டாஸ்மாக்கில் 10 ரூபாய் விவகாரம் : சட்டப்பேரவையில் காரசார விவாதம்!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் சூழலில், துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதங்கள் நடைபெற்று, பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் வேளாண்மைத் துறை ஆகிய துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, இன்று (31.08.2026) சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. இதில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் பேசுகையில் “டாஸ்மாக்கில் என்ன பண்ணீங்க? இன்னும் அஞ்சு ரூபாய் சேர்த்து வாங்கச் சொன்னீங்கன்னு தொழிலாளர் சொல்கிறார்கள். என்னன்னா, நாங்கள் அஞ்சு ரூபாய்தான் வாங்கிட்டு இருந்தோம். எங்களுடைய அதிகாரிகள், ‘நீ சேர்த்து வாங்கு’ அப்படியென்று சொன்னார்கள். நான் எந்த ஒரு அமைச்சர் பேரையும் சொல்ல வேண்டியதில்லை. எனக்கு இந்தத் துறையை வளர்க்கவேண்டும். இந்தத் துறையை ஒரு ரீஃபார்ம் பண்ணவேண்டும். மற்ற மாநிலங்களில் இருக்கிற மாதிரி இந்தத் துறையைக் கொண்டு வரணும்கிறதுதான் என்னுடைய எண்ணமே தவிர, இதில் ஊழலைப் பற்றி பேசுகிறதோ, இதில் குறைகளைச் சொல்கிறதோ இல்லை. என்னிடம் ஆதாரப்பூர்வமாகத் தகவல்கள் இருக்கிறது. அதனால் மக்களுக்கு என்ன பயனென்று எனக்குத் தெரியவில்லை. அது சட்டப்படி எங்களுடைய சட்டத்துறை அமைச்சர் அதற்கான முடிவுகளைச் சொல்லுவார். இந்த 10 ரூபாய் விஷயத்தில் முழுக்க முழுக்க 10 ரூபாய் வாங்கச் சொன்னது திமுகதான்” எனத் தெரிவித்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திமுகவின் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், “இந்தத் துறையினுடைய அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அவர் நீண்ட விளக்கத்தைக் கொடுத்துள்ளார். நீங்கள் எப்படி எங்களைப் பார்த்து, ‘10 ரூபாய், 10 ரூபாய்... பாட்டில் வாங்கினார்கள் என்று கூற முடியும் , அந்த 10 ரூபாய்க்கெல்லாம் செலவு’ன்னு அமைச்சரே சபையில் பதிவு பண்ணிருக்கிறீர்கள். எனவே 10 ரூபாய் நாங்கள் வாங்கவில்லை. அங்கு வேலை செய்தவர்கள் வாங்கி இருக்கிறார்கள். அப்புறம் எப்படி எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லுவீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் விக்னேஷ் பதிலளிக்கையில், கே.என். நேரு என்ன சொல்ல வராருன்னா, அந்த செலவுக்காகத்தான் அவர்கள் வாங்குனாங்களே தவிர, நாங்கள் வாங்கச் சொல்லவில்லை; அதை எங்களுக்குக் கொடுக்கவில்லை அப்படியென்று சொல்ல வராரு. இன்றொன்று சொல்லவேண்டும். ஒரு விஷயம் உங்களுக்கு (திமுக) சொல்லட்டுமா? அஞ்சு ரூபாய் வாங்கிட்டு இருக்கும்போது, அதை பத்து ரூபாயாக வாங்கச் சொன்னதே அந்தத் துறை சார்ந்த நிர்வாகிகளும், துறை சார்ந்த அமைச்சரும் தான் என்று சொல்கிறார்கள். இதனைத் தொழிலாளர் கிட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து கே.என். நேரு கூறுகையில், “நாங்கள் எந்த ஊழலும் பண்ணவில்லை. அமைச்சராக இருந்தவரோ, ஊழல் செய்யவில்லை... அங்க சம்பளம் குறைஞ்சதுனால அவர்கள் வாங்கிக்கிட்டாங்கன்னு அமைச்சர்தான் சொன்னார். அப்புறம் எப்படி எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலன், மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் வேளாண்மைத் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றன. கடந்த ஒரு மாதமாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கூட்டத்தொடரில், பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
இந்த விவாதத்தின்போது மதுவிலக்குத் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் விக்னேஷ் பேசினார். அப்போது டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படும் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.