PulseNews
வணிகம்

கனிமங்கள் திருத்த மசோதாவால் தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி இழப்பா...? துரை வைகோ முன்வைக்கும் அதிர்ச்சித் தகவல்கள்...!

கனிமங்கள் திருத்த மசோதா நடைமுறைக்கு வந்தால், தமிழக அரசுக்கு கிடைத்து வரும் முக்கியமான வருவாய் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று மக்களவை உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,"தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சனை இன்று காலை நேரில் சந்தித்தேன். அப்போது, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026-ல் இடம்பெற்றுள்ள மாநிலங்களின் அதிகாரம் மற்றும் நிதி ஆதாரங்களை பாதிக்கக்கூடிய அம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தேன்.இந்த மசோதா கடந்த 12-ந்தேதி மக்களவையிலும், 13-ந்தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி, அதன் ஒவ்வொரு அம்சத்தையும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், மாநில அரசுகளுடன் உரிய ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்து நான் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினோம். மேலும், மாநில அரசுகளின் வரி விதிக்கும் அதிகாரத்தை உறுதி செய்யும் வகையில், மசோதாவில் இடம்பெற்றுள்ள 9டி பிரிவை நீக்க வேண்டும் என்ற திருத்த முன்மொழிவையும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தனிப்பட்ட முறையில் சமர்ப்பித்திருந்தேன்.ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாமல், விரிவான விவாதத்திற்கு வாய்ப்பின்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. புதியதாக சேர்க்கப்பட்டுள்ள 9டி பிரிவு, கனிம வளங்கள் மீதான உரிமை மற்றும் கனிமங்கள் அடங்கிய நிலங்கள் மீது மாநில அரசுகள் வரி விதிப்பதற்கு கட்டுப்பாடுகளை உருவாக்குகிறது.ஏற்கனவே மாநில அரசுகளால் விதிக்கப்பட்டு, இதுவரை வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ள மிகப்பெரிய அளவிலான வருவாயையும் இனிமேல் பெற முடியாத சூழல் உருவாகும். இதன் காரணமாக மாநிலங்களின் முக்கிய நிதி ஆதாரங்கள் சுருங்குவதுடன், மாநிலங்களின் நிதிசார் தன்னாட்சிக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்.கனிமங்கள் அடங்கிய நிலங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது என்பதை ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கடந்த 2024-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையிலேயே தமிழக அரசு, தமிழ்நாடு கனிம வளம் கொண்ட நிலங்கள் மீதான வரி சட்டம், 2024 மற்றும் தமிழ்நாடு கனிம வளம் கொண்ட நில வரி விதிகள், 2025 ஆகியவற்றை இயற்றியது. கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி முதல் இந்த வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.2025-26-ம் ஆண்டில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை வாயிலாக தமிழக அரசுக்கு ரூ.4,395.68 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் ரூ.2,265 கோடி கனிம வளம் கொண்ட நிலங்களுக்கான வரி மூலம் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.எனவே, புதிய சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால் தமிழக அரசின் இந்த முக்கியமான வருவாய் ஆதாரம் பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலை உருவாகும்.இந்த விவகாரம் வெறும் வருவாய் இழப்பை மட்டுமே சார்ந்தது அல்ல. மாநிலங்களின் அதிகாரம், நிதிசார் தன்னாட்சி மற்றும் இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாப்பது தொடர்பான முக்கியமான பிரச்சினையாகும். இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சனிடம் எடுத்துரைத்துள்ளேன். தமிழகத்தின் நிதி உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசிடம் வலுவான முறையில் வலியுறுத்த வேண்டும் என்றும், தேவையான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். எனது கோரிக்கைகளை கவனமாக கேட்டறிந்த நிதி அமைச்சர், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார்.இவ்வாறு துரை வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Seithipunal14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கனிமங்கள் திருத்த மசோதாவால் தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி இழப்பா...? துரை வைகோ முன்வைக்கும் அதிர்ச்சித் தகவல்கள்...!
PulseNews சுருக்கம்

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா நடைமுறைக்கு வந்தால், தமிழக அரசுக்குக் கிடைக்கும் முக்கிய வருவாய் ஆதாரங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று மக்களவை உறுப்பினர் துரை வைகோ எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சனை நேரில் சந்தித்துப் பேசிய அவர், இந்தத் திருத்த மசோதாவில் மாநிலங்களின் அதிகாரம் மற்றும் நிதி ஆதாரங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தமிழகத்திற்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் அதிர்ச்சித் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#business