PulseNews
வணிகம்

என்ரிகா நிறுவன மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை... ஒரே நாளில் நீக்கம்; அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு, சென்னை பூந்தமல்லி அருகே அமைந்துள்ள என்ரிகா என்டர்பிரைசஸ் நிறுவனம் மதுபானங்களை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் உரிமம் பெற்ற வளாகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய (FSSAI) அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, குறிப்பிட்ட சில மதுபானங்களில் செயற்கை சுவையூட்டும் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அன்று உதயநிதி; இன்று நயினார் நாகேந்திரன்... விஜய் குறித்த சர்ச்சைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் இதையடுத்து, அந்த தயாரிப்புகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், என்ரிகா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 11 மதுபான பிராண்டுகளை டாஸ்மாக் கிடங்குகளில் இருந்து சில்லறை விற்பனைக் கடைகளுக்கு மாற்றுவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்கள், டிப்போ மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும், எஃப்.எல்.2 மற்றும் எஃப்.எல்.3 உரிமம் பெற்றவர்களுக்கு அந்த மதுபானங்களை விற்பனை செய்வதையும் நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை, என்ரிகா நிறுவனத்தின் 11 பிராண்டுகளையும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக, நேற்று டாஸ்மாக் கடைகளில் என்ரிகா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மதுபானங்கள் விற்பனை செய்யப்படவில்லை. இந்த நிலையில், தடை விதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் என்ரிகா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை டாஸ்மாக் நிர்வாகம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. மீண்டும் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் மதுபானங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, பின்னர் அந்தத் தடை நீக்கப்பட்டிருப்பது தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் கே.சி பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டாஸ்மாக்கில் 24 மணிநேரத்தில் நடந்த "தடை" மாயம்! - பின்னணியில் ஊழலா? ​உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நடத்திய சோதனையில், டாஸ்மாக்கில் விற்பனையாகும் 'என்ரிகா என்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் 10 வகை பிராந்திகள் மற்றும் ஒரு ரம் என மொத்தம் 11 மதுபானங்களில் உடலுக்கு கேடு விளைவிக்கும் "செயற்கை சுவையூட்டிகள்" கலக்கப்படுவது அம்பலமானது. ​இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் நலன் கருதி இந்த 11 மதுபானங்களை விற்க டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாகத் தடை விதித்தது. ஆனால், ஆச்சரியம் என்னவென்றால்... வெறும் 24 மணி நேரத்திற்குள் அந்தத் தடை சத்தமில்லாமல் நீக்கப்பட்டுள்ளது. 1. ​ஒரே இரவில் அந்த மதுபானங்களின் தரம் எப்படி உயர்ந்தது? 2. ​மக்கள் உயிரோடு விளையாடும் இந்த விவகாரத்தில், அவசர அவசரமாகத் தடை நீக்கப்பட்டதன் பின்னணியில் இருப்பது பெருமளவு ஊழலா? 3. ​ஊழல் இல்லை என்றால், தடையை நீக்க வேண்டிய கட்டாயம் என்ன? ​மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை (Prohibition and Excise Department) மற்றும் தமிழக அரசு இந்த விவகாரத்தில் மௌனம் கலைத்து, பொதுமக்களுக்கு உடனடியாக பகிரங்க விளக்கம் அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் விக்னேஷ், ” 50 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகக் கூடிய உணவு சம்பந்தப்பட்ட துறைகளை மத்திய அரசு தான் கண்காணிக்கும், மாநில அரசு கண்காணிக்க முடியாது. தமிழ்நாடு அரசாங்கமும் இந்த மதுபான ஆலைகளுக்கு எவ்வளவு சதவிகிதம் ஆல்கஹால் கலக்க வேண்டும் என்று பரிந்துரை செய்வோம். எங்களுக்கு யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லை. காழ்புணர்ச்சியோடு எந்த ஒரு விஷயத்தையும் முன் எடுக்காமல் நடுநிலையோடு பார்க்க வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள்” என்றார்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
என்ரிகா நிறுவன மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை... ஒரே நாளில் நீக்கம்; அமைச்சர் விக்னேஷ் விளக்கம்
PulseNews சுருக்கம்

சென்னை பூந்தமல்லி அருகே செயல்படும் என்ரிகா என்டர்பிரைசஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்களை விநியோகம் செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் வளாகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், சில மதுபானங்களில் செயற்கை சுவையூட்டிகள் அதிகளவில் சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து விதிக்கப்பட்டிருந்த தடையை ஒரே நாளில் நீக்கியதற்கான காரணத்தை அமைச்சர் விக்னேஷ் விளக்கிக் கூறியுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business