“விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய நிதி இல்லையா? மனம் இல்லையா?” - கே.வி. இளங்கீரன் கேள்வி!
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவதற்கும், உதவியாளர்களை நியமித்து அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும் நிதி இருக்கும் நிலையில், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மட்டும் தமிழக அரசிடம் நிதி இல்லையா, மனம் இல்லையா என காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி. இளங்கீரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘தமிழகத்தில் 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வாங்குவதற்கு நிதி ஒதுக்க முடிகிறது. ஆனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைக்கும் போதெல்லாம், தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாகக் கூறி வருகிறது. முதல்வரின் பேச்சிலேயே கூற வேண்டுமென்றால், ‘ஊரார் வீட்டு நெய்யில் உங்களுக்கு ஸ்வீட்டா?’ என்று கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளில் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவில்லை. விவசாயம் செய்வதற்கும் போதிய தண்ணீர் இல்லை. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் சுமார் 10 கிலோ மீட்டர் இடைவெளிக்கு ஒரு தடுப்பணை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆண்டுக்கு குறைந்தது 20 தடுப்பணைகள் கட்டப்பட்டால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதன் மூலம் விவசாயம் மட்டுமின்றி மீன்பிடித் தொழிலும் வளர்ச்சி அடையும். லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ‘மாற்றம், மாற்றம்’ என்று கூறி ஆட்சிக்கு வந்த தமிழக அரசு, தற்போது செய்து வருவது இதுதானா? இது மாற்றம் அல்ல; மக்களுக்கு ஏமாற்றமே. எனவே, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகள் அமைத்து நீர்வளத்தை பாதுகாக்கவும், விவசாயிகள் மற்றும் மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்கவும், அவர்களின் உதவியாளர்களுக்குச் சம்பளம் வழங்கவும் நிதி இருக்கும்போது, விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய மட்டும் தமிழக அரசிடம் நிதி இல்லையா அல்லது மனம் இல்லையா என்று காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி. இளங்கீரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யும் அரசு, விவசாயிகளின் கடன் விவகாரத்தில் பாராமுகமாக இருப்பதாக அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.