை அமைச்சர் அறிவித்தார். இதில் கடல்வழி உயர்மட்டச் சாலை மற்றும் படகுப் போக்குவரத்து உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.