ஓணம் பண்டிகை 2026: கேரளாவுக்கு 112 சிறப்பு ரயில்கள் இயக்கம்; இந்திய ரயில்வே அறிவிப்பு
வரவிருக்கும் ஓணம் பண்டிகையையொட்டி ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக, கேரளாவுக்கு 112 சிறப்பு ரயில் சேவைகளை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ஓணம் பண்டிகை கேரளாவின் மிக முக்கியமான பண்பாட்டு மற்றும் அறுவடைத் திருவிழாவாகும். இக்காலத்தில் வெளிமாநிலங்களில் வசிக்கும் மலையாளிகள், பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் நாட்டின் பல்வேறு முன்னணி நகரங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்த பருவகாலப் பயண நெரிசலைக் குறைக்கவும் பயணிகள் சிரமமின்றிப் பயணம் செய்வதை உறுதி செய்யவும், தெற்கு ரயில்வே மண்டலமானது தென் மத்திய ரயில்வே, தென் மேற்கு ரயில்வே மற்றும் தென் கிழக்கு ரயில்வே ஆகிய அண்டை ரயில்வே மண்டலங்களுடன் இணைந்து இந்த சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளதுடன், ஏற்கனவே இயங்கி வரும் சில சிறப்பு ரயில்களின் சேவையையும் நீட்டித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.என். நாராயண் இது குறித்துக் கூறுகையில், அறிவிக்கப்பட்டுள்ள ஓணம் சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 6 வரையிலான பண்டிகையின் உச்சகட்டக் காலத்தில் முக்கியமாக இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 2025-ஆம் ஆண்டில் ஓணம் பண்டிகையின் போது 55 சிறப்பு ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப் பட்ட நிலையில், 2026-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 112 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறப்பு ரயில்களின் சேவை எண்ணிக்கை சுமார் 103 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த 112 சிறப்பு ரயில் சேவைகளில், 38 சேவைகள் தெற்கு ரயில்வேயின் உள்மண்டலச் சேவைகளாகவும், 16 சேவைகள் பிற மண்டலங்களை இணைக்கும் சேவைகளாகவும், 58 சேவைகள் பிற ரயில்வே மண்டலங்களால் தெற்கு ரயில்வே பகுதிக்குள்ளோ அல்லது தெற்கு ரயில்வே வழியாாகவோ இயக்கப்படும் சேவைகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். இந்த சிறப்பு ரயில்கள் நாட்டின் முக்கிய நகரங்களையும் சிறு நகரங்களையும் கேரளாவின் பிரதான இடங்களுடன் இணைக்கின்றன. தமிழ்நாட்டில் சென்னை, தாம்பரம், சென்னை எழும்பூர் மற்றும் மங்களூரு சென்ட்ரல் ஆகிய இடங்களில் இருந்து கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் போன்ற நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அரக்கோணம், ஜோலார்பேட்டை, ஈரோடு, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் மற்றும் மதுரை உள்ளிட்ட பல முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கர்நாடகப் பகுதியில் பெங்களூரு, மைசூர் மற்றும் ஹூப்பள்ளியில் இருந்து திருவனந்தபுரம், கண்ணூர், கோட்டயம் மற்றும் கொல்லம் ஆகிய கேரள நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இவை கிருஷ்ணராஜபுரம், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, பாலக்காடு, ஷொரனூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசப் பகுதிகளில் இருந்து ஹைதராபாத் மற்றும் செர்லப்பள்ளியில் இருந்து கொல்லம் மற்றும் மங்களூரு சென்ட்ரல் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை குண்டூர், தெனாலி, குடூர், ரேணிகுண்டா, சித்தூர், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை போன்ற முக்கிய நிலையங்கள் வழியாகச் செல்லும். அதேபோல, மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்தியாவில் இருந்து சந்த்ராகாச்சி - திருவனந்தபுரம் / எர்ணாகுளம் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு கேரளாவை இணைக்கின்றன. இந்த ரயில்கள் விசாகப்பட்டினம், விஜயவாடா, குடூர், ரேணிகுண்டா, ஈரோடு மற்றும் கோட்டயம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்கள் வழியாகச் செல்லும். பண்டிகைக் காலத்தில் பயணிகள் அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பாகவும் வசதியாகவும் சென்று வர இந்த விரிவான சிறப்பு ரயில் ஏற்பாடுகள் உதவிகரமாக இருக்கும்.

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் நெரிசலைக் குறைக்கவும், சிரமமின்றி பயணம் செய்வதை உறுதி செய்யவும் கேரளாவுக்கு 112 சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு 55 ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரயில்களின் எண்ணிக்கை 103 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 6 வரை இயக்கப்பட உள்ளன.
தெற்கு ரயில்வே, பிற ரயில்வே மண்டலங்களுடன் இணைந்து இந்த சேவைகளை வழங்குகிறது. இதன்படி சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் உள்ளிட்ட கேரளாவின் முக்கிய நகரங்களுக்கு இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த விரிவான ஏற்பாடுகள் மூலம் பண்டிகைக் காலத்தில் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணம் செய்ய முடியும்.